புற்றுநோய் ஏன், எப்படி..? தவிர்க்கும் வழிமுறைகள்!
செல்களின் கூட்டமைப்பில் உருவானதே மனித உடல். நவரசங்களையும் எண் சுவைகளையும், ஆயற் கலைகளையும் அனுமதிப்பது செல்கள். இந்தக் கூட்டமைப்பில் சிக்கல் இல்லாதவரைதான் ஊரை அடித்து உலையில் போடுவதும், ஏறி மிதித்து முன்னேறிச் செல்வதெல்லாம் நிகழும். உடலில் உருவாகும் செல்களுக்கு பிறப்பு, இறப்பு என வளர்ச்சியின் காலகட்டங்கள் இருக்கின்றன. அது தவறும்போது நோய் ஏற்படுகிறது. அதிலும் பல ஆண்டுகளாக மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது புற்றுநோய் (Cancer). புற்றுநோய் என்பது தொற்றுநோய் அல்ல. ஆரம்பக்கால நோயை முற்றிலுமாக குணப்படுத்தலாம் என்கின்றனர் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்கள். மாறிவரும் ரசாயன உலகில் புதிது புதிதாக நோய்கள் வரத்தான் செய்கின்றன. அதேநேரத்தில் அதைப் பற்றிய விழிப்புணர்வும், அடிப்படைத் தெளிவும், தற்காப்பு அக்கறையும் இல்லாமல் அதிலிருந்து தப்பிக்க முடியாது. குறைந்தபட்சம் கேன்சர் எனப்படும் புற்றுநோய் என்றால் என்ன? என்பதையாவது நாம் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.


புற்றுநோய்


 


ஆரோக்கியமான செல், உடல் இயக்கத்துக்கான செம்மையான பணியை முடித்து, பின் இறந்து, அடுத்த செல் வளர வேண்டும். இதுதான் செல்களின் இயல்பான வேலை. அப்படி அல்லாமல், புதிது புதிதாக அதீத வளர்ச்சியில் கட்டுப்பாடற்று செல்கள் உருவாகி பிறகு கட்டிகளாகும். இப்படியாக கட்டுப்பாடில்லாமல் பிரிந்து பிரிந்து வளர்ச்சியடையும் செல்கள் திசுக்கட்டிகளாக ( Lumbs or Masses) மாறுகின்றன. ஒன்று தீமை விளைவிக்காத கட்டி (Benign Tumor) மற்றொன்று புற்றாக மாறக்கூடிய கட்டி (Malignant tumor) உடலில் தோன்றும் எல்லாக் கட்டிகளையும் புற்றுநோயாக கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. ஆனால், பினைன் கட்டிகள், மெலிங்னென்ட்டாக மாற வாய்ப்பிருக்கிறது.


புற்றுநோய்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. உடல் உறுப்புகளில் எந்தெந்த இடங்களில் இவை தோன்றுகிறதோ அதற்குத் தகுந்தாற்போல வகைப்படுத்தப்பட்டுள்ளன. கேன்சர் செல்களானது, ஜீரண மண்டலம், ரத்தஓட்டம் மற்றும் நரம்பு மண்டலங்களில் தீமை செய்யும் ஹார்மோன்களை விடுவித்து உடல் இயக்கத்தில் மாற்றம் செய்துவிடும். புற்றுநோய் செல்கள் இரண்டு வகையில் தனக்கான இடத்தை தக்கவைக்கின்றன. முதலில் இந்த செல்கள் தங்களை பெருக்கிக் கொண்டு ஆக்டோபஸ்போல தன் கொடிய கரங்களால் ரத்தம் மற்றும் நிணநீர் பாதைகளில் உள்ள ஆரோக்கியமான திசுக்களை அழித்துக்கொண்டே அதிவேகமாக உள்ளே பரவும். இதற்கு ஆங்கிலத்தில் இன்வேசன் (Invasion) என்று பெயர். அடுத்ததாக, இந்த அரக்க செல்கள் பலமடங்கு பிரிந்து, வளர்ந்து தனக்கென புதிய ரத்தநாளங்களை உருவாக்கிக் கொண்டு வளர்ச்சிக்கான சத்துகளைப் பெற்று சுயாட்சி நடத்தும். இதை ஆஞ்சியோஜெனிசிஸ் (Angiogenesis) என்கிறார்கள். இந்த நிலைக்கு தன்னை நிலைப்படுத்திக்கொண்ட தீய செல்கள் ஒருகட்டத்தில் எந்த மருந்து மாத்திரைகளுக்கும் அடங்காமல் பசைபோல் ஒட்டிக்கொள்ளும். கண்ணாமூச்சி ஆட்டம் போல் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருக்கும். அதேநேரம் அதற்குச் சாதகமாக, நன்மை தரக்கூடிய செல்களை அழிக்கும்.


நினைவாற்றலில் குழப்பம் ஏற்பட்டு ஐயோ… என பதைபதைத்து எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் எடுக்கப்பட்டதன் முடிவில் மூளையில் புற்றுக் கட்டி இருப்பது தெரியவரலாம். அதன்பிறகு `கேன்சரா' என மரண பயத்தில் சிகிச்சை எடுக்க முடிவு எடுப்பீர்கள். `எனக்கு அப்பப்போ இருமும்போது ரத்தம் வருது...' என்று சோதனை செய்தால் நுரையீரலில் புற்று இருப்பது தெரியவரும். இதைப் பரிசோதனையின்போது கண்டுபிடிப்பார்கள். முதலில் நுரையீரலில் இருந்த செல்கள் ஓடிப்போய் மூளையையும் பாதித்துவிட்டது என்பது தெரியவரும். இதைத்தான் `செகண்டரிஸ்' என்பார்கள். இந்த நிலைக்கு மெட்டாஸ்டாசிஸ் (Metastasis) என்று பெயர். இந்தநிலையில் கேன்சர் செல்களை அழிப்பது என்பது கடினமான வேலை என்கிறது மருத்துவம்.


புற்றுநோய்


உலக அளவில் புற்றுநோய் மனித இறப்புக்கான இரண்டாவது இடத்தில் இருப்பதாக அமெரிக்கப் புற்றுநோய் கழகம் (American cancer Sociiety) தெரிவிக்கிறது. 2012-ம் ஆண்டில் புதிதாக பாதிக்கப்பட்ட புற்று நோயாளிகள் 14 மில்லியன் பேர் இருப்பதாகவும் அவர்களில் 8.2 மில்லியன் நோயாளிகள் இறந்து போனதாகவும் உலகச் சுகாதார நிறுவனம் (world Health Organaisation) கணித்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் இன்னும் 70 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அச்சுறுத்துகிறது.


பொதுவாக என்னதான் காரணம் என்று பல்வேறு ஆய்வுகளை உற்றுநோக்கினால் இதுதான் என உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், ஒருசிலவற்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். முதலாவதாகப் பரம்பரை. அதாவது மரபு வழி. (Genes – The DNA type) உங்கள் குடும்பத்தில் தாய், தந்தை வழி இந்த நோய் இருந்தால் நிச்சயம் அலட்சியப்படுத்தாமல் சோதனை செய்துகொள்வது மிக அவசியம். புகையிலை, கூரையாக வேயப்படும் ஆஸ்பெஸ்டாஸ், ஆர்சனிக் உலோகம், கதிர்வீச்சு (Gamma and X Rays), மித மிஞ்சிய சூரியக் கதிர் வீச்சு, வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை போன்ற பல வேதியியல் காரணிகளாலும் (carcinogens) இந்நோய் பரவுகிறது. உதாரணமாக, பெரிய எண்ணெய் சட்டிகளில் லிட்டர் கணக்கில் எண்ணெய் ஊற்றி, பாக்கெட் மசாலாக்களில் ஊறவைத்து சிவக்க, மணக்க பொரித்துத் தரப்படும் சிக்கனை ரசித்து சாப்பிடுகிறோமே, அது எந்த வகையான எண்ணெய் என்பதைவிட, புது எண்ணெயா என யோசிப்பதில்லை. ஒருமுறை கொதிக்க வைத்ததை மீண்டும் கொதிக்க வைத்தால் ஏன் கேன்சர் வரும்? வேதியியல் மாற்றம்தான். அதிகப்படியான கொதிநிலையில் ஒவ்வாத மூலக்கூறுகள் (Free oxygen Radicals) உருவாகின்றன. அவை நம் உடலில் உள்ள நன்மைதரும் எலெக்ட்ரான்களை உட்கிரகித்து நோய் உருவாக்குகிறது. நாள்பட்ட பல்வேறு நோய்களுக்கு இதுவும் காரணம். இதன் வீரியத்தை குறைக்கும் சக்தி ஆன்டி-ஆக்ஸிடென்ட்டுக்கு உண்டு. அதற்குத்தான் சத்துள்ள இயற்கையான காய்கறிகளையும் பழவகைகளையும் உண்ணச் சொல்கிறார்கள்.


வைரஸ் தொற்று தாக்குதலினாலும் புற்றுநோய் உருவாகிறது என மருத்துவ ஆய்வுகள் முன்வைக்கின்றன. அதில் முக்கியமானது, HPV (Human pappiloma virus) (பெண்களுக்கான கருப்பைவாய் புற்று உருவாகிறது), ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி (Hepatitis), கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமாகிறது. எப்ஸ்ட்டீயின் பார் வைரஸ் (Epstein – Barr virus) குழந்தைகளின் பல்வேறு புற்றுநோய்களுக்கு இந்த வைரஸ் காரணம். எந்த வைரஸ் தொற்றாக இருந்தாலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்கச் செய்கிறது. நோய்களை எதிர்த்து போராடும் ஆற்றல் இல்லாமல் போகிறது. இதனால் புற்றுநோய் உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகம் ஏற்படுகின்றன.


புற்றுநோயில் முதல் நான்கு இடங்களில் இருப்பது மார்பகப் புற்று (Breast cancer), கருப்பை வாய் புற்று (Cervical cancer), வாய்ப்புற்று (Oral cancer), மலக்குடல் ஆசனவாய்ப் புற்று (Colorectal cancer). புகையிலை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், பான்பராக் போன்ற போதைப்பொருட்கள், வெற்றிலை பழக்கம் உள்ளவர்களுக்கு வாய்ப்புற்றுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வெறும் வெற்றிலையில் மருத்துவக் குணங்கள் இருக்கலாம். ஆனால், புகையிலையுடன் உண்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்தியாவில்தான் வாய்ப்புற்றுக்கான சதவிகிதம் அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள். மனக்கவலை என்று குபுகுபுவென சிகரெட் புகையை வீடு முழுக்க நிரப்புகிறீர்கள். உங்களைவிட, மடியில் அமர்ந்து நிக்கோடினை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் புற்று வரும் தெரியுமா உங்களுக்கு? புற்றுநோயைப் பொறுத்தவரை வருமுன் காப்பதுதான் புத்திசாலித்தனம். சுகாதாரக் கல்விதான் முதல் தடுப்பு முறையாக இருக்கும். புகைப்படங்கள், சினிமாக்கள், விளம்பரங்களால் ஓரளவு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். புகையிலைக்கு எதிரான விளக்கக் கூட்டங்களினால் (Anti tobacco Community Programme) கர்நாடகாவில் ஆண்களில் 26.5 சதவிகிதம், பெண்களில் 36.7 சதவிகிதம் நோய்க்கான சதவிகிதம் குறைந்து நல்ல பலனைத் தந்திருக்கின்றன.


நுரையீரல் புற்றுநோய்


மார்பகப் புற்றுநோயினால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றர். உலக அளவில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 43 சதவிகிதம் பெண்களுக்கு இந்நோயின் தாக்கம் உள்ளது. இந்தியாவில், குறிப்பாக பெங்களூரில் அதிகமாக 36.6 சதவிகிதம் பெண்கள் அவதிப்படுகின்றனர். கேன்சர் மருத்துவமனைகளும் நோயாளிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த காலம் போய், சாதாரணக் காய்ச்சல்போல தற்பொழுது எல்லா தரப்பிலும் புற்றுநோய் பரவிவிட்டது. அதன் பின் விளைவுகள்தான் கிரகிக்க முடியாத நிலையில் உள்ளன. குக்கிராமங்களில் இந்நோய் பற்றிய தெளிவு இல்லை. ஆரம்ப மற்றும் மாவட்ட சுகாதார நிலையங்களில் முகாம்கள், வசதி வாய்ப்புகள் வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கல்வி அறிவு குன்றிய ஏழைப் பெண்களிடம் நோய் குறித்த புரிதலுக்கு வகை செய்ய வேண்டும்.


பெரும்பாலும் இன்றைய வாழ்வியல் முறையில் ஏற்பட்ட மாற்றங்களைத்தான் பாதிக்கப்பட்டவர்கள் குறையாக முன்வைக்கிறார்கள். உண்ணும் உணவுகள் எல்லாமும் மரபணு மாற்றம். ரசாயனக் கலப்படங்கள், மாடுலர் கிச்சன் என்கிற பெயரில் பல வண்ணங்களில் தீங்குதரும் பிளாஸ்டிக் டப்பாக்கள், ஓவனில் தயாரிக்கப்படும் உணவுகள், ஒட்டாமல் தோசை வரும் டெஃப்லான் கோட்டிங் தொடங்கி குடிக்கும் பால் வரை சகலத்திலும் புற்றுநோய் வருவதற்கான அபாயம் இருக்கிறது. அழகுக்கான முகப்பூச்சுகள், ஹேர்டை, பவுடர்கள், சன்ஸ்கிரீன் லோஷன்கள்... இன்னும் சொல்லப்போனால் கெமிக்கல் கலந்து உருவாகும் செயற்கை இழைகளால்ஆன ஆடைகள்கூட ஆபத்தானதுதான். நோய்களை உருவாக்கும் பொருட்களை விற்பனை செய்து, அதைத் தடுக்கும் மாத்திரைகளையும் தயாரிக்கும் கார்ப்பரேட் தொழில் தந்திரங்களில் சிக்கித் தவிப்பது ஏதுமறியாத மக்கள்தான். நம் முன்னோர் வகுத்துவைத்த உணவே மருந்துக்குள் சொல்லப்படாத விஞ்ஞான அணுகுமுறை இருக்கிறது. யார் அவற்றை மதித்தார்கள். வெந்ததைத் தின்று வேகாததை பாக்கெட்டில் அடைத்து, ஃபிரீசரில் பாதுகாக்கும் நமக்கு, புதிய நோய்களின் வரவு ஒன்றும் ஆச்சர்யப்படும் விஷயமில்லை.


முற்காலத்தில் குழந்தைக்கு ஓராண்டுவரை தாய்ப்பால் புகட்ட வேண்டும் என வயதானப் பாட்டிகள் அறிவுரை சொன்னார்கள். ஓரிரு நாள்களில் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது மார்பகப் புற்றுக்கு காரணமாக இன்று சொல்லப்படுகிறது. வளர்ச்சி ஊக்கி ஹார்மோன்களை செலுத்திய இறைச்சிகளைத் தின்று இளம் வயதிலேயே பூப்பெய்துதல் (Early puberty) அல்லது காலம் கடந்து பூப்பெய்துதல் (Delayed puberty) மாதவிலக்கு நிற்கும் வயதில் நிற்காமல் நீட்டிப்பது, இளமையைத் தக்கவைக்க தொடர்ச்சியாக எடுக்கப்படும் ஹார்மோன்கள், பொறித்த கொழுப்பு வகையான உணவுகளை சாப்பிடுதல், உடல் உழைப்பு இல்லாமை, உடல் பருமன் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.


குடும்பம், வேலை என பெண்கள் தங்கள் உடல் நலனில் எப்போதுமே அக்கறை செலுத்துவதில்லை. மார்பகத்தில் ஏதேனும் கட்டிகள் இருக்கிறதா அல்லது அக்குளில் நெறி கட்டியிருக்கிறதா என சுய பரிசோதனை செய்ய வேண்டும். மார்பகத்தில் ஏற்படும் வலி, ரத்தம் கலந்த திரவக் கசிவு, முலைக்காம்பில் வலி, எரிச்சல், தோல் சிவந்து போதல், செதில் செதிலாக உரிதல், உள்பக்கமாக திரும்பியிருத்தல், மச்சம் அல்லது மருவில் மாற்றங்கள் ஏற்பட்டால் உதாசீனப்படுத்தாமல் முறையாக சோதனை செய்து சிகிச்சை எடுப்பது நல்லது. மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது அரிது. எனவேதான், இந்த அறிகுறிகள் இல்லாமல் இருந்தாலும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேமோகிராபி, ஸ்கேன் போன்ற முறைகளால் மார்பகப் புற்று இருப்பதை கண்டுபிடிக்க இயலும்.


கருப்பைவாய்ப் புற்று (cervical cancer). எதிர்பார்க்க இயலாத அளவுக்கு பெண்களின் மனதில் அச்சத்தை உருவாக்கி இருக்கிறது. HPV வைரஸ் 16,18 வகை மிக முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. ஒரு பெண் வயதுக்கு வந்தபிறகு அவரின் அனுமதியோடு இந்தத் தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் கருப்பைவாய்ப் புற்றினை ஓரளவு தடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். கிட்டத்தட்ட 80 நாடுகளில் இந்தத் தடுப்பூசி போடப்படுகிறது. அதிக விலை என்பதால் இந்தியாவில் நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறார்கள். இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்வது, பாதுகாப்பற்ற உடலுறவு, சுகாதாரமின்மை, பால்வினை நோய், கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொள்வது, ஊட்டச்சத்து பற்றாக்குறை, நோய் குறித்த அறியாமை போன்றவற்றால் இந்நோய் உருவாகிறது. பிறப்புறுப்பின் உள்ளேயும், வெளியேயும் தோன்றும் மருக்கள் (Wart) கவனிக்கப்பட வேண்டியவை. சைடாலஜி (Cytology,) கண்களுக்கு புலப்படும் அறிகுறிகளை ஆராய்தல் (Visual screening), திசுத் திரவ பரிசோதனை (POP Smear), சி.டி. (CT - Computed tomography), எம்.ஆர்.ஐ. (MRI – Magnetic resonance imaging), பெட் ஸ்கேன் (PET – Positron emission tomography) போன்றவற்றின்மூலம் நோயைக் கண்டுபிடிக்கலாம். பலவீனம், நோக்கமற்ற எடை குறைவு, சினைப்பை, கருப்பை நீர்க்கட்டிகள் (Pcod), முறையற்ற மாதவிலக்கு, அதிக உதிரப்போக்கு உள்ள பெண்கள் கண்டிப்பாக ஆரம்பத்திலேயே மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.


புற்றுநோய் 


சீரற்ற ஹார்மோனால் கருப்பையின் உள்ளே அதிகமாக வளரத் தொடங்கும் (Endometriosis) எண்டோமெட்ரியம் புற்றாக (Endometrial cancer) மாறக் கூடும். குழந்தையின்மைக்காக செலுத்தப்படும் அளவுக்கதிகமான ஹார்மோன் மருந்துகளும் நோய்க்கான காரணங்களாகும். புற்றுநோய் தாக்கிய பின்பு மருந்துகளை ரத்தக் குழாய்களில் செலுத்தும் கீமோதெரபி (Chemotherapy), உறுப்புகளின் வெளியே (Radiation) மற்றும் உள்ளே கொடுக்கும் கதிர் வீச்சுகள் (Brachy therapy), அறுவை சிகிச்சைகள் என முத்தரப்பு சிகிச்சை முறைகளால் (Tumor board Treatment) நோயைக் குணப்படுத்துகிறார்கள். தேசிய மற்றும் மாநில அளவில் நோய் கண்டுபிடிக்கவும் தடுக்கவும் பல்வேறு விளக்கக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. நோயின் தாக்கம் பெருமளவில் இருப்பதால் கிராமங்களில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்களைப் பயிற்றுவித்து ஆரம்பகால நோய் தாக்கத்தை கண்டறியலாம் என்ற கருத்தையும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.


ஆரம்பத்தில் இருந்தே மருந்துகள் தெளிக்கப்படாத காய்கறிகள், மரபணு மாற்றம் இல்லாத பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கோதுமைப்புல் சாறு, வில்வத் துகையல், முள் சீதாப்பழம் , கறுப்பு திராட்சையின் விதைகள், புரோக்கோலி போன்றவற்றில் புற்றுச் செல்களை அழிக்கும் பலம் இருப்பதாக இயற்கை வைத்திய ஆர்வலர்கள் கூறுகிறார்கள். பக்க விளைவு இல்லாத நம் உணவுகளை எடுத்துக் கொண்டு நோய் சீற்றத்தை தவிர்க்கலாம். தமிழர்களின் பாரம்பர்யம் என்பது பட்டு வேட்டி சட்டையிலும் புடவையிலும் மட்டுமல்ல உணவில்தான் தொடங்குகிறது. கிராமத்து வீடுகளின் மேல்தளத்திலும் செல்போன் கோபுரங்கள் முளைத்து விட்டன. 24 மணிநேரமும் புற்றுநோய் பரப்பும் மொபைலின் கதிர்வீச்சில் வாழப்பழகி வரும் மக்களுக்குத் தேவையானது, விழிப்பு உணர்வும் இயற்கை சார்ந்த வாழ்க்கையும்தான்.


பெற்ற தாய்க்கு கருப்பை புற்று வந்ததும் நோய் தொற்றிக் கொள்ளும் என அறியாமையால் பயந்து ஓடிய மகனையும் மகளையும் கண்கூடாக பார்த்திருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆறுதலை, மனவலிமையை குடும்பத்தில் உள்ளவர்கள் கொடுக்கவேண்டும். மன அமைதி, நல்ல எண்ணங்கள், உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி, தியானம், மருத்துவ தொடர் ஆலோசனைகள் மற்றும் அன்பு வழியில் மனதை பலப்படுத்த வேண்டும். எதிர்காலத்துக்கான நம்பிக்கையை நண்பர்களும் உறவுகளும் உருவாக்கினால் மட்டுமே அவர்களால் மீண்டு வர முடியும். நோய்களை வென்று தன்னம்பிக்கையோடு பயணப்படுவதுதான் முன்மாதிரியான வாழ்க்கை. புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது வெறும் உடல் வலி அல்ல. ஃபீனிக்ஸ் பறவைபோல கங்குகளை உதறி, உயிர்த்தெழும் வேலை. காலத்தின் மீதான விரக்தியின் வலி. ஆனபோதும் கேன்சரை வென்றிடுவோம்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url