விரைவில் வெளியாகிறது ஆதார் குறித்த சந்தேகத்துக்கு பதிலளிக்க புதிய புத்தகம்......
புதுடெல்லி:
ஆதார் அட்டை குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் புதிய புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டம் உள்ளிட்ட அரசின் சமூக நலத் திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆதார் என்பது 12 இலக்க எண்கொண்ட தனிநபர் அடையாள அட்டையாகும். இதில் சம்பந்தப்பட்டவரின் விழித்திரை, கைரேகை உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆதார் எண், அரசு மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான உறவில் மிக முக்கிய பங்காக மாறி வருகிறது. முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ஆதார் குறித்து எழும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் புதிய புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசியல் பொருளாதார நிபுணர் சங்கர் அய்யர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் ஆதார் உருவான வரலாறு, அதன் ஏற்ற, இறக்கங்கள் மற்றும் திருப்பங்கள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி மூலமாக ஆதார் உருவாக்கப்பட்டது. இது தொடர்பான கருத்துக்களை அவர் புத்தகத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். “வெறுமேன நடக்கும் என்று சொல்வதில் எனக்கு திருப்தி இல்லை. இது நடக்கும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது”. என்று பிரணாப் கருத்து தெரிவித்துள்ளார். இதேபோல் 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் “ஆதார் என்பது அரசியல் தந்திரம்” என்ற கூற்றை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். “பிரச்னை என்பது திட்டத்தில் இல்லை. திட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பாகத்தான் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன். ஆனால், அவர்கள் நரேந்திர மோடியிடம் இருந்து எதையும் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை” என்று மோடி கூறியுள்ள கருத்தும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஆதார் தொடர்பான கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய இந்த புத்தகத்தை வெஸ்ட்லேண்ட் பதிப்பகத்தார் விரைவில் வெளியிட உள்ளனர்.