சாஸ்திரியுடன் இணைந்து செயல்படுவதில் எந்த நெருக்கடியும் இல்லை...
மும்பை: தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் இணைந்து செயல்படுவதில் எந்தவித கூடுதல் நெருக்கடியும் இல்லை என்று கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார். கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் நேற்று மும்பையில் இருந்து இலங்கை சென்றனர். அதற்கு முன்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் கோஹ்லி கூறியதாவது: தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எங்களுக்கு புதியவர் அல்ல. நாங்கள் ஏற்கனவே மூன்று ஆண்டுகள் இணைந்து பணியாற்றி உள்ளோம்.
எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. பயிற்சியாளர் நியமனம் குறித்து பல்வேறு தகவல்கள் வதந்திகள் வெளியாகின. அவை எனது கட்டுப்பாட்டில் இல்லை. என்னை பொறுத்தவரை அணியை சிறப்பான முறையில் வழி நடத்த வேண்டும். அணி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வீரர்கள் களத்தில் நூறு சதவீத திறமையை வெளிப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். சாஸ்திரியுடன் இணைந்து செயல்படுவதில் எனக்கு எந்தவித கூடுதல் நெருக்கடியும் இல்லை. இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவோம். இவ்வாறு கோஹ்லி கூறியுள்ளார். இந்தியா - இலங்கை மோதும் முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் வரும் 26ம் தேதி தொடங்குகிறது.