பேரவையில் அரசு தாக்கல் செய்த புதிய மசோதாவால் உள்ளாட்சி தேர்தல் தாமதமாகும்: வார்டுகளை வரையறை செய்ய ஆணையம் அமைப்பு
* தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 528 பேரூராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
* இதற்கான பதவிக்காலம் 2016 அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இன்னும் தேர்தலை நடத்தாததால் உள்ளாட்சிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளை வரையறை செய்ய புதிய சட்ட மசோதா பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதனால் உள்ளாட்சி தேர்தல் நடப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டுடன் உள்ளாட்சி மன்றங்களுக்கான பதவி காலம் முடிந்தது. உடனடியாக உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு அறிவித்தது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்காமல் அவசர அவசரமாக தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இடஒதுக்கீடு முறையை உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்த வேண்டும் என்று கோரி திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர், மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.
உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்கிற வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் தமிழக அரசின் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றின் நிலவரை மற்றும் வார்டுகள் வரையறை செய்வதற்காக எல்லை வரையறை ஆணையம் சட்ட மசோதாவை நகராட்சி நிர்வாகம், ஊராட்சி வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தாக்கல் செய்தார். இம்மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கீழ்வேளூர் மதிவாணன்(திமுக) சட்டப்பேரவையில் நேற்று பேசுகையில், ‘‘இந்த மசோதா 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.
சமூக நீதி அடிப்படையில் பட்டியல் வகுப்பினருக்கும், பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும். சுழற்சி முறையும் இதில் இடம் பெறவேண்டும். சென்னை மாநகராட்சி ஆணையர் மட்டுமின்றி, இதர மாநகராட்சி ஆணையர்களும் இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும்’’ என்றார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், ‘‘இந்த ஆணையம் எவ்வளவு நாட்களுக்குள் இப்பணியை முடிக்கும் என்ற கால வரையறையை அறிவிக்க வேண்டும்’’ என்றார். இவ்விவாதத்திற்கு பிறகு பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வார்டுகளை தொகுதி வரையறை செய்வது மற்றும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பெண்கள் ஆகியோருக்கான வார்டுகளை ஒதுக்கீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் வார்டுகளின் தொகுதி வரையறைகள் உருவாக்கப்படும். இதுதொடர்பாக தொகுதி வரையறை ஆணையம் அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் இருப்பார்.
சென்னை மாநகராட்சி ஆணையர், பேரூராட்சிகள் இயக்குனர், நகராட்சி நிர்வாக ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ஆகியோர் உறுப்பினர் செயலாளராக இருப்பார்கள். ஆணையத்தின் தலைமையிடம் சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் அமைந்திருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஜூலை மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், எல்லை வரையறை ஆணையத்தை தமிழக அரசு தற்போது அமைத்ததன் மூலம் உள்ளாட்சி தேர்தல் நடப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும்.