போதை மருந்தை பார்த்ததே இல்லை : நடிகர், நடிகைகள் மறுப்பு
டோலிவுட் நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், சார்மி, முமைத்கான், புரி ஜெகநாத் உள்ளிட்ட 12 பேர்களுக்கு அமலாக்க துறை போதை மருந்து பயன்படுத்தியது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் சம்பந்தப்பட்ட நட்சத்திரங்கள் நேரடியாகவும், அவர்களது குடும்பத்தினர் வாயிலாகவும் உருக்கமாக வெளியிட்டுள்ள அறிக்கை, மற்றும் வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் போதை மருந்தை உபயோகிப்பவர்கள் அல்ல, போதை மருந்தை பார்த்ததுகூட இல்லை என்று தெரிவித்திருந்தனர். அப்படியானால் உண்மையான குற்றவாளிகள் யார்? அப்பாவிகள் இதுபோன்ற தீவிரமான குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்களா? என கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
நடிகர், நடிகைகளுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு முன் அமலாக்க துறை அதிகாரிகள் தேவையான ஆதாரங்களை சேகரிக்கவில்லையா? 10 மணி நேரம் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் என்ன? சில பெரும்புள்ளிகளின் தவறுகளை திசைதிருப்புவதற்காக திரையுலகினர் குறிவைக்கப்பட்டிருக்கிறார்களா? இப்படி எழுப்பப்பட்டிருக்கும் பல்வேறு வினாக்களுக்கான தீர்வு விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என்றும் திரையுலகினர் கருத்து தெரிவிக்கின்றனர்.