Type Here to Get Search Results !

பாலியல் தொந்தரவுகள் - நடிகை பத்மபிரியா அதிரடி



பிரபல நடிகை பத்மபிரியா எப்போதும் மனந்திறந்து பேசக்கூடியவர். தனது மனதுக்கு சரி என்று தெரிவதை துணிச்சலாக வெளிப்படுத்துவார். அவரது கருத்துக்கள் எப்போதுமே ஆணித்தரமாக இருக்கும். இப்போது நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகள் பற்றி அதிரடியாக சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

மலையாள திரை உலகம் பாலியல் பிரச்சினைகளால் புகைந்து கொண்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இது ஒரு துரதிருஷ்டம். அந்த நடிகரையும், நடிகையையும் எனக்கு தெரியும். அப்படி ஒரு சூழ்நிலையை கடந்துபோன நடிகைகளின் மனக்கஷ்டங்களை நினைத்துப்பார்த்திருக் கிறீர்களா? நடிக்கச் செல்லும் நாங்கள் அடுத்தவர்களை நம்பித்தான் ஒரு மாதம் வரை (ஷூட்டிங் நடைபெறும்) வேறு இடங்களில், பெரும்பாலும் தனியாக வசிக்கிறோம்.

குற்றம்சாட்டப்பட்ட நடிகரையும் நினைத்துப்பார்க்கிறேன். இது உருவாக்கப்பட்ட ஒரு கதையா என்று யாருக்குத்தெரியும். என்னவென்றாலும் இந்த சம்பவத்தால் பல விஷயங்கள் வெளியே வந்திருக்கின்றன.

இது போன்று நிறைய சம்பவங்கள் நடந்திருக்குமோ?

இது போன்ற மோசமான அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். அவை எல்லாமே மானபங்க செயலாக இருக்கவேண்டும் என்பதில்லை. படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஒருவர் எதுவும் அறியாதவர்போல் நடிகையின் தோளை வருடிக்கொண்டு செல்வதும்- ஒரு மோசமான வார்த்தையை உதிர்த்துவிட்டு போவதும்- ஒரு அசிங்கமான மெசேஜ் அனுப்புவதும் பாலியல் தொந்தரவு தானே! சம்பளம் கிடைக்கவில்லை என்று சொல்வதைக்கூட குற்றமாக கருதும் துறை இது.

ஒரு சினிமாவில் முக்கிய கதாபாத்திரம் கிடைக்கவேண்டும் என்றால் டைரக்டருடனோ, நடிகருடனோ, தயாரிப்பாளருடனோ படுக்கையை பங்கிட வேண்டும் என்றால், அதை யாரால்தான் ஏற்றுக்கொள்ள முடியும். படுக்கைக்கும் தயாரில்லாமல், ஸ்கிரிப்டையும் முதலிலே கேட்டால் அவருக்கு சினிமாவாய்ப்பில்லாமல் போகும். மோசமான நடிகைகள் படுக்கையை பங்கிட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். அப்படியானால், அந்த நடிகையோடு இணைந்தவர் அதைவிட மோசம் என்று சொல்லலாமே? புதிய நடிகைகளுக்கு மட்டும்தான் பாலியல் பிரச்சினை என்று நினைக்காதீர்கள். பெயரும், புகழும் கொண்டவர்களுக்குத்தான் கூடுதல் அழுத்தம் கொடுக்கிறார்கள். ஏன்என்றால் அவர்கள் சினிமாவில் இருந்தே ஆகவேண்டும் என்று நினைப்பார்கள். நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அப்படி படுக்கையை பங்கிட்டவர், சினிமாவில் வெற்றியடைந்துவிடுவார் என்று உறுதியாக சொல்ல முடியுமா? சினிமாவில் எல்லா காலமும் இது நடந்துகொண்டிருக்கிறது என்று ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் புதிய தலைமுறை இதற்கு ஒத்துக்கொள்ளாது.

உங்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறதா?

இல்லை. அத்தகைய அனுபவங்களை நான் தவிர்த்ததால், ஒதுக்கப்பட்டிருக்கிறேன். நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால்தான் நான் நடிக்க ஒத்துக்கொள்வேன் என்பது அவர்களுக்குத் தெரியும். நடிப்பை தவிர வேறு எதுவும் என்னிடமிருந்து அவர் களுக்கு கிடைக்காது என்பதும் அவர் களுக்கு தெரியும். அதனால் என்னை வேண்டாம் என்று ஒதுக்கிவிடுவார்கள்.

இவ்வளவு தைரியமாக உங்களைப்போல் உண்மையை சொல்ல மற்ற நடிகைகளால் முடியுமா?

நான் ஒரு ராணுவ குடும்பத்தில் வளர்ந்தவள். மில்டரி ஏரியா ஒரு தனி உலகம். அங்கு நாம் எப்படி நடந்தாலும் உற்றுப்பார்க்க மாட்டார்கள். பிகினி உடையில் நீச்சல் அடிக்கலாம். குட்டைப்பாவாடையில் டென்னிஸ் விளையாடலாம். என் பெற்றோரும் எனக்கு முழு சுதந்திரம் தந்திருந்தார்கள். என்னை எதிலும் கட்டுப்படுத்த அவர்கள் விரும்பியதில்லை. ஆனால் வெளிஉலகம் வந்த பின்பு, சிலருக்கு உள்ளே இருப்பதுதான் வெளியே வருகிறது. அதனால் ரொம்ப கவனமாக இருக்கிறேன்.

ஆண்களை தூரத்தில் வைத்திருப்பது நல்லது என்று நினைக்கிறீர்களா?

ஒருவர் என்னிடம், நீங்கள் லெஸ்பியனா? என்று கேட்டார். ‘இல்லை. நீங்கள் இப்படி கேட்க என்ன காரணம்?’ என்று அவரிடம் கேட்டேன். ‘ஒரு பெண் என்ற நிலையில் உங்களிடம் இருந்து ஆண்களுக்கு எந்த ‘பீட் பேக்’கும் வருவதில்லை’ என்றார். இதில் என்ன ஆச்சரியம். எனக்கு விருப்பம் இல்லாவிட்டால் நான் எப்படி ‘பீட் பேக்’ கொடுக்க முடியும். அதை வைத்து எப்படி என் பாலின விருப்பத்தை தீர்மானிக்கமுடியும்?

நான் சிறுமியாக இருந்தபோது ஐதராபாத்தில் வசித்தேன். நான் டியூஷனுக்கு போய்க்கொண்டிருந்தபோது என்னிடம் ஒருவர் வழி கேட்டார். நான் வழி சொல்லிக்கொண்டிருந்தபோது அவர் என் முன்பக்கத்தை அழுத்திவிட்டு ஓடிவிட்டார். அப்போது எனக்கு 12 வயது. எதற்காக அவர் அங்கே தொட்டார் என்பதுகூட எனக்கு தெரியாத பருவம் அது.

ஷூட்டிங்கில் உள்ளாடை எதுவும் இல்லாத பிரா போன்ற ஆடையை அணிய சொன்னால் என்னால் அணிய முடியுமா? இது என் உடல். அதற்குரிய மரியாதை கிடைத்தாகவேண்டும். அத்தகைய காட்சிகளை எடுக்கவேண்டும் என்பதற்காக முதலிலே ஸ்கிரிப்டை காட்டமாட்டார்கள். எல்லா படப்பிடிப்பு தளங்களிலும் ஒரு சில பெண்களே இருப்பார்கள். அதுதான் கஷ்டம். சில விஷயங்களை சொல்ல நமக்கு பெண்கள் வேண்டும். உதாரணத்திற்கு மாதவிலக்கு ஏற்பட்டிருந்தால் அங்கு ஒரு பெண் இருந்தால்தானே அவளிடம் நான் சொல்ல முடியும். என்னைவிட இரட்டிப்பு வயது கொண்ட மம்முட்டியிடமோ, மோகன்லாலிடமோ அதை சொல்ல முடியுமா?

திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் சினிமாவில் இருந்து விலகிவிடுகிறார்களே?

‘திருமணம் நடந்துவிட்டதல்லவா இனி நடிப்பீர்களா?’ என்று கேட்கப்படும் கேள்வியே எனக்கு பிடிக்காது. இந்த கேள்வி வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த நடிகைக்கு இனி நம்மிடம் மற்றவர்களுக்கு அட்ரக்‌ஷன் இல்லாமல் போய்விடுமோ என்ற பயத்தை உருவாக்கும். திருமணம் என்பது எனது தனிப்பட்ட விஷயம். எனது குடும்ப வாழ்க்கையை நான் படப்பிடிப்பு தளத்திற்கு கொண்டு வருவதில்லை. சினிமா எனக்கு சாதாரண விஷயமல்ல. வாழ்க்கை முழுவதும் நான் நடிகையாக இருப்பேன்!

சினிமாவை அளவுக்கு அதிகமாக நேசிப்பதால்தான் இவ்வளவு துணிச்சல் பத்மபிரியாவிடம் காணப்படுகிறது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad