பூனம் ராவுத், மித்தாலி விளாசல் வீண் எளிதாக வென்றது ஆஸ்திரேலிய அணி
பிரிஸ்டல்:
இந்திய அணியுடனான ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதின. டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. பூனம் ராவுத், ஸ்மிருதி மந்தனா இந்திய இன்னிங்சை தொடங்கினர். மந்தனா 3 ரன்னில் பெவிலியன் திரும்ப, இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து பூனம் ராவுத்துடன் கேப்டன் மித்தாலி ராஜ் இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 157 ரன் சேர்த்தது. மித்தாலி 69 ரன் எடுத்து (114 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) கிறிஸ்டன் பீம்ஸ் பந்துவீச்சில் காட்&போல்டானார்.
அடுத்து வந்த ஹர்மான்பிரீத் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, பூனம் ராவுத் சதம் விளாசி அசத்தினார். அவர் 106 ரன் (136 பந்து, 11 பவுண்டரி) எடுக்க, ஹர்மான்பிரீத் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். வேதா 0, சுஷ்மா 6, ஜுலன் 2 ரன்னில் அணிவகுக்க, இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்தது. ஷிகா 7, தீப்தி 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, சற்றே கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன் எடுத்து வென்றது. நிகோல் போல்டன் 36, பெத் மூனி 45 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் மெக் லான்னிங் 76 ரன் (88 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), எல்லிஸ் பெர்ரி 60 ரன்னுடன் (67 பந்து, 8 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. 10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. இந்தியா (8 புள்ளி) 4வது இடத்தில் உள்ளது.