புதுமுகங்களை வைத்துப் படமெடுத்தால் கிண்டல் பண்றாங்க : இயக்குனர் கண்ணீர்
முன்னோடி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் அர்ஜுனா, வினு கிருத்திக், நிரஞ்சன், யாமினி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ்.பி.டி.ஏ.குமார் பேசும்போது கண்கலங்கினார். அவர் பேசியதாவது: சினிமா இயக்கம் பற்றி தெரியாது. ஆனால், படம் இயக்க ஆசைப்பட்டேன். 18 வருடங்கள் போராடிய பிறகு சினிமா இயக்க வாய்ப்பு கிடைத்தது. நானே சம்பாதித்த பணத்தில் முன்னோடி படத்தை உருவாக்கியுள்ளேன்.
இந்தப் படத்துக்கு இரண்டு வருடங்கள் கஷ்டப்பட்டேன். என் கஷ்ட, நஷ்டங்களை குடும்பத்தினர் பொறுத்துக் கொண்டார்கள். அவர்களின் கவலை, நான் சினிமாவுக்கு வந்து சிரமப்படக்கூடாது என்பதுதான். இவ்வளவு கஷ்டப்பட்டு ரத்தமும் சதையுமாக படத்தை உருவாக்கி வளர்த்திருக்கிறோம். ஆனால், அதைப் பார்க்க யாரும் தயாராக இல்லை.
தியேட்டரில் திரையிட்டால், பத்து பேராவது படம் பார்க்க வருவார்களா என்று ஏளனம் செய்கிறார்கள். ஒவ்வொருவரும் நெஞ்சில் குத்துகிறார்கள். படம் நன்றாக இருந்தாலும், அதைப் பார்க்க யாரும் வர மாட்டார்கள் என்று கேவலமாகப் பேசுகிறார்கள். புதுமுகங்களை வைத்துப் படமெடுத்தால், கடலில் குதித்து சாக வேண்டுமா? இவ்வாறு ஆவேசமாகப் பேசிய அவர், சில விநாடிகள் எதுவும் பேச முடியாமல் கண் கலங்கினார்.