Type Here to Get Search Results !

கால் இறுதி எலிமினேட்டரில் ஐதராபாத் - கொல்கத்தா இன்று பலப்பரீட்சை





பெங்களூரு: ஐபிஎல் டி20 தொடரின் 10வது சீசன் எலிமினேட்டர் போட்டியில், நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. லீக் சுற்றில் சிறப்பாக விளையாடிய வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 17 புள்ளிகள் பெற்று (8 வெற்றி, 5 தோல்வி, 1 ரத்து) புள்ளிப் பட்டியலில் 3வது இடம் பிடித்தது. ரன் குவிப்பிலும் அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் வார்னர் (604 ரன்), ஷிகர் தவான் (468 ரன்) முதல் 2 இடத்தில் உள்ளனர். ஹென்ரிக்ஸ், கேன் வில்லியம்சன், யுவராஜ் சிங் ஆகியோரும் கணிசமாக ரன் குவித்து நல்ல பார்மில் உள்ளனர்.

விக்கெட் வேட்டையிலும் சன்ரைசர்சின் புவனேஷ்வர் குமார் 25 விக்கெட் வீழ்த்தி முன்னிலை வகிக்கிறார். ஆப்கானிஸ்தான் இளம் சுழல் ரஷித் கான் (17 விக்கெட்), சித்தார்த் கவுல் (16 விக்கெட்) சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் சன்ரைசர்ஸ் அணி இன்றைய கால் இறுதியில் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. நெருக்கடியான கட்டத்தில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து பிளேஆப் சுற்றுக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ், இந்த நாக்அவுட் சவாலை முறியடித்து அரை இறுதிக்கு (குவாலிபயர் 2) முன்னேறும் உறுதியுடன் உள்ளது. அதே சமயம் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றிக்காக வரிந்துகட்டுகிறது.

கேப்டன் கம்பீர் 454 ரன் குவித்து 3வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மணிஷ் பாண்டே (396 ரன்), ராபின் உத்தப்பா (386 ரன்), கிறிஸ் லின் (285) ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். சுனில் நரைன், யூசுப் பதானின் அதிரடியும் அந்த அணியின் துருப்புச் சீட்டாக அமைந்துள்ளது.
பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், உமேஷ் யாதவ், குல்தீப், கோல்டர்நைல், சுனில் கை கொடுத்து வருகின்றனர். சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி, குவாலிபயர் 1ல் தோற்ற அணியுடன் அரை இறுதியில் (குவாலிபயர் 2) நாளை மறுநாள் மோத வேண்டும். அந்த போட்டியும் பெங்களூரு, எம்.சின்னசாமி ஸ்டேடியத்திலேயே நடைபெற உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad