சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையின் சுங்கக்கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் எதிர்ப்பு
சென்னை:
சென்னை கிழக்கு கடற்கரை சாலை சுங்கக்கட்டணம் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அக்கரையில் இருந்து மாமல்லபுரம் வரை 4 வழி சாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாமல்லபுரம் - புதுச்சேரி அனுமந்தை வரை இருவழிச் சாலையாகவும்மாற்றப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியின் சுங்கச்சாவடி கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை அக்கரை முதல் புதுச்சேரி அனுமந்தை வரை கார் முதல் பெரிய கனரக வாகனங்களுக்கு ரூ.47 முதல் ரூ.82 வரை ஒருவழி கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் புதிய கட்டணத்தின்படி கார் மற்றும் இலகுரக வாகனங்களுக்கு 85 ரூபாயும், சரக்கு மற்றும் வணிக வாகனங்களுக்கு ரூ.135 ரூபாயும் தற்போது வசூலிக்கப்படுகிறது. இதேபோல் பெரிய மற்றும் கனரக வாகனங்களுக்கு ரூ.250 - ரூ.450 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சுங்கச்சாவடியை மட்டும் கடந்து செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் சுங்கச்சாவடிகளில் 2002ம் ஆண்டுக்கு பிறகு தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.