2026ல் மக்கள்தொகையில் இந்தியா முதலிடம் பிடிக்கும் ஐ.நா. ஆய்வில் தகவல்
வாஷிங்டன்:
அடுத்த பத்தாண்டுகளில், அதாவது 2026ல் உலகிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக இந்தியா மாறும் என்று ஐ.நா.வின் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. ஐ.நா. மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது : அடுத்த பத்தாண்டுகளில், உலக அளவில் மக்கள் தொகை 730 கோடியிலிருந்து 820 கோடி வரை அதிகரிக்கும். இதில் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவின் மக்கள்தொகை மட்டும் 56 சதவிகிதம் உயரும்.
அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 15 கோடி வரை உயரும். மக்கள்தொகை பெருக்கத்தில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளும். 2026ல் அதிக ஜனத்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும். இதனால் இந்தியா மற்றும் ஆப்ரிக்கா, தனது உற்பத்தி மூலம் உலக தேவையை பூர்த்தி செய்யும் நாடுகளாக உருவாகும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா பால் மற்றும் கோதுமை உற்பத்தியில் அதீத வளர்ச்சியடையும். 2026ல் இந்தியாவின் பால் உற்பத்தி 49 சதவிகிதம் அதிகரிக்கும். அதாவது பால் உற்பத்தி மும்மடங்கு அதிகரிக்கும். இதேபோல இந்தியாவின் கோதுமை உற்பத்தி 11 சதவிகிதம் அதிகரிக்கும்.