சிறையில் சசிகலாவின் சொகுசு வாழ்க்கையை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபா அதிரடி மாற்றம்






பெங்களூரு:


பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவின் சொகுசு வாழ்க்கை பற்றிய ரகசியங்களை வெளியிட்ட கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவை அம்மாநில அரசு திடீரென பணியிட மாற்றம் செய்துள்ளது. இதேபோல் சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்கு ஆளான டி.ஜி.பி. சத்யநாராயணாராவும், பொறுப்பு எதுவும் அளிக்கப்படாமல் பணியிடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். சொத்து குவிப்பு வழக்கில் கைதான அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவிற்கு, சிறையில் நவீன சமையல் அறை, பிரத்யேக மருத்துவ வசதி, பணிப்பெண்கள், விசிட்டர் மற்றும் யோகாசன அறை உள்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. இதுவரை இந்த தகவல்கள் வெளிவராத நிலையில், கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா நடத்திய ஆய்வில் அனைத்து சலுகைகள் பற்றிய ஆதாரங்களும் வெளிச்சத்துக்கு வந்தது.

இதுகுறித்து சசிகலா மற்றும் அவருக்கு பணிவிடை செய்யும் பெண் கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. மேலும் சிறையில் இருந்த பிற கைதிகளிடமும் அவர் விசாரணை நடத்தினார். அதில் சசிகலா தரப்பில் சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயணா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதவிர போலி முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கிக்கு மசாஜ் செய்யும் வசதிகள், ஆடம்பர பொருட்கள் உள்பட பல தேவைகளை சிறைத்துறை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர். சாதாரண சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு, சிறைத்துறை அதிகாரிகளே வெளியில் இருந்து கஞ்சா, போதை மாத்திரைகள், மதுபானங்கள், சிகரெட், செல்போன் உள்பட பல பொருட்கள் வரவழைத்து கொடுத்துள்ளனர். இதற்காக சிறைத்துறை வார்டன் முதற்கொண்டு, காவலாளிகள், சிறை கண்காணிப்பாளர் உள்பட பலர் லஞ்சம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து டி.ஐ.ஜி ரூபா, கடந்த புதன்கிழமை அறிக்கைகளை தயார் செய்து, டி.ஜி.பி சத்ய நாராயணா, போலீஸ் டி.ஜி.பி ரூப் குமார் தத்தா, உள்துறை அமைச்சகம், ஊழல் தடுப்பு படை, மாநில அரசு ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையில் டி.ஐ.ஜி ரூபா 2வது முறையாக ஆய்வு மேற்கொள்ள சென்றபோது, 900க்கும் அதிகமான கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ரூபாவிற்கு ரகசிய தகவலை தெரிவித்த ராமமூர்த்தி, சீனிவாஸ், பாபு, ராம்பால், ஆனந்த் மூர்த்தி உள்பட 32 கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்தனர்.

 டி.ஐ.ஜி ரூபாவின் அறிக்கையால் மாநில அரசு மட்டுமின்றி, சசிகலாவே ஆட்டம் கண்டார். இதையடுத்து ரூபா உள்பட சர்ச்சைக்குரிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய மாநில அரசு உத்தரவிட்டது. இதற்காக டி.ஜி.பி ரூப் குமார் தத்தாவை நியமனம் செய்த முதல்வர் சித்தராமையா அவரிடம் ரகசியமாக ஆலோசனை நடத்தி உரிய அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டார்.  உயர் போலீசாரின் இந்த ஆலோசனை குறித்த அறிக்கை, மாநில முதல்வர் சித்தராமையாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக மாநில முதல்வர் சித்தராமையா, உளவுத்துறை மற்றும் மாநில டி.ஜி.பி எம்.என் ரெட்டி ஆகியோரிடம், சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கான காரணங்கள் குறித்து விளக்கம் கேட்டிருந்தார். அவர்கள் கொடுத்த அறிக்கையையும், ரூப் குமார்தத்தா கொடுத்த அறிக்கையையும் ஒப்பிட்டு நேற்று 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாநில அரசு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டது.
அந்த அறிக்கையில் டி.ஐ.ஜி ரூபா, சர்ச்சைக்குரிய போலீஸ் அதிகாரி டி.ஜி.பி சத்திய நாராயணா, மாநில உளவுத்துறை டி.ஜி.பி எம்.என் ரெட்டி ஆகியோரை பணியிடமாற்றம் செய்யவேண்டும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாநில அரசு 6 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்துள்ளது.

அதில் சிறைத்துறை ரகசியங்களை வெளியிட்டு மாநில அரசுக்கு நடுக்கத்தை ஏற்படுத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபாவை, மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை டி.ஐ.ஜியாக பணியிடமாற்றம் செய்துள்ளனர். அதேபோன்று சர்ச்சையில் சிக்கிய சிறைத்துறை டி.ஜி.பி சத்ய நாராயணா, எந்த துறை என்று அறிவிக்காமல் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் ஓய்வு பெற ஒரு மாத கால அவகாசம் இருப்பதால் அவருக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. காலியான சிறைத்துறை டி.ஜி.பி பணிக்கு, ஊழல் தடுப்பு பிரிவில் கூடுதல் டி.ஜி.பியாக பணியாற்றிய என்.எஸ் மெகரிக் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று ஊழல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி பணிக்கு, உளவுத்துறை டி.ஜி.பியாக பணியாற்றிய எம்.என்.ரெட்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் சிறைத்துறை எஸ்.பியாக பணியாற்றிய கிருஷ்ணகுமாரை வேறு இடத்திற்கு மாநில அரசு மாற்றியுள்ளது. இதுவரை அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. உளவுத்துறை ஐஜி அம்ரீத் வால், அதே துறையின் ஏடிஜிபி பதவியை கூடுதலாக கவனிப்பார் என்று அரசு அறிவித்துள்ளது. மாநில அரசின் இந்த திடீர் உத்தரவிற்கு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி, பாஜ பிரமுகர்கள் ஷோபா, ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட பல அரசியல் தலைவர்கள் அரசு மீது குற்றம்சாட்டி உள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url