ரஜினியோடு நடிக்கப் போகிறேனா? கஜோல் ஆச்சரியம்!



பத்தொன்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோலிவுட்டில் ‘பூ பூக்கும் ஓசை’ கேட்கப் போகிறது. ‘மின்சார கனவு’ நினைவிருக்கிறது இல்லையா? கன்னியாஸ்திரி லட்சியத்துக்கும், காதல் உணர்ச்சிக்கும் இடையில் வெண்ணிலவாய் தத்தளித்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த கஜோல், ‘வேலையில்லா பட்டதாரி-2’ மூலமாக ரீ என்ட்ரி கொடுக்கிறார். படத்தின் ஆடியோ ரிலீஸுக்காக சென்னை வந்தவரை வழியிலேயே மடக்கிப் பேசினோம்.

சென்னை எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்தது?

ரொம்ப நல்ல எக்ஸ்பீரியன்ஸ். என் லைஃப் முழுக்க இதை மறக்க முடியாது. இருபது வருஷத்துக்கு முன்னாடி நான் பார்த்த சென்னைக்கும், இப்ப பார்க்கிற சென்னைக்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது. சென்னையில நான் தங்கி ‘விஐபி-2’ ஷூட்டிங்குல நடிச்சேன். இந்த யூனிட்ல நல்லா நேரம் போச்சு. ஷூட்டிங்கை திட்டமிட்டபடி வேகமா நடத்தி முடிச்சாங்க. எல்லாரும் ஒண்ணா சேர்ந்து ஒர்க் பண்ணது நல்ல எக்ஸ்பீரியன்சா இருந்தது. தயாரிப்பாளர்களை பாராட்டணும். மும்பையில இருந்து சென்னைக்கு வந்த நான், இங்கே எந்த விஷயத்தையும் அசவுகரியமா நினைக்கக்கூடாதுன்னு, எனக்கு என்னென்ன தேவைன்னு தெரிஞ்சுக்கிட்டு செய்து கொடுத்து, ரொம்ப அற்புதமா பார்த்துக்கிட்டாங்க.

இருபது வருஷத்துக்கு பிறகு மறுபடியும் தமிழுக்கு வந்திருக்கீங்க. அதுபற்றி என்ன ஃபீல் பண்றீங்க?

பிரபுதேவா கூட ‘மின்சார கனவு’ படம் பண்ணி இருபது வருஷம் ஆகப்போகுதுன்னு உண்மையிலயே என்னால நம்ப முடியல. அந்த படத்துல நான் நடிச்சப்ப, தமிழ்ல டயலாக் பேசறது ரொம்ப, ரொம்ப கஷ்டமா இருந்தது. தினமும் ஈவ்னிங் ரெண்டு மணி நேரம் ஹோம்ஒர்க் செய்யற மாதிரி, மறுநாள் ஷூட் பண்ணப்போற டயலாக்குகளை எழுதி மனப்பாடம் பண்ணுவேன். அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் கிட்ட பேசிக் காட்டுவேன். ஏதாவது கரெக்‌ஷன் இருந்தா சொல்லச் சொல்வேன். அதனாலதான் நான் வேற மொழி படங்கள்ல நடிக்க ஆர்வம் காட்டல. இந்தி படத்துல நடிக்கிறதை விட, மற்ற மொழியில நடிக்கிறப்ப, மூணு மடங்கு எக்ஸ்ட்ரா ஒர்க் இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணேன். ஆனா, ‘விஐபி-2’ படத்துல நடிக்கிறதுக்காக தனுஷும், சவுந்தர்யாவும் கேட்டப்ப, நான் நடிக்க மாட்டேன்னுதான் சொன்னேன்.

அதுக்கு பிறகு எப்படி நடிக்க சம்மதிச்சீங்க?

அதுக்கு முதல் காரணம், தனுஷ். ‘தயவுபண்ணி ஒருமுறை கதை கேளுங்க. அதுக்கு பிறகு முடிவெடுங்க’ன்னு சொன்னார். கதையை கேட்டு முடிச்ச பிறகு, இந்த படத்துல நான் நடிக்கக்கூடாதுங்கிற முடிவுல இருந்தேன். உடனே தனுஷ், ‘நீங்க சைனீஸ், இங்கிலீஷ்னு எந்த லாங்குவேஜூல பேசணும்னு நினைக்கிறீங்களோ அந்த மொழியில பேசுங்க. ஆனா, கண்டிப்பா நீங்க இந்த படத்துல நடிக்கணும். அது ஒண்ணே எங்களுக்கு போதும்’னு சொன்னார். அவர் இப்படி சொன்னதை கேட்ட எனக்கு ஆச்சரியமா இருந்தது. உடனே நான், ‘கேமரா முன்னாடி ஒன், டூ, த்ரீ, ஃபோர்னு சொன்னா கூட போதுமா?’ன்னு கேட்டேன்.

அதுக்கு அவர், ‘பெர்ஃபாமன்ஸ் மட்டும் சரியா இருந்தா போதும். மற்ற விஷயங்களை நாங்க டப்பிங்குல பார்த்துக்கிறோம்’னு சொன்னார். ஆனா, படத்தை பார்த்தீங்கன்னா அப்படி இருக்காது. ஷூட்டிங் ஸ்பாட்ல நான் தமிழ்ல பேசித்தான் நடிச்சேன். பேசிப் பழக ஒரு வாரமாச்சு. தனுஷ், சவுந்தர்யா உள்பட எல்லாருமே படம் நல்லா வரணும்னு கடுமையா உழைச்சாங்க. என் ஒர்க்கை எப்படியெல்லாம் சுலபமாக்க முடியுமோ அதையெல்லாம் பண்ணாங்க. அவங்க ஒத்துழைப்பு இல்ைலன்னா, என் ஒர்க் சுலபமா முடிஞ்சிருக்காது. ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன். ஸோ, ‘விஐபி-2’ யூனிட்டுக்கு என் நன்றி.

படத்துல நீங்க வில்லியா வர்றீங்கன்னு சொல்றாங்களே...?

வசுந்தரா, ரொம்ப அற்புதமான பெண். எனக்கு அந்த கேரக்டர் மேல ரொம்ப மரியாதை உண்டு. வாழ்க்கையில சொந்தமா உழைச்சு கோடீஸ்வரியானவள் வசுந்தரா. தனக்குன்னு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்துறதுக்காக, யாரோட உதவியையும் எதிர்பார்க்காம முன்னேறியவள். வாழ்க்கையில ஜெயிக்கணும்னு நினைக்கிறது ஒவ்வொரு பெண்ணோட லட்சியமா இருக்கும். நான் ஒரு அம்மா, இல்லன்னா சிஸ்டர், ஒய்ஃப்னு அடையாளப்படுத்தப்படாம, திறமைக்காக மட்டும் அடையாளப்படுத்தப்படணும்னு நினைப்போம் இல்லையா? அந்த மாதிரி ஒரு லட்சியத்தோட, கொள்கையோட இருக்கிற வசுந்தராவை, படத்துக்காக கொஞ்சம் மிகைப்படுத்தி காட்டியிருப்பாங்க. மற்றபடி நான் வில்லி இல்லை. இதுக்கு முன்னால இந்தியில நான் நடிச்ச எந்த கேரக்டர் மாதிரியும் இந்த கேரக்டர் இருக்காது. அவள் இயற்கையோட மகாசக்தி. என் வழி இதுதான்னு முடிவு பண்ணிட்டு, அதை யாரும் தடுக்க விடமாட்டாள். ஒரு விஷயம் நடந்தே ஆகணும்னு முடிவு பண்ணிட்டா, அது நடந்தே தீரும். அதுவரைக்கும் போராடிக்கிட்டே இருப்பாள். இதுவரைக்கும் இந்த மாதிரி கேரக்டர்ல நான் நடிச்சதில்ல.

உங்க கேரக்டர்ல, முதல்ல ரஜினி நடிக்கிறதா இருந்தது. அதுபற்றி தெரியுமா?

அது உண்மை கிடையாது. வசுந்தராகேரக்டர்ல ரஜினி சார் நடிக்கிறதா பேசப்படல. முதல்ல இருந்தே இப்படித்தான் அந்த கேரக்டர் இருந்தது.

தமிழ்ல உங்களுக்கு தெரிஞ்ச வார்த்தைகள்?

மும்பை, மலேசியா, இந்தோனேசியான்னு, பல நாடுகள்ல என்னை பார்க்கிற தமிழர்கள், தமிழ்ல ஆசையா பேசுவாங்க. ஆனா, எனக்கு தமிழ் தெரியாதுன்னு சொல்லிடுவேன். ‘யாரு’, ‘சாப்டாச்சா?’, ‘வேணாம் வேணாம்’, இந்த மாதிரி சின்னச் சின்ன வார்த்தைங்க மட்டும்தான் எனக்குத் தெரியும்.

உங்களுக்கு பிடிச்ச தென்னிந்திய உணவுகள்?

நான் சென்னையில தங்கியிருந்தப்ப, எனக்கு பிடிச்ச எல்லா உணவையும் சாப்பிட்டேன். ஆனா, ஆந்திரா வகை உணவுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். காரமான சுவைக்கு நான் நிரந்தர அடிமை. ஆப்பத்தோட சிக்கன் கறி சேர்த்து சாப்பிட பிடிக்கும். என் குழந்தைகளுக்கு தோசைன்னா ரொம்ப பிடிக்கும். அதனால, காலையில எல்லாரும் சேர்ந்து தோசை சாப்பிட்டோம். ஐதராபாத்துல நிறைய நேரம் செலவழிச்சோம். சென்னையை தவிர அங்கேயும் ‘விஐபி-2’ ஷூட்டிங் நடந்தது. ஐதராபாத்துல எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிச்ச நகரங்கள்ல ஐதராபாத்தும் ஒண்ணு.

சவுந்தர்யா, தனுஷ் கூட ஒர்க் பண்ண அனுபவத்தை பற்றி...?

ஷூட்டிங் ஸ்பாட்ல நான், சவுந்தர்யா, தனுஷ் எல்லாரும் ஒரே எண்ணத்துல இருந்ததாலயோ என்னவோ, எந்த விஷயமும் கஷ்டமா தெரியல. டைரக்‌டர் வேலையை சவுந்தர்யா ரொம்ப சிறப்பா செய்தார். எதிர்காலத்துல அவர் மிகப் பெரிய டைரக்டரா வருவார். தனுஷ் கூட சேர்ந்து நடிச்சது ரொம்ப கம்பர்ட்டபிளா இருந்தது. படத்தோட ஸ்டோரியையும், டயலாக்கையும் அவர்தான் எழுதினார். அதனால சீன், டயலாக் உள்பட எல்லா விஷயத்திலும் ரொம்ப இன்வால்வ்மென்ட் இருந்தது. நான் பேசி நடிச்ச தமிழ் வசனங்களுக்கு சவுந்தர்யாவும், தனுஷும் ரொம்ப ஹெல்ஃப் பண்ணாங்க. படத்தோட டிரைலரை பார்த்த என் கணவர் அஜய் தேவ்கன், மனசு திறந்து பாராட்டினார். அந்த பாராட்டே எனக்கு போதும்.

இன்னமும் இளமையா இருக்கீங்களே! அந்த ரகசியம் என்ன?

நான் இளமையானவள் கிடையாது. ஆனா, முகத்துல இருக்கிற சுருக்கம்தான் நம்ம வயசுன்னு சொல்றதுல எனக்கு உடன்பாடு கிடையாது. நம்ம தோற்றத்துக்கும், வயசுக்கும் துளியளவும் சம்பந்தம் கிடையாது. 18 வயசு பெண்கள், திடீர்னு 30 வயசு மாதிரி தெரியறதை பார்த்திருக்கேன். மனரீதியா வயசாகறப்பதான் முகத்துல அது தெரியும்னு நினைக்கிறேன். ஒருத்தர் தான் செய்யற வேலையில தீவிரமா இருக்கிறப்ப, யாரும் அவரோட வயசை கவனிக்க மாட்டாங்க. வேலையில கொஞ்சம் ஃபோரடிக்கிறப்பதான் வயசை பற்றி கவனிப்பாங்க. வயசுங்கிறது ஆர்வத்தையும், ஆற்றலையும் உள்ளடக்கிய விஷயம். நான் என் மனசை எப்பவும் இளமையா வெச்சுக்குவேன். வேறெந்த ரகசியமும் கிடையாது.

பாலிவுட், கோலிவுட். என்ன வித்தியாசம்?

நான் எந்த மொழியில நடிச்சாலும், நடிப்புங்கிறது ஒரேமாதிரிதான். டயலாக் பேசறப்ப மட்டும்தான் மொழி வித்தியாசம் தெரியும். பாலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டுக்கு வந்து நடிச்சதை பற்றி சொல்லணும்னா, சினிமாவுல மறுபடியும் நான் எல்லா விஷயத்தையும் கத்துக்கிட்ட மாதிரி இருக்கு.

இத்தனை வருஷ சினிமா அனுபவம் உள்ள நீங்க, படம் டைரக்‌ஷன் பண்ற ஐடியா இருக்கா?

உண்மையை சொல்றேன், படம் டைரக்‌ஷன் பண்ற அளவுக்கு என்கிட்ட திறமை கிடையாது. நிறைய படிப்பேன். நிறைய விஷயங்களை யோசிப்பேன். எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. அவங்களை கவனிச்சுக்கிற விஷயத்துல நான் பாதி டாக்டர்னு கூட சொல்லலாம். என் குழந்தைங்க தினமும் புதுசா ஒரு விஷயத்தை சொல்லித்தர்றாங்க. அவங்க கிட்ட இருந்து கத்துக்க நானும் தயாராயிட்டேன்.

தனுஷ் கூட நடிச்ச நீங்க, அவர் படங்களை பார்த்திருக்கீங்களா?

ஸாரி, நான் அதிகமா படம் பார்க்க மாட்டேன். திறமையான டைரக்டர்கள் படங்கள்ல நடிக்க வந்த வாய்ப்புகளையும் மிஸ் பண்ணியிருக்கேன்.

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை, திறமையான பல டைரக்டர்கள் இருக்காங்க. சில மலையாள படங்களை பார்த்தேன். அங்கே நிறைய திறமைசாலிகள் இருக்காங்க. ஆனா, பலபேருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கல. தனுஷ் இந்தியில நடிச்ச ‘ராஞ்சனா’ படத்தை கூட நான் பார்த்ததில்ல. ‘நான் நடிச்ச ஒரு படத்தையாவது பாருங்க மேடம்’னு அடிக்கடி தனுஷ் என்கிட்ட சொல்வார்.

நீங்க நடிச்ச ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ படம் ரீமேக் ஆகுமா?

நான் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ படத்துல நடிக்கிறப்ப, ஒரு நல்ல அழகான படத்துல ஒர்க் பண்றோம்னு மட்டும்தான் நினைச்சேன். ஆனா, அந்த படத்துக்கு இப்படியொரு அமோக வரவேற்பும், பாராட்டும் கிடைக்கும்னு கனவுல கூட நினைச்சதில்ல. அந்த படத்தை ரீமேக் பண்ண முடியாது. ஏன்னா, ஒரிஜினல் படத்தை பார்க்க இன்னும் கூட ஆடியன்ஸ் தயாரா இருக்காங்க.

சினிமாவுல புது முயற்சிகள் நிறைய வந்துக்கிட்டிருக்கு. அதுபற்றி என்ன நினைக்கிறீங்க?

இந்திய சினிமாவுக்கு இது ரொம்ப நல்ல நேரம். இங்கே புதிய முயற்சியோட வர்ற சினிமா படங்களுக்கு ஆடியன்ஸ் கிட்ட நல்ல வரவேற்பு கிடைக்குது. காதல் படங்களையும், ஆக்‌ஷன் படங்களையும் தாண்டி வித்தியாசமான கதைகளோட நிறைய படங்கள் வந்துக்கிட்டிருக்கு. அந்த படங்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைச்சிருக்கு. உலக சினிமா தரத்துக்கு இந்திய சினிமா வளர்ந்திருக்கு. அதுக்கு ‘பாகுபலி’ படம் நல்ல உதாரணம்.

இன்னமும் ரஜினிகாந்துக்கு ஜோடியா நடிக்க முடியலையேங்கிற வருத்தம் உண்டா?

நான் ‘விஐபி 2’ படத்துல நடிக்கிறப்ப, ரஜினி சாரை சந்திச்சு பேசற வாய்ப்பு கிடைக்கல. ஆனா, இதுக்கு முன்னால அவரை நேர்ல பார்த்திருக்கேன். அவருக்கு ஜோடியா நடிக்கிற சந்தர்ப்பம் கிடைச்சா, அப்ப அதுபற்றி பேசறேன்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url