உள்ளாட்சி தேர்தல் ஆகஸ்ட் 31க்குள் நடத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அட்டவணையை வரும் 26ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டது.
தமிழகத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 17, 19 தேதிகளில் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட போதிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை. எனவே தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருபாகரன், தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ததுடன், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்கக்கூடாது என மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் பாடம் நாராயணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு காலக்கெடுவை நிர்ணயிக்கக்கோரி ஆர்.எஸ்.பாரதி மேலும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வக்கீல் என்.எல்.ராஜா ஆஜராகி, தனி அதிகாரிகள் நியமனம் செய்வதால் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதை தமிழக அரசு தள்ளிப்போடுகிறது. உள்ளாட்சி அமைப்புகளை தனி அதிகாரிகளால் நிர்வாகம் செய்ய முடியாது என்று வாதிட்டார்.
திமுக சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, அக்டோபர் மாதம் காலாவதியான உள்ளாட்சி அமைப்புகள் பதவியை இதுவரை நிரப்பாமல் இருக்கிறார்கள். தேர்தலை நடத்தக்கோரி நாங்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் மே 14ம் தேதிக்குள் தேர்தலை நடத்துமாறு உத்தரவிட்டது. ஆனால், அதையும் தமிழக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் அமல்படுத்தவில்லை. ஜூலை 31ம் தேதிக்குள் தேர்தலை நடத்துவோம் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்தது. அந்த உத்தரவாதத்தையும் செயல்படுத்தவில்லை. இப்போது, தனி அதிகாரிகளை நியமித்து தேர்தலை தள்ளிவைத்து வருகிறது என்றார்.அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜாரன மூத்த வக்கீல் பி.குமார் வாதிடும்போது, உச்ச நீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தொகுதி மறுவரையறை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. தொகுதி மறுவரையறை செய்வதற்காக தமிழக அரசு குழு அமைத்துள்ளது என்றார்.இதைக்கேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தக்கூடாது என்று கூறியுள்ளதா? என்று கேட்டனர்.
அப்போது, மூத்த வக்கீல் பி.வில்சன் நீதிபதிகளிடம், எந்த நீதிமன்றத்திலும் அப்படி ஒரு தடையாணையோ, அறிவுறுத்தலோ இல்லை. நாங்கள் கோருவது எல்லாம் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான். ஆனால், தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தேர்தலை தள்ளிப்போடுவதிலேயே கவனமாக உள்ளனர். இதைக்கேட்ட நீதிபதிகள், எந்த நீதிமன்றத்திலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில் உள்ளாட்சித் தேர்தலை ஏன் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் நடத்தக்கூடாது என்று மாநில தேர்தல் ஆணைய வக்கீலிடம் கேட்டனர். அதற்கு மாநில தேர்தல் ஆணைய வக்கீல்கள் தொகுதி வரையறை பணிகள் தொடங்கியுள்ளது என்றார். இதை ஏற்காத நீதிபதிகள், தேர்தலை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் நடத்துமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தினர். மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அட்டவணையை வரும் 26ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை வரும் 26ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.