இந்தியாஉச்சநீதிமன்றத்தின் 45வது புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதிவியேற்பு



புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதிவியேற்று கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மிஸ்ராவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தீபக் மிஸ்ரா (வயது 63) உச்சநீதிமன்றத்தின் 45வது தலைமை நீதிபதி ஆகும். டெல்லியில் நடைபெற்ற இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.



டெல்லி உள்ளிட்ட பல மாநில உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியவர் தீபக் மிஸ்ரா. ஆதார், ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, கர்ணன் விவகாரம் உள்ளிட்ட வழக்குகளின் அமர்வில் இருந்தவர் தீபக் மிஸ்ரா. அடுத்த 13 மாதங்களுக்கு தீபக் மிஸ்ரா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் ஓய்வு பெறுவதை அடுத்து புதிய தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிட்டது. இவர் அடுத்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வரை 13 மாதங்கள் பதவி வகிப்பார்.

புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள தீபக் மிஸ்ரா, 1953ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி பிறந்தவர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். 1977ம் ஆண்டு, பிப்ரவரி 14ம் தேதி தன்னை ஒரு வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். அரசியல் சாசனம், சிவில், கிரிமினல், வருவாய், பணிகள், விற்பனை வரி என பல துறை வழக்குகளிலும் ஒடிசா நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டுள்ளார்.

1996ம் ஆண்டு, ஜனவரி 17ம் தேதி ஒடிசா  நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு, மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார். 1997ம் ஆண்டு, டிசம்பர் 19ம் தேதி நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2009ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 23ம் தேதி பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆனார். 2010ம் ஆண்டு, மே மாதம் 24ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். 2011ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 10ம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இப்போது கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url