Type Here to Get Search Results !

8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து–வங்காளதேசம் மோதல்



டாப்–8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.



டாப்–8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து–வங்காளதேசம் அணிகள் இன்று மோதுகின்றன.

சாம்பியன்ஸ் கோப்பை
மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் 8–வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்தில் இன்று முதல் 18–ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் அணிகள் மட்டுமே பங்கேற்கின்றன. முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் 9–வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பையில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பறிகொடுத்தது.

அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இங்கிலாந்தில் தற்போது அடிக்கடி மழை பெய்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை ஆட்டங்களின் போதும் அடிக்கடி மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு வானிலை மாறும் போது, களத்தில் பந்து நன்கு ‘ஸ்விங்’ ஆகும். வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் கணிசமாக ஓங்கி நிற்கும்.

ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை நிலவும் பட்சத்தில் பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கலாம். பயிற்சி ஆட்டத்தில் வீரர்கள் வெகு சுலபமாகு ரன்களை திரட்டினர். எனவே இந்த தொடரில் 400 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. டாப்–8 அணிகள் மல்லுகட்டுவதால் சவால் கடுமையாக இருக்கும். இருப்பினும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்பதே முன்னாள் வீரர்களான சங்கக்கரா, ஸ்ரீகாந்த் மற்றும் நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.

ஆஸ்திரேலியா எப்படி?
இனி ஒவ்வொரு அணிகளின் வெற்றி வாய்ப்பினை பார்க்கலாம்:

தென்ஆப்பிரிக்கா (ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடம்): காலிசின் ஆல்–ரவுண்ட் திறமையால் 1998–ம் ஆண்டு முதலாவது சாம்பியன்ஸ் கோப்பையை தென்ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இந்த நாள் வரைக்கும் தென்ஆப்பிரிக்கா வென்றுள்ள ஒரே ஐ.சி.சி. கோப்பை இது தான். இந்த முறை டிவில்லியர்ஸ் தலைமையில் களம் காணும் தென்ஆப்பிரிக்க அணி வழக்கம் போல் சிறப்பான நிலையில் தான் இருக்கிறது. ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப்–10 பேட்ஸ்மேன்களில் 4 பேர் (டிவில்லியர்ஸ், குயின்டான் டி காக், பாப் டு பிளிஸ்சிஸ், அம்லா) தென்ஆப்பிரிக்க வீரர்களே. இதே போல் பந்து வீச்சில் முதல் இரு இடத்தில் தென்ஆப்பிரிக்காவின் ரபடா, இம்ரான் தாஹிரே உள்ளனர். இதை விட தென்ஆப்பிரிக்காவின் பலத்தை பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. முக்கியமான போட்டிகளில் நெருக்கடியில் கோட்டை விடுவது தான் தென்ஆப்பிரிக்காவின் பலவீனம். அதில் கூடுதல் கவனம் செலுத்தினால் மீண்டும் நீண்ட கால ஏக்கத்தை தணிக்கலாம்.

சாம்பியன்ஸ் கோப்பையில் செயல்பாடு: 1998– சாம்பியன், 2000– அரைஇறுதி, 2002–அரைஇறுதி, 2004– முதல் சுற்று, 2006– அரைஇறுதி, 2009– முதல் சுற்று, 2013– அரைஇறுதி.

ஆஸ்திரேலியா (தரவரிசையில் 2–வது இடம்): சாம்பியன்ஸ் கோப்பையை அடுத்தடுத்து ருசித்த ஒரே அணி ஆஸ்திரேலியா மட்டுமே. ஆனால் 2006, 2009–ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய வீரர்களில் யாரும் தற்போதைய அணியில் இல்லை. ஸ்டீவன் சுமித் தலைமையில் அடியெடுத்து வைக்கும் ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், பேட்டின்சன், ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அங்கம் வகிக்கிறார்கள். இங்குள்ள ஆடுகளத்தன்மையில் இவர்களின் பந்து வீச்சு நிச்சயம் எதிரணிக்கு அச்சுறுத்தும் வகையில் அமையும். பேட்டிங்கில் டேவிட் வார்னர், கேப்டன் சுமித், மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச், கிறிஸ் லின் உள்ளிட்டோர் கைவரிசையை காட்ட காத்திருக்கிறார்கள். இதில் வார்னர் கடந்த ஓராண்டில் எந்த பேட்ஸ்மேனும் செய்திராத அளவுக்கு 8 சதங்கள் அடித்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார். எல்லா வகையிலும் வலுவாக காணப்படும் ஆஸ்திரேலியா அரைஇறுதியை எட்டுவதில் பெரிய அளவில் தடை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்பியன்ஸ் கோப்பையில் செயல்பாடு: 1998– கால்இறுதி, 2000–கால்இறுதி, 2002– அரைஇறுதி, 2004– அரைஇறுதி, 2006– சாம்பியன், 2009–சாம்பியன், 2013– முதல்சுற்று.

இந்திய அணி
இந்தியா (3): நடப்பு சாம்பியனான இந்திய அணி சரியான கலவையில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இரண்டு பயிற்சி ஆட்டங்களில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்தை புரட்டியெடுத்தது இந்தியாவின் நம்பிக்கையை அதிகரிக்க வைத்துள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை இப்போது பிரதான தலைவலி களம் காணும் லெவன் அணியில் யாருக்கு இடம் கொடுப்பது என்பது தான். வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ், பும்ரா, முகமது ‌ஷமி ஆகியோரில் மூன்று பேரைத் தான் ஆட வைக்க முடியும். இதே போல் கேதர் ஜாதவ் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு அளிப்பது என்பதில் அணி நிர்வாகம் குழம்பி போய் உள்ளது. மற்றபடி தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் கடந்த முறை போன்றே கச்சிதமான தொடக்கத்தை தந்தால் இந்தியாவின் வீறுநடையை எதிரணியால் தடுப்பது கடினமே.

சாம்பியன்ஸ் கோப்பையில் செயல்பாடு: 1998–அரைஇறுதி, 2000– 2–வது இடம், 2002– சாம்பியன், 2004– முதல் சுற்று, 2006– முதல் சுற்று, 2009– முதல் சுற்று, 2013– சாம்பியன்.

நியூசிலாந்து (4): ‘கருப்பு படை’ என்று அழைக்கப்படும் நியூசிலாந்து அபாயகரமான அணிகளில் ஒன்றாகும். 2015–ம் ஆண்டு உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணி நியூசிலாந்து. அந்த உலக கோப்பைக்கு பிறகு பிரன்டன் மெக்கல்லம், வெட்டோரி, கிரான்ட் எலியாட் ஆகியோர் விடைபெற்று விட்டனர். ஆனாலும் நியூசிலாந்து அணியில் திறமைக்கு குறைவில்லை. மார்ட்டின் கப்தில், கேப்டன் கனே வில்லியம்சன், ராஸ் டெய்லர், பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி ஆகிய மூத்த வீரர்களின் அனுபவம் நியூசிலாந்துக்கு பக்கபலமாக இருக்கிறது.

சாம்பியன்ஸ் கோப்பையில் செயல்பாடு: 1998– கால்இறுதி, 2000– சாம்பியன், 2002– முதல் சுற்று, 2004– முதல் சுற்று, 2006– அரைஇறுதி, 2009– 2–வது இடம், 2013– முதல் சுற்று.

அதிரடியை கையாளும் இங்கிலாந்து
இங்கிலாந்து (5): 2015–ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் முதல் சுற்றுடன் நடையை கட்டிய இங்கிலாந்து அணி இப்போது நம்ப முடியாத அளவுக்கு எழுச்சி பெற்றிருக்கிறது. அந்த உலக கோப்பைக்கு பிறகு அதிக சிக்சர்களை (244 சிக்சர்) நொறுக்கிய அணி, அதிக வெற்றிகளை (44 ஆட்டத்தில் 27 வெற்றி) குவித்த அணி எல்லாமே இங்கிலாந்து தான். ஆக்ரோ‌ஷமான அணுகுமுறையை கடைபிடிக்கும் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்த கடைசி 12 ஆட்டங்களில் 10–ல் 300 ரன்களை கடந்துள்ளது. மோர்கன், அலெக்ஸ் ஹாலெஸ், ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் என்று அதிரடி சூரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2–1 என்ற கணக்கில் தனதாக்கியது. உள்ளூரில் ஆடுவது அந்த அணிக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும். கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இங்கிலாந்தும் வலம் வருவதை மறுக்க முடியாது.

சாம்பியன்ஸ் கோப்பையில் செயல்பாடு: 1998–கால்இறுதி, 2000–கால்இறுதி, 2002– முதல் சுற்று, 2004– 2–வது இடம், 2006– முதல் சுற்று, 2009– அரைஇறுதி, 2013– 2–வது இடம்.

வங்காளதேசம் (6): மோர்தாசா தலைமையிலான வங்காளதேச அணி தரவரிசையில் வெஸ்ட் இண்டீசை பின்னுக்கு தள்ளிவிட்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. அதிர்ச்சி அளிக்கும் அணியான வங்காளதேசம் சமீபத்தில் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்தது நினைவிருக்கலாம். பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 341 ரன்கள் வரை குவித்து வியக்க வைத்தது. இந்த சாம்பியன்ஸ் கோப்பையில் அந்த அணி யாருடைய மூக்கையாவது உடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சாம்பியன்ஸ் கோப்பையில் செயல்பாடு: 2000– தகுதி சுற்று, 2002–முதல் சுற்று, 2004– முதல் சுற்று, 2006– தகுதி சுற்று.

கணிக்க முடியாத அணி
இலங்கை (7): சங்கக்கரா, ஜெயவர்த்தனே, தில்‌ஷன் ஓய்வுக்கு பிறகு இலங்கை அணியில் மிகப்பெரிய வெற்றிடம் விழுந்து விட்டது. அந்த இடத்தை நிரப்ப முடியாமல் இலங்கை போராடிக்கொண்டிருக்கிறது. கேப்டன் மேத்யூஸ், குலசேகரா, 2015–ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒரு நாள் போட்டிக்கு திரும்பியுள்ள மலிங்கா, சன்டிமால், தரங்கா தவிர மற்றவர்கள் போதிய அனுபவம் இல்லாதவர்கள் தான். இந்த சீசனில், இலங்கை அணியை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை.

சாம்பியன்ஸ் கோப்பையில் செயல்பாடு: 1998– அரைஇறுதி, 2000– முதல் சுற்று, 2002– சாம்பியன், 2004– முதல் சுற்று, 2006– முதல் சுற்று, 2009– முதல் சுற்று, 2013–அரைஇறுதி

பாகிஸ்தான் (8): எப்போதும் எளிதில் கணிக்க முடியாத ஒரு அணியாக வர்ணிக்கப்படுவது பாகிஸ்தான் தான். சர்ப்ராஸ் அகமது தலைமையில் களம் இறங்கும் பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் வலுமிக்கதாக திகழ்கிறது. ‘ஸ்விங்’ செய்வதில் வல்லவரான முகமது அமிர் தான் அந்த அணியின் பிரதான அஸ்திரம். சுழற்பந்து வீச்சாளர் ‌ஷதப் கான் மற்றும் ஜூனைட்கான், வஹாப் ரியாசும் மிரட்டுவார்கள். ஆனால் திடீரென பேட்டிங்கில் சீர்குலைந்து விடுவது அந்த அணியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி தடாலடி பேட்ஸ்மேன்கள் இல்லாதது அந்த அணிக்கு இன்னொரு குறையாகும். சூதாட்டத்தில் சிக்கிய ‌ஷர்ஜீல் கான், உடல்தகுதி பிரச்சினையில் சிக்கிய உமர் அக்மல் ஆகிய பேட்ஸ்மேன்கள் இல்லாதது பின்னடைவாகும். அதே சமயம் தற்போதைய வீரர்களில் அதிக முறை சாம்பியன்ஸ் கோப்பையில் (6–வது முறை) பங்கேற்ற வீரர் என்ற சிறப்பை பெற காத்திருக்கும் சோயிப் மாலிக்கின் அனுபவம் பாகிஸ்தானுக்கு உதவிகரமாக இருக்கக்கூடும். ஒரு நாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை, ஆசிய கோப்பை என்று பெரிய போட்டிகளில் வாகை சூடிவிட்ட பாகிஸ்தானுக்கு இன்னும் சாம்பியன்ஸ் கோப்பை மட்டுமே எட்டாக்கனியாக இருக்கிறது.

சாம்பியன்ஸ் கோப்பையில் செயல்பாடு: 1998–முதல் சுற்று, 2000–அரைஇறுதி, 2002– முதல் சுற்று, 2004– அரைஇறுதி, 2006–முதல் சுற்று, 2009–அரைஇறுதி, 2013–முதல் சுற்று.

முதல் ஆட்டத்தில் யார்–யார்?
இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் உள்ளூர் அணியான இங்கிலாந்தும், வங்காளதேசமும் லண்டன் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. பேட்டிங்கில் அசுர பலத்துடன் இங்கிலாந்து இருந்தாலும், அந்த அணி பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் தடுமாறக்கூடியவர்கள். அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் முனைப்புடன் வங்காளதேசம் வியூகங்களை தீட்டி வருகிறது.

இந்த சாம்பியன்ஸ் கோப்பையை பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அடுத்த சுற்று வாய்ப்புக்கு சிக்கலை உருவாக்கி விடும். எனவே இரு அணிகளும் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 19 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 15–ல் இங்கிலாந்தும், 4–ல் வங்காளதேசமும் வெற்றி கண்டுள்ளன.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

பரிசுத்தொகை எவ்வளவு?

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.29 கோடியாகும். இது கடந்த போட்டியை விட ரூ.3¼ கோடி அதிகமாகும். இதில் கோப்பையை வெல்லும் அணி ரூ.14 கோடியை பரிசுத்தொகையாக அள்ளும். 2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.7 கோடி கிடைக்கும். அரைஇறுதியில் தோல்வி அடையும் இரு அணிகளுக்கு சுமார் ரூ.3 கோடி வீதம் வழங்கப்படும். குரூப் சுற்றில் 3–வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.58 லட்சத்தையும், கடைசி இடத்துக்கு தள்ளப்படும் அணி ரூ.39 லட்சத்தையும் பெறும். ஆக கலந்து கொள்ளும் 8 அணிகளுக்கும் நிச்சயம் பரிசு உண்டு.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியின் வெற்றி–தோல்வி

அணி ஆட்டம் வெற்றி தோல்வி டை முடிவில்லை

இந்தியா 24 15 6 0 3

ஆஸ்திரேலியா 21 12 7 0 2

நியூசிலாந்து 21 12 8 0 1

இலங்கை 24 13 9 0 2

தென்ஆப்பிரிக்கா 21 11 9 1 0

இங்கிலாந்து 21 11 10 0 0

பாகிஸ்தான் 18 7 11 0 0

வங்காளதேசம் 8 1 7 0 0

‘‘தரவரிசையில் நாங்கள் 8–வது இடத்தில் இருப்பது உண்மை தான். ஆனால் எதிரணிக்கு கடும் சோதனை கொடுக்கக்கூடிய அளவுக்கு எங்களிடம் திறமை இருக்கிறது’’– பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது

***

‘‘சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா சிறந்த சாதனைகளை படைத்துள்ளது. அதை தக்க வைத்துக்கொள்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது’’– ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்.

***

‘‘கேப்டனாக எனது மிகப்பெரிய போட்டித் தொடர் இது என்பதால் மிகவும் ஆர்வமுடன் இருக்கிறேன். இதே போல் ஒரு பேட்ஸ்மேனாக அனைத்து சவால்களையும் முறியடித்து சாதிக்க விரும்புகிறேன்.’’– இந்திய கேப்டன் விராட் கோலி.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad