ஜிஎஸ்டிக்கு முன்பு கார் வாங்கினால் எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்?
புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு முடிவு செய்யும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இதில், கார்களுக்கு உச்சபட்ச ஜிஎஸ்டியான 28 சதவீதம் மற்றும் செஸ் வரியாக கார்களுக்கு ஏற்ப 1 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 1,200 சிசிக்கும் குறைவான சிறிய ரக பெட்ரோல் கார்களுக்கு 1 சதவீத செஸ், 1,500 சிசிக்கு குறைவான டீசல் கார்களுக்கு 3 சதவீத செஸ், 1,500 சிசிக்கு மேல் உஉள்ள கார்கள் மற்றும் 4 மீட்டர் நீளத்துக்கு மேல் உள்ள எஸ்யுவி கார்களுக்கு 15 சதவீத செஸ் விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டிக்கு பிறகு சிறிய ரக கார்கள் விலை சிறிதளவு உயரலாம். சொகுசு கார்கள் விலை குறையும் என ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், பழைய ஸ்டாக்குகளை தீர்க்க நிறுவனங்கள் இப்போதே தள்ளுபடியை வாரி வழங்கி வருகின்றன.
கார்களுக்கு ஏற்ப சுமார் ரூ.15,000 முதல் ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடிகளை டீலர்கள் அறிவித்துள்ளனர். மாருதி சுசுகி டீலர்கள் ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை தள்ளுபடி அறிவித்துள்ளனர். அதிக பட்ச தள்ளுபடி இதன் துவக்க ஹெட்ச்பேக் மாடலான ஆல்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மகிந்திரா நிறுவனம் ஸ்கார்ப்பியோ முதல் எக்ஸ்யுவி 500 வரை ரூ.27,000 முதல் ரூ.90,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. ஹூண்டாய் மோட்டார் எலைட் ஐ20, எக்சென்ட்க்கு ரூ.25,000, பிரிமியம் எஸ்யுவியான சண்டாபேக்கு ரூ.2.5 லட்சம் தள்ளுபடி அறிவித்துள்ளது. இதுதவிர என்ட்ரி லெவல் மாடலான இயானுக்கு ரூ.45,000, கிராண்ட் ஐ10 ரூ.73,000, வெர்னாவுக்கு ரூ.90,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவன கார்களுக்கு பிரையோ ரூ.14,500, அமேஸ் ரூ.50,000, ஜாஸ் ரூ.17,000 மற்றும் பி-ஆர்விக்கு ரூ.60,000 என சிறப்பு திட்டங்களின் கீழ் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. போர்டு இந்தியா நிறுவனம் காப்பாக்ட் எஸ்யுவி ஈகோ ஸ்போர்ட், ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையிலும், ஆஸ்பையர், பிேகா ஆகியவற்றுக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரையிலும் தள்ளுபடி அளிக்கிறது. நிசான் நிறுவனம் எஸ்யுவி டெரானோவுக்கு ரூ.80,000 வரையிலும், சிறிய ரக காரான மைக்ராவுக்கு சுமார் ரூ.25,000 தள்ளுபடி வழங்குகிறது. இதுகுறித்து ஆட்டோமொபைல் நிறுவனத்தினர் கூறுகையில், ‘‘கார் வாங்க வேண்டும் என திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் பலர், ஜிஎஸ்டி அறிவித்த பிறகு தங்கள் முடிவை தள்ளிப்போட்டுள்ளனர். குறிப்பாக இவர்களை ஈர்க்க இந்த சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஜிஎஸ்டிக்கு முன்பு கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் சிறந்த பலன் மற்றும் சலுகைகளை பெறுவார்கள். தள்ளுபடிகள் அந்தந்த மாடல்களுக்கு ஏற்ப வேறுபடும்’’ என்றனர். இதுபோல் டூவீலர்களும் சுமார் ரூ.4,500 வரை சலுகைகளை வழங்கியுள்ளன. சொகுசு கார் நிறுவனங்கள் ஏற்கெனவே தள்ளுபடியை அறிவித்துள்ளன. சொகுசு கார்களை பொறுத்தவரை தற்போது உள்ள வரியை விட ஜிஎஸ்டியில் வரி குறைவு. இதனால் இவற்றின் விலை குறையும்.