பைனலுக்கு முன்னேறப் போவது யார்? இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை





டெர்பி:



ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 2வது அரை இறுதியில், இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதுகின்றன.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்த தொடர் பரபரப்பான இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. மொத்தம் 8 அணிகள் லீக் சுற்றில் மோதியதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பரிதாபமாக வெளியேறின. இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா இடையே நடந்த விறுவிறுப்பான முதல் அரை இறுதியில், இங்கிலாந்து அணி கடைசி ஓவரில் வெற்றியை வசப்படுத்தி பைனலுக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில், டெர்பி கவுன்டி மைதானத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கும் 2வது அரை இறுதியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த போட்டியில் தொடக்க வீராங்கனை பூனம் ராவுத் 106 ரன், கேப்டன் மித்தாலி 69 ரன் விளாசிய நிலையில், மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் குவிக்கத் தவறியதால் சவாலான இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை.
ஆஸி. அணி கேப்டன் மெக் லான்னிங் 76 ரன், எலிஸ் பெர்ரி 60 ரன் விளாசி ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினர். அந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. இரு அணிகளும் மோதியுள்ள 42 ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 34-8 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இப்படி புள்ளி விவரங்கள் 6 முறை உலக சாம்பியனான ஆஸி. அணிக்கு சாதகமாக இருந்தாலும், மித்தாலி & கோ 2வது முறையாக பைனலுக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்குகிறது.

சிறப்பான பார்மில் உள்ள மித்தாலி 7 லீக் ஆட்டத்தில் 356 ரன் குவித்து (1 சதம், 3 அரை சதம், சராசரி 50.85) நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். பூனம் ராவுத் 281 ரன், ஸ்மிருதி மந்தனா 226 ரன் விளாசி இருந்தாலும், தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுகின்றனர். குறிப்பாக, மந்தனா தொடர்ந்து சொற்ப ரன்னில் ஆட்டமிழப்பது, அடுத்து வரும் வீராங்கனைகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திவிடுகிறது. மந்தனா, வேதா, ஹர்மான்பிரீத் ஆகியோர் கணிசமாக ரன் குவித்தால் ஆஸி.க்கு சவால் விடுக்கலாம்.

ஜுலன், ஷிகா, தீப்தி, ராஜேஸ்வரி, பூனம் யாதவ் பந்துவீச்சில் நம்பிக்கை அளிக்கின்றனர். டெர்பி கவுன்டி மைதானம் இந்திய அணிக்கு மிக ராசியானதாக இருந்து வருகிறது. இங்கு விளையாடிய 4 லீக் ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால், ஆஸி.க்கு எதிரான அரை இறுதியில் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. அதே சமயம் போல்டன், மூனி, மெக் லான்னிங் உள்ளிட்ட முன்வரிசை வீராங்கனைகளை விரைவாக வெளியேற்றினால் மட்டுமே இந்தியா வெற்றியை வசப்படுத்தலாம். இரு அணிகளுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற வரிந்துகட்டுவதால், இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url