Type Here to Get Search Results !

கேள்வித்தாளில் பாரபட்சம் என மாணவி வழக்கு : நீட் தேர்வு முடிவு வெளியிட தடை



மதுரை : இந்தியா முழுவதும் மே 7ம் தேதி நடந்த மருத்துவ கல்லூரியில் சேருவதற்கான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கில், தேர்வு முடிவுகள் வெளியிடுவது உள்ளிட்ட மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 7ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்திலும் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்ட வினாக்கள், தமிழுக்கு வேறு கேள்வி, ஆங்கிலத்துக்கு வேறு கேள்வி என பாரபட்சமான முறையில் கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து சோதனை என கடுமையான கெடுபிடிகளும் நடந்தது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு தடைகோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதுபற்றிய விவரம் வருமாறு: திருச்சி, பிச்சாண்டவர் கோயில் கிருஷ்ணா நகரை சேர்ந்த சக்தி மலர்க்கொடி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக, அகில இந்திய அளவில் நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்துவது என மத்திய அரசு முடிவு செய்தது. இந்த முடிவின்படி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட ெமாழிகளில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கும். அகில இந்திய அளவிலான இந்த தேர்வு மே 7ல் நடந்தது. இந்த தேர்வு மொழிவாரியாக நடத்தப்பட்டிருந்தாலும், ஒரே மாதிரியான கேள்விகளைக் கொண்ட வினாத்தாள்களையே வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால் அப்படி வழங்குவதற்கு பதிலாக மாநிலத்திற்கு, மாநிலம் ேவறுபட்டு வெவ்வேறான வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில் சுலபமாகவும், சில மாநிலங்களில் கடினமான முறையிலும் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. மாநிலத்திற்கு மாநிலம் பாரபட்சம் காட்டும் வகையில் வினாத்தாள்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

இதனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பலரது வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மே 7ல் நடந்த நீட் தேர்வு சட்ட விரோதம் என அறிவித்து ரத்து செய்யவேண்டும். ஜூன் 8ல் வெளியிடவுள்ள தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்கவேண்டும். அகில இந்திய அளவில் ஒரே மாதிரியான வினாக்களைக் கொண்டு மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல் மதுரையை சேர்ந்த ஜோனிலா உள்ளிட்ட 9 பேர் ஏற்கனவே தாக்கல் செய்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த மனுக்களும் சேர்த்து, நீதிபதி எம்.வி.முரளிதரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, ‘விதிப்படி ஒரே மாதிரியான கேள்விகளை கொண்ட வினாத்தாள்களே வழங்கவேண்டும். வெவ்ேவறு மாதிரியான வினாக்கள் கேட்கப்பட்டதன் மூலம் விதிகள் மீறப்பட்டுள்ளன.
வாய்ப்பு மறுக்கப்படும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதால், நடத்தப்பட்ட தேர்வு சட்ட விரோதம். எனவே, இந்த தேர்வை செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என்றனர்.

இதையடுத்து நீதிபதி எம்.வி.முரளிதரன், ‘‘நீட் தேர்வுகள் முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடுவது உள்ளிட்ட, நீட் தேர்வு தொடர்பாக எந்தவிதமான மேல் நடவடிக்கைகளும் மேற்கொள்ள ஜூன் 7 வரை இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அன்றைய தினம் மத்திய சுகாதாரத்துறை செயலர், மத்திய மருத்துவப் பணிகளுக்கான தலைமை இயக்குநர், இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர், மத்திய மேல்நிலை கல்வி வாரிய தலைவர், தமிழக சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்டோர் பதில் மனுதாக்கல் செய்யவேண்டும்,’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 7க்கு தள்ளி வைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad