மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட கிழக்கு நாடுகளுக்கு செல்ல ரூ.1,630 கோடியில் சாலை
புதுடெல்லி:
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதாரத்துக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவற்றின் விவரம் வருமாறு: ஆ்ந்திரா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, உத்தர பிரதேச மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில், முதல் கட்டமாக மங்களகிரி (ஆந்திரா), கல்யாணி (மேற்கு வங்்கம்), நாக்பூரில் (மகாராஷ்டிரா) ரூ.4,949 கோடியில் மருத்துவமனை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிகளை கவனிப்பதற்காக, இந்த மருத்துவமனைகளுக்கு 3 இயக்குனர்கள் பதவிகளை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.25 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய போலீஸ் படையில் பணியாற்றும் டாக்டர்களின் ஓய்வு வயது 60 ஆக உள்ளது. இதை 65 ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. பாலஸ்தீனம், ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் சுகாதாரம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட ஒப்புதல் தரப்பட்டது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 90 சதவீதம் கடுமையான மலைப் பாதைகளை கொண்டது. இம்மாநிலத்தில் சாலை வசதியை மேம்படுத்தும் வகையில் இம்பால் - மோரே இடையே 65 கிமீ தூரத்துக்கு ரூ.1,630 கோடி செலவில் சாலையை அகலப்படுத்தி, மேம்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த சாலை திட்டம், இந்தியாவை மியான்மருடன் இணைக்கும்.
அங்கிருந்து தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசிய நாடுகளுக்கு சாலை மார்க்கமாக செல்ல முடியும். ஆசிய தேசியசாலை திட்டத்தின் கீழ் இது நிறைவேற்றப்படுகிறது. இந்த சாலையின் மூலம் கிழக்கு நாடுகளுடனான வர்த்தகம் அதிகமாகும்.