சென்னை புறநகர்களில் கழிவுநீர் குட்டைகளாக மாறிவரும் காலி இடங்கள்: தொற்றுநோய் பரவும் அபாயம்





சென்னை நகருக்கு அருகே ஓஎம்ஆர் என அழைக்கப்படும் ராஜீவ் காந்தி சாலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் ஏராளமான தனியார் மற்றும் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட துவங்கின. அங்கு பணியாற்ற வரும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள். வேளச்சேரி, தரமணி, எஸ்ஆர்பி டூல்ஸ், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சிறுசேரி சிப்காட் முதல் கேளம்பாக்கம் வரையுள்ள பகுதிகளில் நான்கைந்து பேராக சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வருகின்றனர். ஓஎம்ஆர் சாலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்கேற்ப, அப்பகுதிகளில் ஏராளமான தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளும் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் முளைக்க துவங்கின.

நல்ல சம்பளத்தில் பணியாற்றுபவர்கள், ஓஎம்ஆர் சாலையில் உள்ள இத்தகைய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கி, தங்கள் குடும்பத்துடன் குடியேறி வசித்து வருகின்றனர். இவற்றில் பல தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனியார் கல்லூரிகள், அங்குள்ள அரசு புறம்போக்கு மற்றும் பல்வேறு நீர்நிலைகளில் முறைகேடாக கட்டப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் அதிக பணம் கொடுத்து முறையற்ற வகையில் அங்கீகாரம் பெறப்பட்டவை என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுதவிர, இங்குள்ள ஒருசில அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ள தரமான நிறுவனங்கள், தங்கள் குடியிருப்புகளில் கழிவுநீர் மற்றும் குடிநீருக்கு என தனித்தனியே பூமிக்கு அடியில் பிரமாண்ட டேங்க்குகள் கட்டியுள்ளன. அங்கு கழிவுநீரை இயந்திரங்கள் மூலம் ரீ-சைக்கிளிங் முறையில் சுத்திகரித்து, அந்த நீரை மீண்டும் உபயோகப்படுத்தி வருகின்றனர்.

சென்னை புறநகர் பகுதிகளான ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்றுவரை முறையான கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், அங்குள்ள காலி நீர்பிடிப்பு பகுதிகளில் குட்டை போல் தேங்கி, பல்வேறு தொற்றுநோய்களையும் மர்ம காய்ச்சலையும் ஏற்படுத்தி வருகின்றன.
உதாரணமாக, தாம்பரம் அடுத்த செம்பாக்கம் நகராட்சியில் டெல்லஸ் அவென்யூ குடியிருப்பு பகுதியில் வெளியாகும் கழிவுநீர், அங்கு காலியாக உள்ள நிலங்களில் சேறும் சகதியும் நிறைந்து குளம் போல் தேங்கியுள்ளது.

இதேபோல், பெரும்பாக்கம், இந்திரா பிரியதர்சினி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கழிவுநீரை அங்குள்ள தனியார் இடங்களில் விட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம், செகரட்ரியேட் காலனி பிரதான சாலை மற்றும் பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து அங்குள்ள கோயில் குளங்களில் கழிவுநீரை விட்டு வருகின்றனர். இவை அனைத்தும் சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டை விளைவித்து வருகின்றன என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பெரும்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடம் கேட்டபோது, ‘நாளுக்கு நாள் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாகவே, இங்குள்ள காலி இடம் மற்றும் பராமரிக்கப்படாத கோயில் குளங்களில் கழிவுநீர் விடப்படுகிறது. இப்பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட துறை மற்றும் மாவட்ட அதிகாரிகள் உடனடி தீர்வு காணவேண்டும்’ என்று குடியிருப்புவாசிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.‘சென்னை புறநகர் பகுதிகளில் இதுபோன்ற பல்வேறு தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து தனியார் மற்றும் அரசு இடங்களில் திறந்துவிடப்படும் கழிவுநீருக்கு நிரந்தர தீர்வே கிடைக்காதா? இப்பிரச்னைக்கு விரைவில் விடிவு பிறக்கட்டும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url