சலுகை பெற சசிகலா 2 கோடி லஞ்சம் தந்த குற்றச்சாட்டு சிறையில் சிறப்பு குழு விசாரணை: வீடியோ காட்சிகள் அழிக்கப்பட்டதா என ஆய்வு
பெங்களூரு:
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்க உயரதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டகுழு சிறையில் நேற்று விசாரணையை துவக்கியது.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொது செயலாளர் சசிகலாவுக்கு சிறப்பு மருத்துவம், அறையில் வசதிகள், பணியாட்கள் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக அவர் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதே போன்று முத்திரைத்தாள் மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெல்கிக்கு அவரது அறையில் பிரத்யேக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சிறை முறைகேடுகள் குறித்து தொடர்ச்சியாக வந்த புகார்களை தொடர்ந்து சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறை விதிகள் மீறி சில கைதிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதை கண்டறிந்து அம்பலப்படுத்தினார். டிஐஜி ரூபாவின் இந்த நடவடிக்கை மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதையடுத்து முறைகேடு குறித்து விசாரணைநடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து குற்றச்சாட்டுக்குள்ளான சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணா, சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், முறைகேட்டை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபா உள்பட 6 பேரை அரசு பணியிட மாற்றம் செய்தது. டிஐஜி ரூபா பணியிட மாற்றத்தை கண்டித்து சிறை கைதிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதனால் நேற்று முன் தினம் விசாரணை குழுவினர் சிறைக்கு சென்று ஆய்வு செய்ய முடியவில்லை. சிறையில் நேற்று அமைதி திரும்பியதால் பிற்பகல் 2.30 மணிக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழுவினர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றனர்.
வினய்குமாருடன் பெங்களூரு குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவி, மைசூரு சிறைத்துறை எஸ்.பி ஆனந்தரெட்டி ஆகியோர் சென்றனர். 3 பேரும் சிறைத்துறையில் பணியில் இருக்கும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். குறிப்பாக எஸ்.பி அனிதாராயிடமிருந்து விசாரணை தொடங்கப்பட்டது. அவரை தொடர்ந்து, பிற அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் கொடுத்த தகவல்களை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இதையடுத்து சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று அங்கு ஆய்வு செய்தனர். அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சிறையில் இருக்கும் கைதிகள் மற்றும் யார், யார் எங்கெங்கு அடைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை கேட்டறிந்து கொண்டனர். மேலும் ரூபா அறிக்கையில் கூறியிருந்த 7 மற்றும் 8ம் நம்பர் சி.சி.டி.வி கேமராக்களை பார்வையிட்டு, அவை சரியாக செயல்படுகிறதா என்று ஆய்வு செய்தனர்.
இதையடுத்து விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அறைகளை பிளாக் வாரியாக சென்று வினய்குமார் குழுவினர் பார்வையிட்டனர். அப்போது வினய்குமாருடன் சிறைத்துறை அதிகாரிகளும் சென்றனர். அவர்களிடம் கைதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் கைதிகளின் தேவைகள் என்னென்ன என்பது குறித்து வினய்குமார் கேட்டறிந்தார். அவரின் ஒவ்வொரு கேள்விக்கும் சிறைத்துறை அதிகாரிகள் பதில் அளித்தனர். அதனை உடன் இருந்த அதிகாரிகள் குறித்து வைத்துக் கொண்டனர். தொடர்ந்து தண்டனை கைதியாகவுள்ள சசிகலா அறையை வினய்குமார் ஆய்வு செய்தார். சிறை முழுவதையும் பார்வையிட்ட அவர், அங்கு பாதுகாப்பிற்கு நின்ற காவலர்களிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இது தவிர மீடியாக்களில் வெளியான இடங்களையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் சசிகலா அறையில் உள்ள சி.சி.டி.வி கேமரா செயல்படுகிறதா, முந்தைய காட்சிகள் பதிவாகியிருக்கிறதா என்பதை ஆய்வு செய்து குறிப்பெடுத்துக் கொண்டார்.
இதுதவிர சசிகலா சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்தாரா, அதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பன உள்பட தகவல் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சசிகலாவின் அறையில் இருந்த காவலாளிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் கொடுத்த தகவலை பதிவு செய்து கொண்ட வினய்குமார், சிறைத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவல்களை அறிக்கையில் சேர்த்துக் கொள்ளும்படி கூறினார்.இதற்கிடையில் அறையை ஆய்வு செய்ய சென்றபோது, அங்கிருந்த சசிகலாவை அவர் பார்த்தார். ஆனால் பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோன்று சசிகலாவின் உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன், முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தெல்கி உள்பட குற்றச்சாட்டிற்கு உள்ளான அனைத்து கைதிகளின் அறைகளையும் வினய்குமார் குழு பார்வையிட்டு விசாரணை நடத்தியது.
இறுதியாக அனைத்து அதிகாரிகளையும் ஒன்றாக அழைத்த வினய்குமார், சிறையில் நடந்த போராட்டம் மற்றும் அதற்கான காரணம். கைதிகள் மீது நடந்த தாக்குதல், எத்தனை கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர், அவர்கள் விவரங்கள் உள்பட பல தகவல்களை கேட்டறிந்து டைரியில் குறித்துக் கொண்டார்.
சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் முறைகேடுக்கு தொடர்புடைய பல்வேறு தகவல்கள் வினய்குமாருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. சுமார் 5.30 மணியளவில் விசாரணை முடிவடைந்த நிலையில் அவர் சிறையில் இருந்து வெளியேறினார். வினய்குமார் வருகையையொட்டி சிறையில் முன்கூட்டியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பல ஆவணங்கள் சிக்கின
ஆய்வை முடித்த வினய் குமார் கூறியதாவது: விசாரணை முடிந்துள்ளது. பல்வேறு ஆவணங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது. அவை அனைத்தும் அறிக்கையாக தயாரிக்கப்படும். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினோம். யாரிடம் விசாரணை நடத்தினோம், எப்பொழுது விசாரணை முடிவடையும், என்ன ஆவணங்கள் கைப்பற்றினோம் என்பதுபற்றி கூற முடியாது.
முதற்கட்ட அறிக்கை இன்னும் 2, 3 நாட்களில் உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்படும். உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்த பின்னர் விசாரணை குறித்த முழு விவரங்களும் தெரியவரும். தற்போது உள்ள தகவலை விட மேலும் சில ஆதாரங்கள், ஆவணங்கள் தேவைப்பட்டால், மீண்டும் சிறைக்கு வந்து விசாரிப்போம்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
கர்நாடக மாநில சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பியாக பொறுப்பேற்றுள்ள என்.எஸ் மெஹரிக் நேற்று அனைத்து அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது சிறைத்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டே அனைவரும் நடந்து கொள்ளவேண்டும். கைதிகள் அனைவரையும் விதிமுறைப்படியே நடத்தவேண்டும். யாருக்கும் சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்க கூடாது. சிறை நடைமுறைகளை மீறி யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கைதிக்கு ரகசிய சிகிச்சை
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் முன்னாள் டி.ஐ.ஜி ரூபாவிற்கு ஆதரவாக போராட்டம் நடத்திய 32 கைதிகளை சிறைத்துறை அதிகாரிகள் அடித்து உதைத்து இரவோடு இரவாக வேறு சிறைகளுக்கு மாற்றினர். ஆனந்தமூர்த்தி, பாபு உள்பட 3 பேர் பெலகாவி சிறைக்கு மாற்றப்பட்டனர். இவர்களை போலீசார் மர்ம உறுப்பில் தாக்கியதில் 3 பேருக்கும் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
நேற்று ஆனந்தமூர்த்தியின் நிலை கவலைக்கிடமானது. வேதனையில் துடித்த அவரை போலீசார் உடனே அங்கிருந்து, பிரபல தனியார் மருத்துவமனைக்கு ரகசியமாக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த பின்னர், யாருக்கும் தெரியாமல், சிறைக்கு அழைத்து வந்தனர்.
பாஜ போராட்டம்
டி.ஐ.ஜி ரூபா இடமாற்றத்தை கண்டித்து நேற்று பாஜ சார்பில் பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் எடியூரப்பா தலைமையில் போராட்டம் நடந்தது. இவருடன் பாஜ எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ரூபாவிற்கு எதிராக செயல்பட்ட மாநில அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதை போன்று பாஜ மாநில தலைவர் எடியூரப்பாவின் கோரிக்கையை ஏற்று, மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக பாஜவினர் போராட்டம் நடத்தினர்.