இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
* 2017 மே 26ல் நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது.
* இந்த உத்தரவால் சந்தைகளில் விவசாய தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியும்.
புதுடெல்லி: இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு விதித்த மத்திய அரசின் தடை நீங்கியது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக சந்தையில் விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு கடந்த மே மாதம் அவசர அரசாணை ஒன்றை பிறப்பித்தது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும், பல விதமான போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். மேலும், ‘‘இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் மத்திய அரசின் இந்த உத்தரவை செயல்படுத்த முடியாது; அதற்கு அவசியமும் இல்லை’’ என நாட்டில் உள்ள பல மாநிலங்கள் அறிவித்துள்ளன.
மேலும், மத்திய அரசின் இந்த திடீர் ஆணையை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் உத்தரவிற்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். இதைத்தவிர கேரள மாநிலமும் மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு ஆணையை ஏற்க முடியாது என தெரிவித்தது. ஆனால், இந்நிலையில், மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்துள்ள மத்திய அரசின் உத்தரவை எதிர்த்தும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஐதராபாத்தைச் சேர்ந்த முகமது அப்துல் பகீம் குரோசி என்பவர் சார்பில், கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், “மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையானது மத சுதந்திரத்திற்கு எதிரானது. மத்திய அரசின் இந்த திடீர் உத்தரவால் விவசாயிகளுக்கு பண நெருக்கடியும், வியாபாரிகளுக்கு வாழ்வாதாரமும் பாதிப்படைந்துள்ளது.
மேலும் சட்டப்படி உணவுக்காகவோ அல்லது தெய்வத்திற்காகவோ விலங்குகளை வெட்டவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று கடந்த 1960ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட விதிகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே மத்திய அரசின் இந்த மாட்டிறைச்சி குறித்தான தடையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால் மற்றும் எஸ்.கே.கவுல், மாடுகள் விற்க மற்றும் வாங்க மத்திய அரசு கடந்த மாதம் விதித்த கட்டுப்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த நிலையில் மாட்டிறைச்சி குறித்தான பொதுநல வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதில், “மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை தளர்த்துவது குறித்து பல்வேறு தரப்பினருடன் சட்ட ரீதியான முறையில் பரிசீலனை நடந்து வருகிறது. மக்களின் கருத்துகளை கேட்டு தடையில் புதிய சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்படும்’’ என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதி வெளியிட்ட உத்தரவில், ‘‘இறைச்சிக்காக மாடுகளை விற்கும் விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட ஆணையில் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, புதிய சீர்த்திருத்தங்கள் கொண்டு வருவதாகவும், மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்தான அறிக்கையை வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இறைச்சிகளுக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு இருந்து வந்த தடை நீக்கப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக ஏற்கனவே மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த மாட்டிறைச்சியை விற்கலாம் என்ற உத்தரவு நாடு முழுமைக்கும் பொருந்தும்’’ என்றார். இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இருந்து வந்த மாட்டிறைச்சி தடை முடிவுக்கு தற்போது வந்துள்ளது.