Type Here to Get Search Results !

சுனில் சேத்ரியைக் கொண்டாடும் கால்பந்து ரசிகர்கள்... வாழ்த்து மழையில் இந்திய அணி!




கால்பந்து அழகான விளையாட்டு. விநோதமான விளையாட்டும்கூட. இங்கு கோல் கீப்பர்கூட கோல் அடிக்கலாம். ஆனால், கோல் அடித்த எல்லோரும் கொண்டாடப்படுவதில்லை. எல்லா கோல்களும் சிலாகிக்கப்படுவதில்லை. தேவைப்படும் நேரத்தில் அடிக்கப்படும் கோல், காலம் கடந்தும் பேசப்படும்; கொண்டாடப்படும். அதை அடித்தவனுக்கு, எளிதில் நாயக பிம்பம் கிடைத்துவிடும். 2014-ம் ஆண்டு உலகக்கோப்பை ஃபைனலில் அர்ஜென்டினாவுக்கு எதிராக கோல் அடித்த ஜெர்மனியின் மரியோ கோட்சேவுக்குக் கிடைத்ததைப்போல... நேற்று இந்திய ரசிகர்கள் சுனில் சேத்ரியைக் கொண்டாடியதைப்போல...

சுனில் சேத்ரி

பெங்களூரு கான்டிவிரா மைதானத்திலிருந்து நேற்றிரவு வெளியேறிய 6,000 ரசிகர்களின் முகத்திலும் அவ்வளவு பிரசாகம். போட்டி முடிந்து மைதானத்துக்கு உள்ளே பிரஸ்ட்டுக்காகக் காத்திருந்த பத்திரிகையாளர்களின் முகத்தில் அத்தனை பெருமிதம். அரிதினும் அரிதாகவே பிரஸ் கான்ஃப்ரென்ஸ் ஹாலிலிருந்து ஒரு வீரனுக்குக் கைத்தட்டல் கிடைக்கும். நேற்று, இந்திய கேப்டன் சுனில் சேத்ரிக்கு அந்தப் பாராட்டு கிடைத்தது. நிச்சயம் சேத்ரி பாராட்டுக்குரியவர்... ஏன், எப்படி?

ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு நடத்தும் ஆசியக்கோப்பைக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஆசிய நாடுகளின் பல்வேறு பகுதிகளில் நடந்துவருகின்றன. குரூப் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, முதல் தகுதிச்சுற்றில் மியான்மரை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. இரண்டாவது தகுதிச்சுற்று பெங்களூரில் நேற்று நடந்தது. இந்தியா - கிர்ஜிஸ்தான் குடியரசு மோதல். தரவரிசையிலும் சரி, ஆட்டத்திலும் சரி, இந்தியாவைவிட கிர்ஜிஸ்தான் பல மடங்குமேல். ஆட்டம் தொடங்கி முதல் பாதி முடிவில் கோல் ஏதுமில்லை.

இடைவேளையின்போது டிரெஸ்ஸிங் ரூமில் வைத்து லெக்சர் எடுத்தார் இந்திய அணியின் பயிற்சியாளர் கான்ஸ்டன்டைன். அதனால்தான் `இடைவேளையின்போது டிரெஸ்ஸிங் ரூம் மகிழ்ச்சியான இடமாக இல்லை' - என, போட்டி முடிந்த பிறகு சொன்னார் சுனில் சேத்ரி. இரண்டாவது பாதி தொடங்கியது. ஆரம்பத்திலிருந்தே அட்டாக்கிங் மோடில் நகர்ந்தனர் இந்திய வீரர்கள். 69-வது நிமிடம். இந்திய அணியின் பெனால்டி பாக்ஸுக்கு வெளியே பந்தை க்ளியர் செய்கின்றனர் டிஃபண்டர்கள். அங்கிருந்து பந்தை வாங்குகிறார் சுனில் சேத்ரி. கிர்ஜிஸ்தான் வீரர் ஒருவர் டேக்கிள் செய்கிறார். முடியவில்லை. அடுத்த சில மீட்டர் தூரத்தில் இன்னொரு கிர்ஜிஸ்தான் வீரர் டேக்கிள் செய்கிறார். ம்ஹூம்... உடனடியாக அடுத்த ஐந்து மீட்டர் தூரத்துக்குள் இன்னொரு கிர்ஜிஸ்தான் வீரர் டேக்கிள் செய்கிறார். ம்ஹும்... இந்த முறையும் சுனில் சேத்ரியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரிடமிருந்து பந்தைப் பறிக்க முடியவில்லை. எதிர் அணியின் மூன்று வீரர்களும் சொல்லிவைத்தாற்போல விழுந்து விழுந்து டேக்கிள் செய்தனர். மூன்று பேரும் சுனில் சேத்ரியிடம் தோற்றனர்.

கிட்டத்தட்ட மைதானத்தின் பாதிக்கும் மேற்பட்ட தூரம். ஒற்றை ஆளாக, எதிர் அணியின் மூன்று வீரர்களைச் சமாளித்து பந்தைக் கடத்திவருகிறார் சேத்ரி. அவருக்கு இணையாக ரைட் விங்கில் ஓடிவருகிறார் ஜெஜே. அவரும் ஸ்ட்ரைக்கர். ஜெஜே-யைப் பார்த்ததும் அவருக்கு பாஸ் கொடுக்கிறார் சேத்ரி. பந்து ஜெஜே-விடம் சென்றதும் கிர்ஜிஸ்தானின் லெஃப்ட் பேக் அவரை வளைக்கிறார். ஜெஜே அனுபவ வீரர். இந்தச் சூழலை, இந்த டிஃபண்டரை எப்படிக் கடக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். கடக்கவேண்டிய அவசியம்கூட இல்லை. ஒரு டச்சில் பந்தை நிறுத்தி, அடுத்த டச்சில் பந்தை பூப்போல சேத்ரிக்கு மீண்டும் பாஸ் செய்தார். பாஸ் அல்ல லாப். கோல்கீப்பர் தன் இடத்திலிருந்து முன்னோக்கி வந்துவிட்டார். அதற்குள் சேத்ரி பெனால்டி பாக்ஸில் புகுந்து, கோல் அடிக்க ஏதுவான இடத்தில் நிற்கிறார். அல்ல அல்ல... ஓடிக்கொண்டே இருக்கிறார். அவர் அந்த இடத்தில் நிற்பதற்கும், ரைட் விங்கிலிருந்து ஜெஜே பாஸ் கொடுப்பதற்கும் சரியாக இருந்தது. ஒரே டச். ஒரே டச்சில் ஃபினிஷ் செய்துவிட்டார் சேத்ரி. கோல்..! இந்தியா 1-0 என முன்னிலை. அரங்கமே ஹோவென ஆர்ப்பரித்தது; கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள். இதற்கு, கடைசிவரை கிர்ஜிஸ்தான் வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முடிவில், இந்தியா வெற்றி.

இரண்டு சுற்று முடிவில் இந்தியா குரூப் `ஏ' பிரிவில் ஜம்மென முதல் இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட, ஆசியக் கோப்பையில்  பங்கேற்கும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக்கொண்டது இந்தியா. சுனில் சேத்ரியின் அந்த ஒற்றை கோல் இந்திய ரசிகர்களைக் கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டுசென்றுவிட்டது.

2011-ம் ஆண்டிலும் அப்படித்தான். சுனில் சேத்ரி அடித்த அந்த ஒரு கோல் இந்தியாவை ஆசியக்கோப்பையில் பங்கேற்கவைத்தது. இன்றும் அவர்தான் காரணகர்த்தா. முக்கியமான போட்டியில், முக்கியமான தருணத்தில் கோல் அடித்து, ஒரு தலைவனாக அணியை முன்னின்று நடத்தியதால்தான், சுனில் சேத்ரிக்கு இவ்வளவு பாராட்டு. ஆம், மத்திய விளையாட்டு அமைச்சரிலிருந்து சாதாரண ரசிகன் வரை வாழ்த்து மழை பொழிகின்றனர். `கடந்த 12 ஆண்டுகளாக இந்தியாவுக்காக விளையாடிவருகிறேன். என்னுடைய பெஸ்ட் பெர்ஃபாமன்ஸில் இது தனித்துவமானது' என்கிறார் சேத்ரி.

சுனில் சேத்ரி

சேத்ரி மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய வீரர்களும் பாராட்டுக்குரியவர்களே. ‛கோல்கீப்பரில் இருந்து டிஃபண்டர் வரை ஒவ்வொரு வீரருமே அர்ப்பணிப்புடன் விளையாடினர். கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தினோம். ஒவ்வொரு வீரரும் அவர்களுடைய உச்சபட்ச திறமையை வெளிப்படுத்தினர்' என்கிறார் சேத்ரி. பயிற்சியாளரின் கருத்தும் அதுவே. இந்த வெற்றிக்காக இந்திய வீரர்கள் உள்ளூர எப்படித் தயாராகினர் என்பதற்கு ராவ்லின் போர்ஜஸ் நல்ல உதாரணம்.

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் அவரது தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டன. மேட்ச் ஆரம்பிக்கும் முன் அவர் பயிற்சியாளரிடம் ‘நான் இன்று களமிறங்குகிறேனா?’ எனக் கேட்டார். பயிற்சியாளரும் ‘ஆமாம்’ என்று சொல்ல, பிளேயிங் லெவனில் இடம்பிடித்து ராவ்லின் களத்தில் வெளிப்படுத்திய ஆட்டம் அல்டிமேட். தலையில் தையல்போட்ட சுவடே தெரியாமல் ஹெட்டிங் செய்ததென்ன, டேக்கிள் செய்ததென்ன... சபாஷ் ப்ரோ. அவர் மட்டுமல்ல, கோல் கீப்பர் குர்ப்ரீத் சிங்கும் பாராட்டுக்குரியவர். பின்கள வீரர் சந்தேஷ் ஜிங்கன் தன் ஏரியாவில் எதிர் அணி வீரர்களுக்கு உக்கிரமாக இருந்தார். தன் மூன்றாவது சர்வதேசப் போட்டியில் பங்கேற்ற அனாஸ் இடதோடிகாவின் ஆட்டமும் மெச்சும்வகையில் இருந்தது. ஜெஜே பற்றிச் சொல்லவே வேண்டாம். ஆக, ஒட்டுமொத்த இந்திய அணியின் செயல்பாடும் பக்கா!

இந்த மேட்ச் மட்டுமல்ல, சமீபத்தில் இந்தியா விளையாடிய 15 போட்டிகளில் 13-ல் வெற்றி. அதிலும், கடந்த எட்டு போட்டிகளில் தொடர் வெற்றி. இது, தரவரிசையில் நிச்சயம் எதிரொலிக்கும். நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்திய கால்பந்துக்குப் பின்னால் ஒளிவட்டம் தெரிகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad