பெண் குழந்தைகளை ஆதரியுங்கள்...
மோகா: ‘பெண் குழந்தைகளை ஆதரித்து ஊக்குவித்தால் மகத்தான சாதனை படைப்பார்கள்’ என்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதியில் அதிரடியாக 171* ரன் விளாசிய துணை கேப்டன் ஹர்மான்பிரீத் கவுரின் தாயார் கூறியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 2வது அரை இறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நேற்று முன்தினம் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், முதலில் பேட் செய்த இந்தியா 42 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன் குவித்தது.
நான்காவது வீராங்கனையாக களமிறங்கி ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்த துணை கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் 115 பந்தில் 20 பவுண்டரி, 7 சிக்சர் உட்பட ஆட்டமிழக்காமல் 171 ரன் விளாசி ஸ்தம்பிக்க வைத்தார். அடுத்து 42 ஓவரில் 282 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 40.1 ஓவரில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாக வெளியேறியது. 36 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்திய இந்திய அணி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை சந்திக்கிறது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை தனது அதிரடி ஆட்டத்தால் மிரட்டி விரட்டி சிறந்த வீராங்கனை விருது பெற்ற ஹர்மான்பிரீத் கவுருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
பஞ்சாப் மாநிலம் மோகா நகரில் பிறந்த ஹர்மான்பிரீத் (28 வயது), தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இந்தியன் ரயில்வே ஊழியர். அப்பா ஹர்மிந்தர் சிங் புல்லார் வாலிபால் மற்றும் கூடைப்பந்தாட்ட வீரர் என்பதால், சிறுவயதில் இருந்தே ஹர்மான்பிரீத் விளையாட்டில் ஈடுபடுவதை ஊக்குவித்துள்ளார். பள்ளி அணிக்காக விளையாடியவர் படிப்படியாக உயர்ந்து இன்று ஐசிசி உலக கோப்பையில் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு தகுதிபெற வைத்து அசத்தியுள்ளார்.
ஹர்மான்பிரீத்தின் அமர்க்களமான ஆட்டம் குறித்து அவரது தாயார் கூறுகையில், ‘பெண் குழந்தைகளை ஆதரித்து ஊக்கமளிக்க வேண்டும். அவர்களைக் கருவிலேயே அழித்துவிடக் கூடாது. இன்று என் மகள் தேசத்தை பெருமைகொள்ள வைத்தது போல மற்ற சிறுமிகளும் சரியான ஆதரவு கிடைத்தால் நிச்சயம் சாதிப்பார்கள். இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்’ என்றார்.