Type Here to Get Search Results !

எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் திமுக கூட்டணி கவர்னரிடம் மனு: சட்டப்பேரவையை கூட்டும் அறிவிப்பு இல்லாததால் பரபரப்பு



சென்னை: தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி அரசை மெஜாரிட்டி நிரூபிக்கச் சொல்லி கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று தமிழக கவர்னர்  வித்யாசாகர் ராவை சந்தித்து திமுக கூட்டணி கட்சியினர் மனு அளித்தனர். மனுவை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூட்டணி கட்சி  தலைவர்களிடம் கவர்னர் உறுதியளித்துள்ளார். அதே சமயம் சட்டப்பேரவையை எந்த நாளில் எப்போது கூட்டப்படும் என்ற அறிவிப்போ உறுதியோ  தெரிவிக்காததால் பரபரப்பு நிலவுகிறது.ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. ஒரு பக்கம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் நீக்கம், மறுபக்கம் அதிமுக  எம்எல்ஏக்கள் பழனிசாமி தரப்பில் இருந்து தினகரன் தரப்புக்கு தாவும் செயல்கள் என பரபரப்பு எட்டி உள்ளது.




இந்நிலையில கடந்த சில நாட்களுக்கு முன்பு தினகரன் தரப்பை சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் கவர்னரை சந்தித்து எடப்பாடி அரசுக்கு அளித்து வரும்  ஆதரவை வாபஸ் பெறுவதற்காக மனு அளித்தனர். இந்நிலையில் விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி,  திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ போஸ் ஆகியோரும் அடுத்தடுத்து தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் டிடிவி முகாமில் 23 எம்.எல்.ஏக்கள்  இருப்பதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் கூடும் என்று தினகரன் பகிரங்கமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, கடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பழனிசாமி அரசுக்கு 122 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது. தற்போதைய சூழலில் பலர் தினகரன்  அணிக்கு தாவியதால் பழனிசாமிக்கு வெறும் 113 எம்.எல்.ஏ ஆதரவு மட்டுமே உள்ளது.

எனவே, அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதால், அதை கலைக்க வேண்டும் அல்லது சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்  என்று ஏற்கனவே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  கவர்னருக்கு அவசர கடிதம் அனுப்பியிருந்தார்.  இதையடுத்து இப்போதுள்ள பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு நேற்று  காலை 10.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சட்டமன்ற திமுக எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தலைமையில்  எம்.பிக்கள் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, திமுக கொறடா சக்கரபாணி, எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், வி.ஜி.ராஜேந்திரன், காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி,  இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ அபுபக்கர் ஆகியோர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேற்று காலை 10.15 மணிக்கு சென்றனர்.  ஆளுநரிடம் தங்களின் கோரிக்கைகளை வைத்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக சந்திப்பு நடைபெற்றது.

ஆளுநரை சந்தித்த பின்னர் துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழந்து மைனாரிட்டி அரசாக உருவாகியுள்ளது. மைனாரிட்டி அரசு ஆட்சி செய்ய அரசியல் சட்டத்தில் இடம் இல்லை.  எனவே, இது குறித்து விளக்கமான கடிதத்தை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுதி கொடுத்தார். இதை கவர்னரிடம் கொடுக்குமாறு பணித்தார். எனவே  இந்த கடிதத்தைகவர்னரிடம் கொடுத்து வலியுறுத்தினோம். மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 234 எம்.எல்.ஏக்களில் தற்போது ஜெயலலிதா இல்லை. எனவே 233  எம்.எல்.ஏக்களில் திமுக 89, காங்கிரஸ் 8, முஸ்லீம் லீக் 1 மற்றும் டிடிவி தினகரன் கையில் 22 எம்.எல்.ஏக்களும் இருக்கின்றனர். மேலும் ஒருவர்  வருவதாகவும் கூறுகின்றனர்.

ஆகையால் தற்போது 120 எம்எல்ஏக்கள் போனால், 113 பேர் தான் எடப்பாடி வசம் இருக்கின்றனர். எனவே எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க  சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என கேட்டுள்ளோம். கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடியை கவர்னர் தான் முதல்வராக நியமித்தார். அவரை  நியமிக்கும்போதே 15 நாட்களுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்றும் கூறினார்.  அப்போது ஓ.பி.எஸ் பக்கம் 9 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருந்தனர். எனவே, 113 எம்.எல்.ஏக்களை மட்டும் வைத்துள்ள எடப்பாடி எப்படி ஆட்சி நடத்த   முடியும் என்றோம். நான் எல்லாவற்றையும் அறிவேன். ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

எனவே, கவர்னர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்று பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கவர்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் குடியரசுத்  தலைவரை பார்த்து முறையிடுவதை தவிர வேறு வழியில்லை என்றார்.  காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கூறுகையில், ‘‘19 எம்எல்ஏக்கள்  எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி கவர்னரிடம் மனு கொடுத்துள்ளனர். இது தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. எடப்பாடி  அரசோ மெஜாரிட்டியை இழந்துகொண்டே போகிறது. ஆளுநர் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டால் குதிரை பேரம் நடைபெறும். சட்டரீதியான  கோரிக்கைகளையும், சட்ட கூறுகளையும் எடுத்து கூறியிருக்கிறோம். அதன்படி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்’’ என்றார். எனினும் சந்திப்புக்கு பிறகும் சட்டசபை எப்போது கூட்டப்படும் என்ற அறிவிப்பு எதுவும் வராததால் பரபரப்பு நிலவுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad