தமிழகம் முழுவதும் பரவுகிறது டெங்கு: 4,000க்கும் அதிகமானவர்களுக்கு சிகிச்சை
* நாடு முழுவதும் டெங்குகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் அதிகபட்சமாக இந்த ஆண்டு 126 பேர் பலியாகி விட்டனர்.
* கேரளாவில் கடந்த 6 மாதத்தில் 13.5 லட்சம் பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8171 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில்டெங்கு காய்ச்சல் இந்தாண்டு வேகமாக பரவி வருகிறது. இது தமிழக சுகாதாரத்துறை சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்குவின் பாதிப்பு தீவிரமாக இருப்பதாகவும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுவதாகவும் கணக் கிடப்பட்டுள்ளது. நாகர்கோவில்: கேரளாவை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தக்கலை அரசு மாவட்ட மருத்துவமனையில் 31 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 7 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.
இதற்கிடையே இரணியல் அருகே இலுப்பவிளை பகுதியில் உள்ள கணேசன் என்பவரது மகன் பர்ஷன் (6) கடந்த 7ம் தேதி காய்ச்சல் காரணமாக நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இறந்தான். டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியானதாக அந்த பகுதியினர் தெரிவித்தனர். கோவையில் விவசாயி பலி: கோவை மதுக்கரை பாலத்துறை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்(32). விவசாயி. இவர்காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று முன்தினம் மாத்திரை சாப்பிட்டுவிட்டு வீட்டில் மயக்கம் அடைந்து விழுந்தார். உறவினர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவருக்கு டெங்கு அறிகுறி இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
திருச்சியில் சிறுமி பலி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சேந்தமாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் போதும் பொண்ணு (37). கணவனை இழந்தவர். இவரது மகள் ஐஸ்வர்யா (14), 8ம் வகுப்பு படித்து வந்தார். சில தினங்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று ஐஸ்வர்யா இறந்தார். நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 4 மாதத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர். பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறுகையில், பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். இன்னும் இரண்டு மாதங்களில் காய்ச்சல் பாதிப்புகள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் என்றார்.