இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்
லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாகார் சமான் 114, அசார் அலி 59, முகமது ஹபீஸ் 57,பாபர் ஆஸம் 46 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார், பாண்டியா, கேதர் ஜாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கத்திலிருந்தே பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகள் மளமளவென சரியத்தொடங்கியது. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒரு கட்டத்தில் 72 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை தனது அதிரடியால் சரிவிலிருந்து மீட்டெடுத்தார் பாண்டியா.
76 ரன்கள் குவித்த நிலையில் துரதிஷ்டவசமாக பாண்டியா ரன் அவுட் ஆனதால் இந்திய அணியின் தோல்வி உறுதியானது. பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 158 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாக்கிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக பாண்டியா 76, யுவராஜ் 22, தவான் 21 ரன்கள் எடுத்தனர் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆமீர் 3 விக்கெட்டுகளும், ஹசன் அலி,சதாப் கான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி பாகிஸ்தானின் வெற்றிக்கு வித்திட்டனர்.