உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக டெட்ராஸ் அதோனோம் தேர்வு
ஜெனீவா: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக டெட்ராஸ் அதோனோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான மார்க்கரெட் சான் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து உலக சுகாதார நிறுவத்தின் 185 நாட்டு உறுப்பினர்களில் 133 உறுப்பினர்கள் வாக்களித்து டெட்ராஸ் அதோனோத்தை தலைவராக தேர்வு செய்துள்ளனர். டெட்ராஸ் அதோனோ எத்தியோப்பியா நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர். சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
ஜூலை 1-ம் தேதியன்று டெட்ராஸ் அதோனோம் உலக சுகாதார நிறுவன தலைவராக பொறுப்பேற்க உள்ளார். 5 ஆண்டுகள் தொடர்ந்து இப்பதவியில் நீடிப்பார். ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தலைவர் டெட்ராஸ் அதோனோ என்பது குறிப்பிடத்தக்கது. ஜெனீவா நகரில் 1948-ம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஐ.நா.வின் ஒரு அங்கமாக செயல்படும் இந்த அமைப்பு உலக முழுவதும் எய்ட்ஸ், மலேரியா, காசநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை ஒழிக்க பெரும் சேவையாற்றி வருகிறது.