ஆதார் - பான் எண்ணை இணைக்க எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும்
புதுடெல்லி: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் அனுப்பி இணைக்கலாம் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இருப்பினும், பெயர் குழப்பம் காரணமாக, பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியவில்லை. இதற்கு மாற்றாக வருமான வரித்துறை இணையதளத்தில் ஒரு முறை பாஸ்வேர்டு மூலம் ஆதாரில் பெயர் மாற்றியோ, பான் கார்டு நகலை அனுப்பியோ இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர், வருமான வரி இணையதளத்தில் எளிதாக பான் - ஆதார் இணைக்க புதிய லிங்க்கை அறிமுகம் செய்தது.
இருப்பினும், பான் மற்றும் ஆதார் எண்ணில் பெயர் ஒரே மாதிரியாக இல்லாதவர்கள், இணைப்பதில் தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், எஸ்எம்எஸ் மூலம் ஆதார் - பான் எண் இணைக்கும் வசதியை நேற்று அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, பான் மற்றும் ஆதார் எண்ணை 567678 அல்லது 56161 எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இதற்கு ஆதார், பான் இரண்டிலும் பெயர் எந்த வேறுபாடும் இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 1ம் தேதி முதல் பான் எண்ணுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.