விளையாட்டு ஆணையம் பாராமுகம் உலக பாரா நீச்சல் போட்டியில் பங்கேற்க கடன் வாங்கிய வீராங்கனை



புதுடெல்லி:

 பெர்லினில் சமீபத்தில் நடைபெற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா நீச்சல் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்ற 6 இந்திய வீரர்கள், தங்களுடைய சொந்த பணத்தைக் கொண்டு போட்டியில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். 2017ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் உலக பாரா நீச்சல் போட்டி பெர்லினில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஒரு வீராங்கனை உள்பட 6 பேர் கலந்து கொண்டனர். பார்வையிழந்த காஞ்சனமாலா பாண்டே, இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில், 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, இந்தப் போட்டியில் தான் கலந்துக் கொண்டதாக காஞ்சனமாலா பாண்டே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘இத்தகைய பிரச்னைகளை நான் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியே நான் இந்தப் போட்டியில் கலந்து கொண்டேன். இதுமட்டுமின்றி, என்னுடன் வந்த பயிற்சியாளர் போட்டி நடந்தபோது மாயமாகி விட்டார். போட்டிக்கு உடன் வருவதற்கு அவர் பணம் தர வேண்டுமென்று கேட்டார். எனக்கு சிறிதும் உதவவில்லை. என் கையில், சிறிதும் பணமின்றி, நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு செல்வதற்காக ரயிலில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்தேன். டிக்கெட் பரிசோதகர், என்னை சோதனை செய்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்’ என்றார்.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக விளையாட்டு ஆணையம் பணம் ஒதுக்கியுள்ள போதிலும், வீரர்களுக்கு பணம் தரப்படவில்லை. இதுகுறித்து பேசிய பாரா ஒலிம்பிக் கமிட்டி துணை தலைவர் குருசரண் சிங், ‘ஆணையம் சரியான நேரத்தில் நிதி ஒதுக்கவில்லை. இதனால் நீச்சல் வீரர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பணம் தர முடியவில்லை. ரூ.33.16 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், ஏற்பாட்டாளர்கள் ரூ.66.32 லட்சம் கேட்டனர். பெர்லினில் தங்களது சொந்த பணத்தை செலவிட்ட நீச்சல் வீரர்கள், பணத்தை திரும்பப் பெற வழிவகை செய்யப்படும்’ என்றார்.
ஒலிம்பிக் நாயகன் அபினவ் பிந்த்ரா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘இதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து தெளிவான விசாரணை வேண்டும்’ என்று தகவல் பதிந்துள்ளதுடன் அதை பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் விஜய் கோயலுக்கும் அனுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள விஜய் கோயல், விளையாட்டு ஆணையத்திலிருந்து பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url