ராணி வேடம் மீது கவனம் திருப்பிய நடிகைகள்
கடந்த 2012ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற ‘பீட்ஸா’ பேய் படத்துக்கு பிறகு சென்ற 5 வருடமாக கோலிவுட்டை பேய் கதைகள்தான் ஆட்டிப்படைக்கின்றன. டாப் ஹீரோக்களுடன் நடிப்பது யார் என்று போட்டிபோட்டு வந்த ஹீரோயின்கள் தங்கள் கவனத்தை பேய் கதைகள் மீது திருப்பினார்கள். ‘நாயகி’ படத்தில் திரிஷா, ‘மாயா’ படத்தில் நயன்தாரா என தொடங்கி ஐஸ்வர்யா ராஜேஷ் வரை அடுத்தடுத்து எல்லா ஹீரோயின்களும் பேய் கதைகளில் நடிக்கத் தொடங்கினர். சமீபத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ பேய் படம் வெளியானது. இன்னும் சில பேய் படங்கள் திரைக்கு வர தயாராகி வருகிறது.
இந்தநிலையில்தான் திரையுலகை வசூல் ரீதியில் புரட்டிபோட்டிருக்கிறது சரித்திர பின்னணியிலான பாகுபலி 2ம் பாகம். பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், ராணா, சத்யராஜ், நாசர் என பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் பாதிப்பு தற்போது திரையுலகை ஆட்கொள்ளத் தொடங்கி இருக்கிறது. ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் நடிக்க சுந்தர்.சி இயக்கும் ‘சங்கமித்ரா’ சரித்திர பின்னணியிலான கதையாக உருவாகிறது. இதில் ராணி வேடத்தில் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன்.
இதுபற்றி அவர் கூறும்போது,’சரித்திர பின்னணி படத்தில் நடிப்பது பெருமை. அதேசமயம் நான் நடிக்கும் படங்களிலேயே அதிக பொருட் செலவில் உருவாகும் படம் இது. இந்த வேடத்தில் நடிப்பதற்கு உடல் ரீதியான தோற்றம் முக்கியம். கத்தி சண்டை, குதிரை ஏற்றம் போன்றவற்றில் பயிற்சி பெற வேண்டியது அவசியம். அதனை முறைப்படி நான் பெற்றிருக்கிறேன். நான் ஏற்றிருக்கும் ‘சங்கமித்ரா’ கதாபாத்திரம் வலுவானது. எந்த ஹீரோயினிடம் நடிக்க கேட்டாலும் இந்த வேடத்தை உடனே ஏற்பார்கள். இப்படியொரு வேடம் கிடைப்பது மிகவும் அரிது’ என்றார்.