கோடிகள் கைமாறிய பின்னணி சசிகலா அடைக்கப்பட்ட சிறையில் நடந்தது என்ன : பரபரப்பு தகவல்கள் அம்பலம்
பெங்களுரு : சசிகலா சிறையில் சொகுசாக வாழவும், எப்படி அதிகாரிகளை வளைத்தார் என்பது குறித்தும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்ததையடுத்து, 3 பேரும் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி முதல் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகை வழங்குவதற்கு ரூ. 2 கோடி வரை லஞ்சம் வாங்கியதாக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயண ராவ் மீது அவருக்கு கீழே பணியாற்றும் பெண் அதிகாரியான டிஐஜி ரூபா மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. சிறைக்குள்ளிருக்கும் சசிகலாவிற்கு சிறையில் வழங்கப் படும் உணவு, மருந்துகளை கொடுக்காமல் வீட்டிலிருந்து சமைத்து எடுத்து வருவதற்கும், பின்னாளில் சிறைக்குள்ளே சமைக்கவும் அனுமதி வழங்கியதோடு வெளியில் இருப்பவர்களை போல சொகுசு வாழ்க்கை வாழ பல கோடிகள் லஞ்சமாக சிறைச்சாலை அதிகாரிகள் பெற்றதாக, ரூபா குற்றச்சாட்டு சுமத்தினார். இதனை விசாரிக்க உயர்நிலை விசாரனை குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
பரப்பன அக்ரஹார சிறை குறித்து தற்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பரப்பன அக்ரஹார சிறைக்குள் கடந்த பிப்ரவரி 14 ம் தேதி மாலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் அடைக்கபட்டனர். வசதியான வாழ்க்கை வாழ்ந்த 3 பேருக்கும் சிறையில் கொடுக்கப்பட்ட உணவுகள் ஒத்துக் கொள்ளவில்லை. தவிர அங்கு வழங்கப் பட்டு வந்த மருந்துகளை சாப்பிட சசிகலா மறுத்து விட்டார். இதனால் சிறைத்துறை அதிகாரிகளை கவனிக்க முன் வந்த சசிகலாவின் தரப்பினர் நீதிமன்ற பணிகளை பார்க்க வக்கீல் ஒருவரையும், சிறைக்குள் பல்வேறு வேலைகளை பார்க்க கர்நாடகா அதிமுக பிரமுகர் ஒருவரையும் நியமித்தது. சசிகலா சிறைக்கு சென்ற முதல் வாரத்தில் கடுமையாக நடந்து கொண்டார் டிஜிபி சத்திய நாராயணராவ். இரண்டாம் நாள் காலையில் சசிகலாவிற்கு வெளியிலிருந்து உணவு வந்ததை பறித்துக் கொண்டு, உணவும் மருந்தும் கொண்டு வந்த நபர்களை எச்சரித்து அனுப்பினார். இப்படி ஒரு வார காலம் சிறைக்குள் சசிகலாவிற்கு எந்தவித சலுகையும் கொடுக்காமல் ஆட்டம் காட்டினார்.
இதனால் நொந்து போன சசிகலாவின் தரப்பு, சத்திய நாராயணராவ் இல்லாத நேரங்களில் அவருக்கு கீழே வேலை செய்த சிலரை பிடித்து கொஞ்சம் சமாளித்து வந்தது. இப்படியே போனால் உடல்நிலை கெட்டு 4 ஆண்டுகள் தண்டணையை முடித்து வெளியில் வரும் போது மோசமான நிலையில் வருவதை உணர்ந்த இளவரசியின் மகன் விவேக் அவரது அம்மாவையும் , அத்தையையும் நல்ல முறையில் சிறைக்குள் வாழ வைக்க ஆசைப்பட்டார். இதற்காக சிறைத்துறை டிஜிபியான சத்திய நாராயண ராவை வளைக்க திட்டம் தீட்டினர். இதற்கான பொறுப்பை பெங்களூர் அதிமுக பிரமுகரிடம் கொடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், நேர்மையான அதிகாரி போல நடந்து கொண்ட சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர், பெங்களூர், ஹைதராபாத், துபாய் ஆகிய ஊர்களில் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதை கண்டறிந்தது அதிமுக தரப்பு. பின்பு அவர்களைப் பிடித்து முதல் கட்ட பேச்சு வார்த்தையை ஹைதராபாத்தில் நடத்தியுள்ளனர். முதல் கட்ட பேச்சு வார்த்தைக்கு சிறை அதிகாரி சார்பாக பெங்களூரில் பெரிய பில்டர் ஒருவர் கலந்து கொண்டு பேசினார். பேச்சுவார்த்தை உடன் பட்டு வந்ததால் சிறை அதிகாரிக்கு ரூ. 70 லட்சம் மதிப்பில் பெங்களூர் - ஓசூர் சாலையிலுள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் ஒரு பிளாட்டையும் ஒரு பெரிய தொகையையும் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த டீலிங் முடிந்த அடுத்ததாக நாளே சிறைக்குள் சுதந்திரமாக வலம் வர ஆரம்பித்தார் சசிகலா. பின்பு சிறைக்குள்ளே சமைக்கவும், சசிகலாவின் சமையலர்களை சட்டத்திற்கு அப்பாற்பட்டு உள்ளே சமைக்கவும், சசிகலாவிற்கு கை கால் பிடித்து விடுவது முதல் அவருக்கு பல்வேறு உதவிகளை செய்ய ஆட்களை சிறைக்குள் கொண்டு வரவும், அவர்களை வெளியே செல்ல விடவும், செல்போனில் பேசவும், தவிர ஏசி, மெத்தை உள்பட பல்வேறு சொகுசு வாழ்க்கையை நடத்த அடுத்த கட்ட பேச்சு வார்த்தையை நடத்த சசிகலா தரப்பு திட்டமிட்டது. இந்த முறை பேச்சு வார்த்தை நடத்த சிறை அதிகாரியின் சார்பில் துபாயிலிருந்து அவரது நண்பர் வரவழைக்கப்பட்டார். இவர் துபாயில் பில்டிங் கட்டும் ஒப்பந்த பணிகளை செய்து வருபவர். இந்த பேச்சு வார்த்தை பெங்களூரை அடுத்துள்ள ஒரு பண்ணை வீட்டில் நடந்துள்ளது. இந்த முறை பெரிய அளவில் தொகையை பேரமாக பேசியுள்ளனர். பின்பு இந்த தொகையை சசிகலாவின் தரப்பிலிருந்து ஹைதராபாத்திலுள்ள ஒரு தோட்டத்தில் வைத்து கொடுக்கப் பட்டுள்ளது. இதற்காக பல முறை சிறை அதிகாரி விமானத்தில் ஹைதராபாத் பறந்துள்ளார். இதற்கான விமான செலவு உள்பட அனைத்தையும் சசிகலா தரப்பு செய்து கொடுத்துள்ளது.
இப்படி பலமுறை பல்வேறு வேலைகளுக்கு சிறை அதிகாரிகள் பலருக்கு விவேக், மற்றும் அதிமுக பிரமுகர் மூலம் பணம் கொடுக்கப்பட்டு வந்த விஷயம் டிஐஜி ரூபா மூலம் அம்லபமாகிஉள்ளது.
யார் சொல்வது உண்மை?
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் நேற்று பெங்களூருவில் நிருபர்களை சந்தித்த கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ், “நான் சசிகலாவிடம் லஞ்சம் வாங்கவில்லை. சிறையில் சாதாரண கைதியைப் போலவே சசிகலா நடத்தப்படுகிறார். எந்த விதத்திலும் அவருக்கு சிறப்பு சலுகை வழங்கவில்லை. சிறையில் சசிகலாவை யாரும் சந்திக்கவில்லை. இதற்காக சிறப்பு சலுகைகள் வழங்கவில்லை. என் மீது ஊழல் புகார் தெரிவித்த ரூபா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன்” என்றார். ஆனால் கடந்த ஜூன் 14 ம் தேதி, பரப்பன அக்ரஹார சிறையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தினகரன், வெங்கடேஷ், உள்பட சசிகலாவின் ஆதரவு எம்.எல்.ஏகள் சிலரை சசிகலா சந்தித்துப் பேசினார். 3 மணி நேரங்களுக்கு மேல் நடந்த இந்த சந்திப்பை முடித்ததும் சிறைக்கு வெளியே வந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சிறை வாசலிலே நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
உள்ளே இரு அணிகளும் இணைப்பும் , ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க சொல்லி அனுப்பியதாக பேட்டி கொடுத்துள்ளார். இந்த பேட்டிகள் , சிறை அதிகாரி விமானத்தில் பயணம் செய்த நாட்கள் , பெங்களூரு உள்பட வெளியில் பினாமி பெயர்களில் வாங்கிய சொத்துக்களை ஆதாரங்களோடு தயார் செய்து, பட்டியல் போடும் பணிகளை ரூபா செய்து வருகிறார். இதனால் சசிகலா மற்றும் சிறை அதிகாரி இருவருக்கும் மேலும் சிக்கல் எழுந்துள்ளது.
மூத்த அதிகாரி தலைமையில் உயர் மட்ட குழு விசாரணை : முதல்வர் சித்தராமையா உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறை அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார். இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த குற்றச்சாட்டை சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவ் மறுத்தார். இதையடுத்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா இந்த சம்பவம் குறித்து நேற்று உயர் மட்ட குழு விசாரணைஅமைக்கப்படும் என்று அறிவித்திருத்தார். அதன்படி இன்று காலை மூத்த அதிகாரி வினய் தலைமையில் உயர் மட்ட குழு விசாரணை அமைத்து உத்தரவிட்டார்.
சிறை நன்னடத்தை விதிகளை மீறிய சசிகலா
சிறை விதிமுறைகளை மீறியதாக இப்போது சசிகலாவின் மீது பகீர் புகார்களும் கிளம்பியுள்ளது. கடந்த 6 மாதங்களில் 100 க்கும் மேற்பட்ட சிறை சந்திப்புகள், 50 க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட பார்வையாளர்கள் சந்தித்தது, மேலும் சிறை அதிகாரி வாகனத்தில் சில முறை வெளியே சென்றது என சசிகலா பல்வேறு நிகழ்வுகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளியாகியுள்ளது. இது மேலும் சசிகலாவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் மறு சீராய்வு மனு விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் சிறைக்குள் பல்வேறு அதிகாரிகளுக்கு சசிகலா சொகுசாக வாழ ரூ.15 கோடிகள் வரை லஞ்சமாக கொடுத்து வந்த சம்பவங்கள் புகாராக எழுந்திருப்பது, சசிகலாவிற்கு மேலும் சிக்கலை உண்டாக்கி இருக்கிறது. இந்த விவகாரங்களை எல்லாம் சசிகலாவினை எதிர்த்து அரசியல் செய்யும் நபர்கள் கையில் எடுத்து அவருக்கு எதிராக செயல்பட இருக்கிறார்கள் இதனால் சசிகலாவின் தலைக்கு மேல் மேலும் பல கத்திகள் தொங்குகிறது.
டிஐஜி ரூபாவிடம் விளக்கம் கேட்கும் மாநில உள்துறை அதிகாரிகள்
பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த 10ம் தேதி சிறைத்துறை டிஐஜி ரூபா ஆய்வு மேற்கொண்டார். அப்போது தண்டனை கைதிகள் அறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு பிரத்யேக சமையல் அறை அமைத்து கொடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அறிக்கையை சிறை துறை டிஜிபி சத்யாநாராயண ராவ், மாநில காவல் துறை இயக்குனர் ரூப்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினார். பொதுவாக சிறை துறை ஆய்வு அறிக்கைகள் அனைத்தும் ரகசியமாக வைப்பது வழக்கம். ஆனால் இந்த அறிக்கை எப்படி மீடியாக்களிடம் சென்றது. எனவே மாநில உள்துறை அதிகாரிகள் சிறைத்துறை டிஐஜி ரூபா உரிய விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.