‘என்னை காதலித்துதான் ஆக வேண்டும்’பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை: 6 மாதமாக பின்தொடர்ந்த வாலிபர் கைது
சென்னை:
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு செல்லும் போது காலை மற்றும் மாலை நேரங்களில் வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்துள்ளார். முதலில் இதை மாணவி ராணி கவனிக்கவில்லை. இதற்கிடையே, சில நாட்களுக்கு முன் அந்த வாலிபர் காதலிப்பதாக கூறி ஒரு வாழ்த்து மடலை ராணியிடம் கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத ராணி வாங்காமல் கீழே வீசிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், விடாமல் ராணி பள்ளிக்கு செல்லும் போது வாலிபர் பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறி தொல்லை ெசய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி மாலை ராணி பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற போது வழிமறித்து தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி வாலிபர் கூறியுள்ளார். அதற்கு ராணி எந்த பதிலும் கூறிவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் ‘என்னை நீ கண்டிப்பாக காதலித்துதான் ஆகவேண்டும், இல்லையென்றால் உன்னை நான் சும்மா விடமாட்டேன்’ எனக்கூறி அவரது கையை பிடித்து இழுத்து மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராணி அழுதபடி வீட்டிற்கு சென்றுள்ளார். அவரிடம், ஏன் அழுதபடி வருகிறாய் என்று தாய் கேட்டுள்ளார். அப்போது நடந்த சம்பவம் குறித்து ராணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த வாலிபரிடம் ராணியின் பெற்றோர் கேட்டுள்ளனர். அதற்கு வாலிபர் “நான்தான் உன் மகளுக்கு கணவன்” என்று கூறிவிட்டு சென்று விட்டார். விபரீதத்தை அறிந்த ராணியின் பெற்றோர். உடனே, பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகரை சேர்ந்த மனோ (எ) மார்ட்டின் (19) என தெரியவந்தது. போலீசார் மனோ மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தனர்.