அழியும் அமேசான் காடுகள்... இவர்களால் மட்டும்தான் காப்பாற்ற முடியும்!




அந்த தேசத்தில் மரம் வளர, வளர அவை வேரோடு பிடுங்கி எறியப்படும். இருந்தும்... பூமி மீண்டும், மீண்டும் விதைகளை இட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், இப்போது அப்படியில்லை. பூமித்தாய்க்கு அத்தனை தெம்பிருப்பதில்லை இப்போது. அதனால், விட்டுவிட்டாள். இருப்பதைக் காத்து, வாழ்ந்துக் கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டாள். ஆனால், அங்கிருக்கும் பலருக்கும் அது இன்னும் புரியவில்லை. இங்கிருக்கும் பலருக்கும் கூட... அதைப் புரியவைக்க, பூமிக் கொடுத்த அந்தக் காட்டை காத்திட, துளிர் கொண்டு பல போராளிகள் கிளம்புவார்கள். அவர்களை நடு ரோட்டில், நடு காட்டில், நடு வீட்டில் வெட்டிக் கூறுபோடுவார்கள் . மீண்டும் வேறு போராளிகள் கிளம்புவார்கள். இப்போதும் அப்படித்தான்... ஒரு பெரும் சிக்கலில் சிக்கியிருக்கிறது அந்த தேசம்... அதன் காடுகள்... அந்த  மரங்கள்... எல்லாமே. அந்த தேசம் பிரேசில்... அதன் காடுகள் அமேசான்.

அழிக்கப்படும் அமேசான் காடுகள்\


அமேசானில் கடந்த 29 ஆண்டுகளில் அழிக்கப்பட்ட காட்டின் பரப்பளவை இப்படி எளிதாகச் சொல்லலாம். ஜெர்மனி என்ற தேசத்தின் நிலப்பரப்பைவிட, அதிகமான நிலப்பரப்பிலான காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இது கற்பனைக் கணக்கல்ல. பிரேசில் அரசாங்கம் சொல்லியிருக்கும் கணக்கு. உலகின் மிகப் பெரிய காடான அமேசானைக் கொண்டிருக்கும் பிரேசிலில், வனம் , பழங்குடிகள், இயற்கை அழிப்பு குறித்த பிரச்னைகள் ஏராளம். அதே சமயம், இந்தப் பிரச்னைகளுக்கான முன்னோடித் தீர்வும் அந்த தேசத்திலேயே இருக்கிறது. ஆனால், அதை சாத்தியப்படுத்த பெரும் பணத்தாசையும், வெறும் அரசியல் ஆசையும் முட்டுக்கட்டைப் போட்டிருக்கின்றன.
காட்டின் வளங்கள் பணத்திற்காக சூறையாடப்படுகின்றன. காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு, அங்கு பணப்பயிர்களான சோயாவும், யூகலிப்டஸும் நடப்படுகின்றன. இன்னும் பல பகுதிகளில் கால்நடை வளர்ப்பிற்காக காடுகளை அழிக்கிறார்கள். இப்படித்தான் இந்தப் பிரச்னைத் தொடங்கி இன்று விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

அழிக்கப்படும் அமேசான் காடுகள்

1988ல் ராணுவ ஆட்சி கவிழ்க்கப்பட்டு, புதிய அரசாங்கம் ஆட்சியைப் பிடிக்கிறது. அந்த சமயத்திலேயே பல பழங்குடியினங்கள் தங்களுக்கான நில உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். மிகச் சில இனங்களுக்கு, சில நிலங்களைப் பிரித்துக் கொடுக்கிறது அரசாங்கம். அப்படி "அபுரினா" என்ற பழங்குடி இனத்துக்கு "ரிசெர்வ் 124" ( Reserve 124 ) என்ற காட்டுப் பகுதியைப் பிரித்துக் கொடுக்கிறது. இங்கு 800 அபுரினா மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். தங்கள் காட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். மரங்களுக்கிடையே சில ஊடு பயிர்களைப் போட்டு விவசாயம் செய்கிறார்கள். மீன் பிடித் தொழிலில் ஈடுபடுகிறார்கள். வெற்றிகரமான தற்சார்பு வாழ்வை வாழ்கிறார்கள். பழங்குடிகளிடம் காட்டைக் கொடுத்தால் என்னவாகும் என்பதற்கான ஒரு வெற்றிக் கதை இந்த " ரிசெர்வ் 124 ".

அமேசான் பூர்வகுடிகள் தான் காடுகளைக் காப்பாற்ற முடியும்

பிரேசிலில் கிட்டத்தட்ட 9 லட்சம் பூர்வகுடி மக்கள் இருக்கின்றனர். முப்பதாண்டுகளுக்கும் மேலாக நில உரிமைகளுக்காக இவர்கள் போராடி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர் அரசாங்கம், பழங்குடிகளுக்கான நிலப் பகிர்விற்கென தனிப் பிரிவை உருவாக்கியது. ஆனால், ஊழல் கறைபடிந்த அதிகாரிகளினாலும், "க்ரிலெய்ரஸ்" (Grileiros) எனப்படும் பெரும் நிலக்கிழார்களின் ஆதிக்கத்தினாலும் பழங்குடிகளுக்கான நில உரிமை அளிக்கப்படவில்லை. சமீபகாலமாக பிரேசிலில் அதிகப்படியான அரசியல் சிக்கல்களும், நிலையற்ற ஆட்சிகளும் இருந்து வருவதால் பிரேசிலின் அமேசான் காடுகள் மிகப் பெரிய அழிவினை எதிர்நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன.

2015ம் ஆண்டைக் காட்டிலும் 2016ல் காடுகள் அழிப்பு 29 சதவீதம் உயர்ந்துள்ளது. 2012ம் ஆண்டோடு இதை ஒப்பிட்டால் 75 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம், சில அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பிரேசிலில் மேற்கொண்ட ஆராய்ச்சியில், பழங்குடிகளுக்கு உரிமைக் கொடுக்கப்பட்ட நிலங்களின் காடுகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தனியார் நிறுவனங்களுக்கும், பண்னையார்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் காடுகள் பெரும் அழிவை சந்தித்திருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமேசான் பூர்வகுடிகள் தான் காடுகளைக் காப்பாற்ற முடியும்

மேலும், இமேசான் எனும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தனியாரிடம் இருக்கும் காடுகள் 59% அளவிற்கு அழிவுகளை சந்தித்துள்ளன. அதுவே, பழங்குடிகளிடம் இருக்கும் காடுகள் 27% அளவிற்கான அழிவை மட்டுமே சந்தித்திருப்பதாக சொல்லியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், பிரேசிலின் காடுகளுக்காக குரல் கொடுக்கும் போராளிகள் படுகொலை செய்யப்படுவது, பிரேசிலின் வரலாற்றில் சிகப்பு பக்கங்களாக நிறைந்துக் கிடக்கின்றன. 1988ல் உலகை உலுக்கிய சிக்கோ மென்டிஸின் படுகொலையில் தொடங்கி, இன்று பிரேசிலின் வடகிழக்குப் பகுதிகளில் நாளொன்றுக்கு 16 கொலைகள் என்ற வீதத்தில், கொலைகள் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன.

இப்படியாக பல்வேறு பிரச்னைகளில் பிரேசில் சிக்கித் தவித்தாலும், அது தன் காடுகளையும், இயற்கை வளங்களையும் பத்திரமாய்ப் பாதுகாக்க ஓர் எளிய வழியிருக்கிறது. அது, பழங்குடிகளிடம் காடுகளை ஒப்படைப்பதுதான். குறைந்தபட்சம் பழங்குடிகளுக்கு, அவர்களுக்கான நில உரிமைகளைக் கொடுத்தாலே போதும், அவர்கள் தாராளமாக தங்கள் காடுகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்வார்கள் என்பதே அந்நாட்டின் சமூக ஆர்வலர்களின் கருத்தாகவும், ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url