தற்காலிக ஊழியர்கள் பிரச்னையை தீர்க்கக் கோரி அஞ்சல் ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்
சென்னை :
அஞ்சல்துறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் ெசய்கின்றனர். கேரளா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் தற்காலிக ஊழியர்களுக்கு 6, 7 வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ்ஊதியம் உயர்த்தப்பட்டு விட்டது. ஆனால் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மட்டும் தற்காலிக இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. அதனால் தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம்(என்எப்பிஈ) சார்பில் ஜூலை 13ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர்.
மேலும் வேலை நிறுத்த அறிவிக்கையையும் முறைப்படி தமிழ்நாடு அஞ்சல் வட்ட அதிகாரிகளிடம் வழங்கினர். இந்நிலையில் அறிவித்தபடி நாளை தமிழ்நாடு முழுவதும் அஞ்சல்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று என்எப்பிஈ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்துறை ஊழியர்களில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் என்எப்பிஈ தொழிற்சங்கத்தில் இருப்பதால் வேலை நிறுத்தம் காரணமாக நாளை கடிதப்பட்டுவாடா, கடிதங்கள் சேகரிப்பு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படலாம். இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக மத்திய அரசு ஊழியர்கள் அண்ணாசாலை அஞ்சலகம் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இந்நிலையில் தொழிலாளர் ஆணையர் தலைமையில் நேற்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை நிர்வாகம் உரிய பதில் அளிக்காததால் நடைபெற வில்லை. அதனால் இன்று புதன்கிழமை நிர்வாகமும், தொழிற்சங்க நிர்வாகிகளும் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.