டோக்லாம் பகுதியிலிருந்து வெளியேறாவிட்டால் காஷ்மீரில் தலையிடுவோம் இந்தியாவுக்கு சீனா மிரட்டல்....
பீஜிங்:
சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியான டோக்லாமிருந்து இந்திய படைகள் வெளியேறாவிட்டால், சீன ராணுவம் காஷ்மீரில் நுழைய வேண்டியிருக்கும் என சீனா பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. வடகிழக்கு மாநிலமான சிக்கிம், சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள டோகா லா பகுதி, இந்தியா-சீனா-பூடான் மூன்று நாடுகளும் சந்திக்கும் மையப்புள்ளியாக உள்ளது. இப்பகுதியை டோக்லாம் என பூடானும், டோங்க்லாங் என சீனாவும் சொந்தம் கொண்டாடுகின்றன. இந்தியா - சீனா இடையே காஷ்மீர் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலான 3,488 கி.மீ. எல்லையில், சிக்கிமில் உள்ள 220 கிமீ மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், டோக்லாம் சர்ச்சைக்குரிய பகுதியாகவே இருந்து வருகிறது.
சர்ச்சைக்குரிய இப்பகுதியில் சீனா, சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து, சாலைப் பணிகளை தடுத்து நிறுத்தியதோடு, கடந்த 3 வாரங்களாக படைகளை குவித்து முகாமிட்டுள்ளது. இதனால் டோக்லாமில் பதற்றம் நிலவி வருகிறது. இதுதொடர்பாக சீன அரசு பத்திரிகையான குளோபல் டைம்சில் ஒரு கட்டுரை நேற்று வெளியானது. அதில் கூறப்பட்டுள்ளது: நீண்டகாலமாக, சர்வதேச சமத்துவத்தையும், மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது என்பதைப் பற்றியும் இந்தியா பேசி வருகிறது. ஆனால், தற்போது டோக்லாம் பகுதியில் படைகளை குவித்து இந்தியா சர்வதேச விதிகளை கடுமையாக மீறியிருக்கிறது. பூடான் உதவி கேட்டதால்தான், இந்தியா தனது படைகளை குவித்திருப்பதாக கூறுகிறது. அப்படியென்றாலும், இந்தியா, பூடானின் வரையறுக்கப்பட்ட எல்லையில் தான் படைகளை நிலைநிறுத்தியிருக்க வேண்டும்.
அதற்கு பதிலாக சர்ச்சைக்குரிய இடத்தில் அத்துமீறக் கூடாது. எனவே, டோக்லாம் பகுதியிலிருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால், இதே போன்ற நடவடிக்கையை சீனாவும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஒருவேளை பாகிஸ்தான் எங்களிடம் உதவி கேட்கும்பட்சத்தில், சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதிக்குள் சீன படைகள் நுழைய வேண்டியிருக்கும். இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. டோக்லாம் விஷயத்தில் இந்தியா மீது சீனா குற்றம்சாட்டினாலும், முதல் முறையாக பாகிஸ்தானுடன் வைத்து காஷ்மீரை பிரச்னையில் மூக்கை நுழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியா, சீனா உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெட்லி ஆலோசனை: இதற்கிடையே, டெல்லியில் நேற்று முப்படை தளபதிகளின் இரண்டு நாள் மாநாடு தொடங்கியது. இக்கூட்டத்துக்கு இைடயே, எல்லையில் நிலவும் பதற்றம் தொடர்பாக தளபதிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.