Type Here to Get Search Results !

நாம் வெட்டும் ஒரு மரம் என்பது ஒரு மரம் மட்டும் தானா?
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் வனவளம் மிகவும் முக்கியமானதாகும். மரங்கள் நம் வாழ்வோடும், கலாசாரத்தோடும் இணைந்துள்ளன. காங்கோ மற்றும் அமேசான் போன்ற வெப்ப மண்டலக் காடுகளில் மழை அதிகமாகப் பெய்யக் காரணம் அங்கு மரங்கள் நிறைந்திருப்பதுதான். இன்று பெருமளவில் வனங்கள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டுவிட்டதால் பருவமழை தவற ஆரம்பித்துவிட்டது.

பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து வைக்கும் வங்கிகளாக அவை செயல்படுகின்றன. மரங்களே இல்லாத சாதாரண நிலப்பரப்பில் மழை பெய்யும்போது மழை நீரில் மூன்று விழுக்காடே பூமியினுள் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ள 97 விழுக்காடு நீர் உடனடியாக ஓடி விடுகின்றது. ஆனால் காடுகளில் பெய்யும் மழை நீரில் 33 விழுக்காடு உள்ளிளுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.

தமிழகத்தில் குடிநீருக்காக சேலம், தருமபுரி, ஈரோடு, திருச்சி, தஞ்சை போன்ற பெருநகரங்கள் காவேரி ஆற்றையும், கோவை, திருப்பூர் நகரங்கள் பவானி, சிறுவாணி ஆறுகளையும், மதுரை வைகையையும், நெல்லை தாமிரபரணியையும் நம்பியுள்ளனர். இன்னும் மிச்சமிக்கும் மழைக்காடுகள்தான் இந்த நதிகளை வாழ வைக்கின்றன.

பல்லுயிரின மாறுபாட்டின் இழப்பு

ஒரு தாவரம் அழிக்கப்பட்டால் அதை நம்பி வாழும், அண்டி வாழும் உயிரினங்களின் அழிவுக்கு காரணமாக அமைந்து விடும். சீனக் காடுகளில் மூங்கில் குருத்துக்களை மட்டுமே சாப்பிட்டு வாழும் பாண்டா கரடிகள் தற்போது அரிதாகிவிட்டன  இதன் காரணம் மூங்கில் காடுகள் அழிக்கப்பட்டு விட்டதுதான். நாம் வெட்டும் ஒவ்வொரு மரமும் ஒரு மரம் மட்டுமல்ல. அதைச் சார்ந்து வாழும் பல உயிரினங்களையும் சேர்த்துதான்.

வேலையில்லாத் திண்டாட்டம்

காடுகளின் அழிப்பினால் காடுகளை நம்பிவாழும் மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதனால் இவர்களும் வேலைத்தேடி நகரத்திற்கு வருகின்றனர். இது வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கிறது.

மரம்

மரம் என்றால் உயிர், இன்னும் சொல்லப்போனால் அதுவே நமக்கும் விலங்கு பறவைகளுக்கும் வாழ்வாதாரம். காடு இருப்பதால் யாருக்கு என்ன லாபம் என சிலபேர் நினைப்பதுண்டு. மரங்களை வெட்டி விற்றால் நிறைய பணம் சம்பாதிக்கலாம். காடுகளை அழித்து குடியிருப்புக்களைக் கட்டினால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம். இந்த எண்ணம் தவறானது , இந்த ஆசையினால்தான் இதுவரையில் உலகத்தில் உள்ள காடுகளில் பாதிக்குமேல் அழிந்து விட்டது. காடுகள் சோலைவனங்கள் இந்த சோலைவனங்கள் அழியுமானால் நாம் பாலைவனத்தில்தான் வசிக்க வேண்டும்.

உலகில் உள்ள பல பாலைவனங்கள் காடுகள் அழிந்ததால் ஏற்பட்டவை என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். மரங்கள் மகத்தானவை என்பதை நாமறிவோம். மரங்களை முயன்றால் நம்மால் வளர்த்துவிட முடியும். ஆனால் காடுகளை பாதுகாக்க மட்டுமே முடியும். காடு என்பது கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாவிலிருந்து யானை வரை, பாசியிலிருந்து ஆலமரம் வரை, பூச்சி, புழு, பறவை, விலங்கு, மரம், செடி, கொடி எனப் பல்லுயிர் பரப்பு. அதனை காப்பாற்றினால்தான் இந்த உயிர்கோளத்தைக் காக்க முடியும்.

ஒரு நாட்டின் நிலப்பரப்பின் 33% மாவது காடுகளிருக்க வேண்டும். நம்மிடம் இருப்பதோ 20% காடுகள்தான். அடைய வேண்டிய இலக்கு வெகு தொலைவில் உள்ளது. எனவே சாலைகள், தொழிற்சாலைகள், கட்டிடங்கள், விவசாயம், என மனிதகுல வளர்ச்சிப் பணிகளையும் காடுகளற்ற சமவெளிப் பகுதிகளில் விரிவுபடுத்துவோம். மிச்சமுள்ள காடுகளுக்கு சிறு அழிவும் ஏற்படாமல் காத்து நிற்போம். இதுவே இனிவரும் தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad