Type Here to Get Search Results !

கருப்பு ராணி
8 தோட்டாக்கள் படத்தில் வில்லனின் மனைவியாக ரசிகர்களைக் கவர்ந்தவர். கணவனின் கண்களில் மண்ணைத் தூவி, அவனது அடியாளோடு உல்லாச உறவில் திளைக்கும் வில்லங்கமான கேரக்டர். யாருப்பா இந்தப் பொண்ணு? என்று தேடிப்போனால் 5.9 அடி உயரத்தில் அபாரமாக வந்து நின்றார் மீரா மிதுன்.

இவ்வளவு நாளா எங்கிருந்தீங்க?

நான்தான் மிஸ் சவுத் இந்தியா 2016. பதினைஞ்சு வருஷமா இந்த போட்டி நடக்குது. முதல் தடவையா அதுலே ஜெயிச்ச தமிழச்சி நான்தான். அதுவுமில்லாமே மிஸ் தமிழ்நாடு, மிஸ் சென்னை என்று ஏகப்பட்ட அழகிப்போட்டி பட்டங்களோடு மாடலிங் ஏரியாவில் ஏற்கனவே ரொம்ப பிரபலம்.

இவ்ளோ அழகா இருக்கீங்களே! உண்மையை சொல்லுங்க. அப்போன்னா படிப்புலே மக்குதானே?

ஹலோ. நான் 90%க்கு கம்மியா மார்க் வாங்கினதே இல்லை. பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சிங்காரச் சென்னைதான். இந்த ஊரோட அழகுப் பொண்ணுங்க எல்லாரும் படிக்கிற எத்திராஜ் காலேஜில்தான் மைக்ரோபயாலஜி படிச்சேன். அப்புறம் எஸ்.ஆர்.எம்.மில் எம்.எஸ்சி பயோடெக்னாலஜி. கோல்ட் மெடலிஸ்ட். படிப்பை முடிச்சிட்டு ஆராய்ச்சி, ஜெனிடிக்ஸுன்னு லைஃப் லேபுலேதான் போயிக்கிட்டு இருந்தது.

அப்புறம் எப்படி இந்த அழகுத்துறைக்கு வந்தீங்க?

எங்கப்பா அந்தக் காலத்தில் பிரபலமான ஆணழகர். மிஸ்டர் மெட்ராஸ், மிஸ்டர் தமிழ்நாடு டைட்டில் எல்லாம் வின் பண்ணவர். அம்மா, அன்பான இல்லத்தரசி. புலிக்கு பொறந்துட்டு பூனையா இருக்க முடியுமா? அப்பாவுக்கு தப்பாத பொண்ணா மாடலிங்குக்கு வந்தேன். அம்மாவுக்குதான் அதில் கொஞ்சம் வருத்தம். பொண்ணா லட்சணமா குக்கிங்கெல்லாம் கத்துக்காம எப்பவும் மேக்கப் பண்ணிக்கிட்டு போஸ் கொடுத்துக்கிட்டே இருந்தா எப்படின்னு ஃபீல் பண்ணுவாங்க. ஆனா, என் அழகுக்கான அங்கீகாரம் வரிசையா கிடைச்சதுக்கப்புறம் அவங்களும் ஹேப்பி ஆயிட்டாங்க.

ஆக்சுவலா நானே எதிர்பார்க்காத ஃபீல்டில்தான் இப்போ இருக்கேன். நான் படிச்ச படிப்புக்கு அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ பெரிய எம்.என்.சி. கம்பெனியில் ரிசர்ச் டிபார்ட்மென்டில் வேலை பார்ப்பேன்னுதான் நினைச்சுக்கிட்டிருந்தேன். என் தோழியுடைய நண்பர் ஒருவர் டான்ஸ் மாஸ்டர். யதேச்சையா என்னைப் பார்த்தவர், உங்க உயரத்துக்கும், அழகுக்கும் நீங்க மாடலிங் பண்ணா, நல்லா வருவீங்கன்னு கமென்ட் பண்ணாரு. அவரேதான் ஒரு சேலை விளம்பரத்துக்கு என்னை முதன்முதலா மாடல் ஆக்கினார். இப்படி சும்மா டைம் பாஸுக்குத்தான் இந்தத் துறைக்கு வந்தேன்.

நீங்க ரொம்ப சிகப்பு கிடையாது. கொஞ்சம் கருப்புதான்!

யெஸ். சோ வாட்? நான் பக்கா தென்னிந்தியப் பொண்ணு. நம்மோட மண்ணின் நிறத்தில்தான் இருக்கேன். அழகிப் போட்டிகளில் பட்டம், அடுத்தடுத்து இந்தியா முழுக்க ரேம்ப் வாக், ஃபேஷன் ஷோன்னு சக்கைப்போடு போட இந்த டஸ்கி டோனே எனக்கு பெரிய பிளஸ் பாயின்ட்டா இருக்கு. இங்கேதான் வெள்ளையா இருந்தா அழகு, சிகப்பா இருந்தா சிறப்புன்னுல்லாம் மூட நம்பிக்கை. சிகப்பா இருக்கிறவங்க நம்மளை சகிச்சிக்கிட்டு வாழுறாங்களாம்.

காமெடியா இருக்கு. இன்னைக்கு சர்வதேச அளவுலே டஸ்கி டோனைத்தான் எல்லாரும் விரும்புறாங்க. கொஞ்சம் கலர் கம்மியா இருந்தா அதுதான் ஃபேஷன் உலகில் பெரிய பிளஸ். சிகப்பா இருந்தா சினிமாவில் ஹீரோக்களோடு டூயட்தான் பாட முடியும். மாநிறமாவோ, கருப்பாவோ இருந்துட்டா டிஃபரண்டான கேரக்டர்களுக்கு நம்மை இயக்குநர்கள் யோசிக்கிறாங்க.

டஸ்கி குயீனுக்கு புடிச்ச குயீன் யாரு?

யாருன்னு ஒரு பேரை உடனே சொல்லிட முடியாது. ஆனா ராஜா ராணி படம் பார்த்ததுலே இருந்து நயன்தாரா என்னோட மனசுலே சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்டாங்க. ஒரு ஹீரோயினுக்கு இப்படிப்பட்ட ஸ்கோப் இருக்கிற கேரக்டர் கிடைக்கிறது ரொம்ப அரிதான விஷயம்.

8 தோட்டாக்கள்?

இந்தப் படத்தோட டைரக்டர் ரொம்ப சின்னப் பையன். அவர் கதை சொல்லும்போது கொஞ்சம் டெரர் ஆயிட்டேன். விவகாரமான கேரக்டரைச் சொல்லுறாரே, இதை எப்படி ஸ்க்ரீனில் ஹேண்டில் பண்ணப் போறாரு, ரசிகர்கள் நம்மை எப்படி ஏத்துப்பாங்கன்னுல்லாம் ரொம்ப தயக்கமா இருந்தது. இந்தக் கேரக்டரில் நடிச்சா, சினிமாவில் தொடர முடியுமான்னு பயமாவும் இருந்தது. அந்தக் கேரக்டரை நான் ஏத்துக்கணுமா, வேணாமான்னு எனக்குள்ளேயே கொஸ்டின் & ஆன்ஸர் செஷன் நடந்துச்சி. படத்துலே மொத்தம் எட்டு தோட்டா. அதுலே ரெண்டு எனக்காகத்தான் வெடிக்கும் என்பது மாதிரி ஸ்க்ரிப்ட். ஓக்கே. நமக்கு நிறைய முக்கியத்துவம் இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டு ஒத்துக்கிட்டேன்.

நடிக்க நடிக்க என் கேரக்டர் மேலே நானே இம்ப்ரஸ் ஆகிட்டேன். ஸ்க்ரீனில் என்னைப் பார்க்குறப்போ சாதிச்சிட்டே மீரான்னு நானே தட்டிக் கொடுத்துக்குற அளவுக்கு என் கேரக்டர் நல்லா எடுபட்டுச்சி.படம் ரிலீஸ் ஆனப்புறம் பாராட்டு மழையில் விடாம நனைஞ்சுக்கிட்டிருக்கேன். 8 தோட்டாக்கள் எனக்கு பிரமாதமான விசிட்டிங் கார்டு. அதையடுத்து நிறைய பேர் காண்டாக்ட் பண்ணிக்கிட்டிருக்காங்க. இப்போ கிரகணம் படத்தில் ஒரு சின்ன ரோல், அதுவும் டிஃபரண்டான ரோல்தான் பண்ணியிருக்கேன். இதுலே நான் நானாவே நடிச்சிருக்கேன். என்னோட ஒரிஜினல் ரோலே டிஃபரண்டான ரோல்தானே? படம் பார்த்துட்டு சொல்லுங்க.

நெக்ஸ்ட்?

ஒவ்வொரு அடியையும் நிறுத்தி ரொம்ப நிதானமா வைக்கிறேன். ரெகுலர் ஹீரோயினா ஃபாரின் லொகேஷனில் ரோட்டில் டான்ஸ் பண்றது பிடிக்கலை. ஹீரோயின்களோட நம்பர் கேம் ரேஸுலே ஓடுற இண்டரெஸ்டும் இல்லை. நந்திதாதாஸ், தபு மாதிரி நல்ல நடிகைன்னு பேரெடுக்கணும். அந்த இலக்கை நோக்கித்தான் பயணிச்சிக்கிட்டிருக்கேன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad