Type Here to Get Search Results !

நீங்க ஸ்ட்ரீட் கிரிக்கெட் வெறியனா? அப்போ கண்டிப்பா இதைப் படிங்க!

சிறு வயதில் நாம் அனைவரும் கிரிக்கெட் விளையாடி இருப்போம். ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் ஐ.சி.சி விதிமுறைகளை மிஞ்சும் அளவுக்கு எக்கச் சக்க விதிமுறைகளைப் போட்டு கலாட்டா செய்திருப்போம். அங்கு நடக்கும் அட்ராசிட்டிகளைச் சொல்லவா?

ஸ்ட்ரீட் கிரிக்கெட்


* ஒரு அணிக்கு 11 பேர் என்ற `ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்' எல்லாம் `ஸ்ட்ரீட் கிரிக்கெட் ரூல்ஸ்'-ல் இல்லை. ஏரியாவில் விளையாடும்போது மொத்தம் எத்தனைப் பேர் வருவார்கள் என்று சொல்ல முடியாது. விளையாட வருபவர்களைச் சரி பாதியாகப் பிரித்து விளையாடுவதுதான் வழக்கம். இரண்டு பக்கமும் ஆள் எடுத்ததுக்குப் பிறகும் ஒரு நபர் மட்டும் கூடுதலாக இருந்தால், அவனை காமன்மேனாக விளையாட வைக்கும் கலாசாரத்தை நாம்தான் தொடங்கிவைத்தோம். காமன்மேனா இருக்கிறதுல என்ன பிரச்னைன்னா... அவனுக்கு பேட்டிங் மட்டும்தான் கிடைக்கும். பெளலிங் போட பந்தைத் தொடவே முடியாது. மற்றவர்கள் இரக்கப்பட்டால் விக்கெட் கீப்பராகி, பந்தைத் தொடும் பாக்கியம் கிடைக்கும். காமன்மேன் கடைசியாகத்தான் பேட்டிங் பிடிக்க வேண்டுமென்பது எழுதப்படாத `விதி' பாஸ். ஆனால், நான் ரெண்டு டீம்லயும் ஓப்பனிங் பேட்ஸ்மேனா நின்னு போங்கு பண்ணி இருக்கேனே!

* விளையாடவே ஆள் வராதபோது, அம்பயருக்கு எங்கே போறது? பேட்டிங் பிடிக்கும் டீமிலிருந்து யாராவது ஒரு ஆள் அம்பயராக நிற்க வேண்டும். அதற்கும் நம்ம பசங்க ஒரு ட்விஸ்ட் வெச்சாங்க. ஓப்பனிங் பேட்ஸ்மேன்ஸ் யாராவது அவுட்டானால் அடுத்து பேட்டிங் பிடிக்கப்போகும் நபர்தான் அம்பயராக நிற்க வேண்டும். பேட்டிங் பிடிக்க வேண்டுமென்ற நப்பாசையில், அம்பயராக நிற்கும் நம்ம டீம் ஆளே சீக்கிரம் விக்கெட் விழ வேண்டுமென்று எல்லாக் கடவுள்களிடமும் வேண்டிக்கொண்டிருப்பான். நான்லாம் எல்.பி.டபிள்யூலாம் கொடுப்பேனே! வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கள்களா!

* ஒருவன் பேட்டிங்கிலும், பெளலிங்கிலும் சகலகலா வல்லவனாக இருப்பான். அப்படி இருப்பவன் நிலைமை ரொம்பப் பாவம். ஏன்னா... ஓப்பனிங் பேட்ஸ்மேனா கெத்து காட்டிட்டு, பெளலிங் போடவந்தா பெரிய கலவரமே வெடிக்கும். `பேட்டிங் புடிச்சான்ல... ஓப்பனிங் பெளலிங் போடக்கூடாது' என்று நம்ம டீமிலிருந்தே சண்டைக்கு ஆள் கிளம்பி வருவார்கள். நான்லாம்  ஓவருக்கு 12 பால் போட்டிருக்கேனே!

ஸ்ட்ரீட் கிரிக்கெட்

* டி.வி-யில் கிரிக்கெட் மேட்ச் நடந்தால், ரீ-ப்ளே போட்டுப்பார்த்து அதை அவுட்டா, இல்லையா என்று முடிவுக்கு வருவார்கள். ஆனால் இதெல்லாம் தெருவில் விளையாடும்போது சாத்தியமில்லை. அதற்குப் பதிலாக ரீ-ப்ளேவை விட மிகக் கொடூரமான `மெத்தட்' ஒன்று இருக்கிறது. அதுதான் `அம்மா சத்தியம்'. பொதுவாக இந்த மாதிரியான க்ளைம், ரன் அவுட்டுகளின் போதுதான் அதிகம் நடக்கும். அது அவுட்டா இல்லையான்னு பேட்ஸ்மேனுக்கு மட்டும்தான் தெரியும். பேட்ஸ்மேன்கிட்டேயே `டேய் அம்மா சத்தியம் பண்ணு, இது அவுட் தானே?' எனக் கேட்டு முடிவை அறிவிக்கும் சாமர்த்தியம் உலகத்துலயே கிடையாது. நான்லாம் அழுதுடுவேனே!

* கிரிக்கெட்டை கிடைக்கும் சந்து பொந்தில் எல்லாம் விளையாடுவோம். அப்படி இடப்பற்றாக்குறையான இடத்தில் விளையாடும்போது `ஒன் பிட்ச் கேட்ச்' என்ற முத்தான ரூல்ஸைக் கொண்டு வருவோம். அதாவது பேட்ஸ்மேன் அடித்துப் பின்னர் அந்தப் பந்தை ஒருமுறை தரையில் குத்தவிட்டுப் பிடித்தாலும் பேட்ஸ்மேன் பெவிலியன் திரும்ப வேண்டும். தூக்கி அடிச்சி அவுட் ஆவேனே!

* ஸ்டம்பை வைத்து விளையாடுவதில் சிக்கல் இருக்கிறது. அதனால் சுவரில் கரியால் மூன்று கோட்டை வரைந்து ஸ்டம்ப் உருவாக்கி, விளையாடிக்கொண்டிருப்போம். போல்டாகி விக்கெட் விழுந்தால், `இதோ பார்... பந்துல கரியோட அச்சு இருக்கு. இது அவுட்தான்' என்ற வாக்குவாதங்களெல்லாம் செம ஜாலியாக நடக்கும். நான் எச்சி தொட்டு அழிச்சிடுவேனே!

* விளையாடும் இடத்தைச் சுற்றிலும் வீடுகளாகத்தான் இருக்கும். விளையாடும் சமயத்தில் யாராவது பந்தை வீட்டுக்குள் அடித்துவிட்டால், அவனேதான் அந்த வீட்டில் இருப்பவர்களிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடி பந்தை வாங்கி வர வேண்டும். அப்படி இல்லையென்றால், பேட்ஸ்மேன்தான் புது பந்து வாங்கித் தர வேண்டும். எதற்கும் சரிவரவில்லையென்றால் பந்தை அடிச்சவனை அடுத்த மேட்ச்ல ஊரைவிட்டு ஒதுக்கி வெச்சிருவாங்க. சும்மா தொங்கிட்டு இருந்த பல்பை உடைச்சிருக்கேனே!

ஸ்ட்ரீட் கிரிக்கெட்


* இந்த அட்ராசிட்டியானது மிக அதிக அளவில் நடக்கும். ஒரு ஓவர் முழுக்க தானே ஆட வேண்டும் என்ற `நல்லெண்ணம்' கொண்ட ஆள், ஐந்து பந்தையும் ஆடி முடித்துவிட்டு கடைசி பந்தில் சிங்கிள்ஸ் அடித்து ஸ்ட்ரைக்கை மாற்றிவிட ஓடி வருவான். ஆனால் நம்ம பசங்கதான் தெளிவாச்சே! `சிங்கிள் வேணாம் மச்சான்'னு சொல்லி நின்றுவிடுவான். அது ஆட்டத்தின் எவ்வளவு முக்கியமான ரன்னாக இருந்தாலும் சரி. நம்ம பய ஒரு இன்ச் நகர மாட்டான். பலவாட்டி பண்ணி இருக்கேனே!

* டாஸ் போட்டு ஆட்டத்தை ஆரம்பிப்பது வழக்கம். ஆனால், அப்போது ஒருவரிடமும் ஒரு ரூபாய்கூட இருக்காது. அப்படியே இருந்தாலும் எங்கே டாஸ் போடும்போது ஆட்டையைப் போட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் வெளியில் எடுக்காமல் கள்ள மெளனம் சாதிப்பார்கள் சிலர். அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் இந்த முறை பயன்படுத்தப்படும். கட்டை விரலுக்கும் கைக்கும் நடுவில் ஒரு சிறிய கல்லை வைத்து இன் ஆர் அவுட் என்று கேட்பதும், சிறிய கல்லில் எச்சில் துப்பி டாஸ் போடுவது தமிழ்நாட்டு கலாசாரம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad