தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கையில் 85 சதவீத ஒதுக்கீடு ரத்து: சென்னை ஐகோர்ட் அதிரடி: மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் அதிர்ச்சி
* 2016-17 கல்வி ஆண்டில் தமிழக அரசின் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் 2318 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன.
* இதில் 2279 இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைத்தன. சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்களுக்கு 16 இடங்களும், ஐ.சி.எஸ்.இ பாடத்திட்ட மாணவர்களுக்கு 3 இடங்களும், பிறப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 20 இடங்களும் கிடைத்தன.
* நீட் தேர்வால் 2017-18 கல்வி ஆண்டில் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படவுள்ள 3377 இடங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு கிடைக்கும். மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 300 இடங்கள் கூட கிடைப்பது அரிது.
சென்னை,: மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீடு இடங்களில் 85 சதவீதம் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வு முறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு தமிழக அரசின் எதிர்ப்பால், தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கண்டிப்பாக நீட் தேர்வு முறைதான் என்று மத்திய அரசு அறிவித்து விட்டது. ஆனால், தமிழகத்தில் நீட் தேர்வு முறையால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக நீட் தேர்வுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்பதால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.
ஆனால், மத்திய அரசு விடாப்பிடியாக இருந்ததால், எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்நிலையில், இந்த உள் ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தர்னிஸ் குமார், வி.எஸ்.சசி சச்சின் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், உள் ஒதுக்கீடு என்பது மாநில அரசின் உரிமை. மாநில அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், நளினி சிதம்பரம் ஆகியோர் ஆஜராகி, தமிழக அரசின் இந்த உள் ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டனர்.அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி ஆஜராகி, நீட் தேர்வுக்கு தமிழகம் முழு அளவில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தமிழக அரசின் உள் இட ஒதுக்கீட்டில் கண்டிப்பாக சேர்க்கை கிடைக்கும் என்று வாதிட்டார். இந்த வழக்கில் நீதிபதி ரவிச்சந்திரபாபு நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், கூறியிருப்பதாவது:
மனுதாரர்கள் அனைவரும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள். இவர்கள் நீட் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் மத்திய ஒதுக்கீடு போக மீதமுள்ள இடங்களில் சேர தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு கடந்த 22ம் தேதி ஒரு உள் ஒதுக்கீட்டு அரசாணையை
பிறப்பித்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், மாநில அரசு ஒரு நிர்வாக ரீதியான உத்தரவைப் பிறப்பித்தால் அந்த உத்தரவு செல்லுபடியாகுமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இரு பாடத்திட்ட மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற உத்தரவு வெளியிடப்படுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு உகந்ததா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிடும்போது, எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை முறையில் நிர்வாக உத்தரவு மூலம் ஒதுக்கீட்டை கொண்டுவர முடியாது. சட்டம் கொண்டுவந்தால்தான் இதுபோன்ற ஒதுக்கீடு செல்லுபடியாகும். இதுபோன்ற ஒதுக்கீடுக்குள் ஒரு உள் ஒதுக்கீட்டை ஏற்படுத்துவது மோசமான உதாரணமாகும். ஏற்கனவே, மாநில அரசு இட ஒதுக்கீட்டை கடைபிடித்து வரும் நிலையில் இந்த உள் ஒதுக்கீடு தேவையற்றது. நீட் தேர்வு உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு நீட் தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்துள்ள மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. எனவே, அந்த மசோதா சட்டமாக்கப்படும்வரை தமிழக அரசு நீட் தேர்வின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.
இந்நிலையில், இதுபோன்ற அரசாணையை பிறப்பிக்க கூடாது. இந்திய மருத்துவக் கவுன்சில் நீட் தேர்வை 2011ல் கொண்டு வந்ததிலிருந்து இதுவரை மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள கால அவகாசம் இருந்துள்ளது. தமிழக அரசின் ஆணையால் மாணவர் சேர்க்கைக்கு 2 தகுதிப் பட்டியலை தயார் செய்வது அனுமதிக்கப்படக்கூடியதல்ல என்று வாதிடப்பட்டுள்ளது. அட்வகேட் ஜெனரல் வாதிடும்போது, ‘கொள்கை முடிவை எடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் அதிகாரத்திற்குள் இந்திய மருத்துவக் கவுன்சில் தலையிட்டு நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது. அதனால்தான் கடந்த 2013ல் உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை ரத்து செய்தது. நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் 28 சதவீத இடங்கள்தான் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். 72 சதவீத இடங்கள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சென்றுவிடும். அதனால்தான் தமிழக அரசு இந்த உள் ஒதுக்கீட்டை கொண்டுவந்துள்ளது.
எனவேதான், தமிழக சட்டப் பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி சட்ட வடிவம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்று வாதிட்டுள்ளார். மருத்துவத் துறை என்பது மிகவும் முக்கியமான துறையாகும். உயிர்காக்கும் இந்த துறையில் தகுதியான, திறமையான மாணவர்கள்தான் சேர்க்கப்பட வேண்டும். இதில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது. மாநில பாடத்திட்டத்தைவிட சிபிஎஸ்இ பாடத்திட்டம் கடினமானதுதான். இருந்தபோதிலும் இரண்டு பாடத்திட்டத்திற்கும் இடையே பாரபட்சம் காட்டக்கூடாது.
நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு உள் ஒதுக்கீடு போன்ற உத்தரவால் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடக்கூடாது. எனவே, நீட் தேர்வு முறையை மாநில அரசு உத்தரவு நீர்த்துப்போக வைத்துவிடக்கூடாது. எனவே, தமிழக அரசின் இந்த உள் ஒதுக்கீடு ஆணை விதிமுறைகளுக்கு முரணானது. ஒரு அரசாணை பாரபட்சம் காட்டும் வகையில் இருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மாநில பாடத்திட்டத்தின்கீழ் படிக்கும் கிராமப்புற மாணவர்களின் மேம்பாடு என்பது மிக முக்கியமானதுதான். ஆனால், அதே நேரத்தில் பாரபட்சம் காட்டப்படுவதை ஏற்க முடியாது. இதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது.
சம வாய்ப்பு கேட்டு நீதிமன்றத்தின் கதவை தட்டுபவர்களின் கோரிக்கைகளை கேட்காமல் இருக்க முடியாது. எனவே, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை சட்டத்திற்கு முரணானது. ஏற்க கூடியதல்ல. அதனால், தமிழக அரசின் ஆணை ரத்து செய்யப்படுகிறது. இந்த உத்தரவு மனுதாரர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும். எனவே, தமிழக அரசு 2017-18ம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான புதிய தகுதிப் பட்டியலை தயாரித்து வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.