ஒருநாள் ரன்குவிப்பு மித்தாலி ராஜ் உலக சாதனை
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ், 6000 ரன் மைல்கல்லை கடந்த முதல் வீராங்கனையாகவும் உலக சாதனை படைத்தார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று 69 ரன் விளாசிய மித்தாலி ஒருநாள் ரன் குவிப்பில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் சார்லோட்டி எட்வர்ட்ஸ் (5992 ரன்) சாதனையை முறியடித்தார் (சார்லோட்டியை விட 16 இன்னிங்ஸ் குறைவு). மேலும், ஒருநாள் போட்டிகளில் 6000 ரன் மைல்கல்லை எட்டிய முதல் வீராங்கனை என்ற உலக சாதனையும் அவர் வசமானது. இதுவரை 183 போட்டிகளில் விளையாடி உள்ள மித்தாலி 6028 ரன் (அதிகம் 114*, சராசரி 51.52, சதம் 5, அரை சதம் 49) விளாசியுள்ளார்.
மித்தாலி, மெக் லான்னிங் (ஆஸி.) இருவர் மட்டுமே 50+ சராசரி வைத்துள்ளனர். இந்திய அணி வெற்றி பெற்ற போட்டிகளில் மித்தாலியின் சராசரி ரன் குவிப்பு 75.72. சேஸிங் செய்த போட்டிகளில் சராசரி 65.07; சேஸிங்கில் வென்ற போட்டிகளில் சராசரி 109.68. சதம் அடித்த 5 இன்னிங்சிலும் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
1999ல் அயர்லாந்துக்கு எதிராக அறிமுகமான முதல் போட்டியிலேயே 114* ரன் விளாசி சாதனை படைத்தார். அப்போது அவரது வயது 16 ஆண்டு, 205 நாள் மட்டுமே. 17 வயதுக்கு குறைவாக வேறு எந்த வீராங்கனையும் இதுவரை சதம் அடிக்கவில்லை. நடப்பு சீசனில் மித்தாலி தொடர்ச்சியாக 7 இன்னிங்சில் 50+ ஸ்கோர் அடித்துள்ளார். மகளிர் ஒருநாள் போட்டிகளில் இதுவும் உலக சாதனையாகும்.