தொழில்முறை குத்துச்சண்டையில் மேவெதர் உலக சாதனை: தோல்வியின்றி 50வது பட்டம் வென்றார்




லாஸ்வேகாஸ்: தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டிகளில் தோல்வியே இன்றி, 50 போட்டிகளில் வென்று அமெரிக்க வீரர் பிளாயிட் மேவெதர் புதிய உலக சாதனை படைத்தார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் பிளாயிட் மேவெதர், தொழில்முறை குத்துச்சண்டையில் அசைக்க முடியாத வீரராக திகழ்பவர். 49 போட்டியில் ஒரு தோல்வி கூட இல்லாமல் வெற்றியை மட்டுமே பெற்று வந்த இவர் கடந்த 2015ல் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2 ஆண்டுக்கு பிறகு மீண்டும் குத்துச்சண்டையில் களமிறங்குவதாக அறிவித்த மேவெதர்- அயர்லாந்தின் கனோர் மெக்ரிகோருடன் மோதுவதாக முடிவு தெரிவித்தார்.




எனவே இப்போட்டி, குத்துச்சண்டை வரலாற்றில் மிகப்பெரும் போட்டிகளில் ஒன்றாக கருதப்பட்டது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள், போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்தனர். போட்டியைக் காண முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன் உள்ளிட அமெரிக்க பிரபலங்கள் பலரும் நேரில் அரங்கிற்கு வந்திருந்தனர். 40 வயதான மேவெதர், போட்டியின் முதல் 3 சுற்றில் தடுமாற ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும், 4வது சுற்றிலிருந்து ஆவேசமடைந்த அவர், 10வது சுற்றில் டெக்னிக்கல் நாக் அவுட் முறையில் மெக்ரிகோரை வீழ்த்தினார்.

இதன் மூலம், தொடர்ச்சியாக 50வது சாம்பியன் பட்டம் வென்று புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன், அமெரிக்காவின் ராக்கி மார்சியானோ தோல்வியின்றி 49 வெற்றிகளை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. அதை முறியடித்த மேவெதர், இப்போட்டியே தனது குத்துச்சண்டை வாழ்நாளின் கடைசி போட்டியாக அறிவித்து ஓய்வு பெற்றார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url