ரூ.1 கோடி சம்பளமா? பார்வதி கோபம்
பூ, மரியான், சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பார்வதி. மலையாளத்திலும் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்திய பட வெற்றியையடுத்து தனது சம்பளத்தை 1 கோடியாக உயர்த்திவிட்டதாக பார்வதி பற்றி தகவல் வெளியானது. இதையறிந்து கோபம் அடைந்தார். இதுபற்றி பார்வதி கூறும்போது,’நான் எவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என்று இதுவரை யாரிடமும் சொன்னதில்லை.
அதேசமயம் என்னிடமும் எந்த மீடியாவும் அதுபற்றி நேரடியாக வோ, மெசேஜ் மூலமாகவோ கேட்டதில்லை. அவர்களாகவே ஒருபடி மேலே சென்று எனது சம்பளம் எவ்வளவு என்பதை யூகமாக யோசித்து வெளியிட்டிருக்கிறார்கள். எதற்காக நான் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.
அதேசமயம் நான் எவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என்பது மற்றவர்களுக்கு தேவையற்ற ஒன்று. தயாரிப்பாளருக்கும், எனக்கும் மட்டுமே அதில் சம்பந்தம் உள்ளது. சம்பள வேறுபாடு என்பது சமூக பிரச்னை. அதுபற்றி விவாதிக்க வேண்டி உள்ளது. நடிகைகளின் சம்பளம் குறித்து தவறான தகவல் உருவாக்குவதை ஏற்க முடியாது’ என்றார்.