சென்னை நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி குடியரசுத் தலைவருக்கு ரத்தக் கடிதம் அனுப்ப மருத்துவ மாணவர்கள் முடிவு
சென்னை: மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசு பிறப்பித்த ஆணை செல்லாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவருக்கு பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்கள் ரத்தக் கடிதம் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து ரத்தக் கடிதத்தில் அரசியல் தலைவர்களின் கையெழுத்தை பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்குமாறு மருத்துவ மாணவர்கள் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தங்களது ரத்தகடிதத்தில் ஸ்டாலினிடம் கையெழுத்து பெற்றுள்ளனர். இந்த கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மாணவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நீட் தேர்வால் கிராமபுற மாணவர்களின் மருத்துவ படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.