பேப்பர் மில்களில் உற்பத்தி முடக்கம் நோட்டு, புத்தகம் விலை கடும் உயர்வு: பெற்றோர்கள் புலம்பல்
கடும் வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டால், பேப்பர் மில்களில் பல யூனிட்டுகளில் உற்பத்தி முடங்கி உள்ளது. இதனால் நோட்டு-புத்தகங்கள் கடந்த ஆண்டை விட, இவ்வாண்டு 20 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால், மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் புலம்பி தவிக்கின்றனர். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் பள்ளி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது கோடை விடுமுறை முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. வரும் ஜூன் மாதம் முதல்வாரம் இறுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் இப்போதிருந்த பள்ளிகளில் அட்மிஷன் துவங்கி, நடந்து வருகிறது. அரசால் வழங்கப்படும் இலவச நோட்டு, புத்தகங்கள் ஒரு புறம் இருந்தாலும், அசைன்மெண்ட் நோட்டுகள், பிராட்டிக்கல் நோட்டுகள், கட்டுரை நோட்டுகள், “ரப்” நோட்டு என தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தீவிர வசூலில் இறங்கி விட்டன.
இதற்காக தனியாக ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் முன்கூட்டியே பணம் கட்ட வேண்டும். பின்னர் அவர்கள் குறிப்பிடும் நாளில் பள்ளிக்கு வந்து ரசீதை கொடுத்து நோட்டு, புத்தகங்களை வாங்க வேண்டும். இதன் காரணமாக பள்ளிகளில் பெற்றோர், மாணவர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால், மதுரை பஜாரில் நோட்டு, புத்தங்கள் இப்போதிருந்தே கூட்டம் அலை மோதுகிறது. தற்போது கடந்த ஆண்டை விட, இவ்வாண்டு 20 சதவீதம் வரை நோட்டு, புத்தகங்கள், கைடுகள் விலை அதிகரித்துள்ளது.இதுகுறித்து புதுமண்டபம் புக் சென்டர் வைத்திருக்கும் சதீஷ் கூறுகையில்,‘‘கடும் வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பேப்பர் மில்களில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட, இவ்வாண்டு மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இதனால் நோட்டு, புத்தகங்கள், கைடு விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது‘‘ என்றார். நோட்டு வியாபாரி ஜெயராம் கூறுகையில்,‘‘பேப்பர் உற்பத்திக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும். எனவே உடுமலைப்பேட்டை, பொள்ளாட்சி, மேட்டுப்பாளையம், ஈரோடு மாவட்டம் பவானி, நெல்லை போன்ற தண்ணீர் பிரச்னை இல்லாத இடங்களில் தான் பேப்பர் மில்கள் உள்ளன. இவ்வாண்டு கடும் வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 யூனிட்டுகள் இயங்கி வந்த பேப்பர் மில்களில் ஒரு யூனிட் மட்டுமே இயங்குகிறது. பேப்பர் மில்களில் முக்கால்வாசிக்கும் மேல் யூனிட்டுகள் இயங்காமல் உள்ளன. மேலும் மூலப்பொருட்களும் விலை உயர்ந்துள்ளது.
இதனால் இப்போது 20 சதவீதம் வரை நோட்டு, புத்தகங்கள், கைடுகள் விலை உயர்ந்துள்ளது’’ என்றார்.பெற்றோர்கள் முன்கூட்டியே நோட்டு, புத்தகங்களை வாங்க வேண்டியது உள்ளது. தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் முன்கூட்டியே நோட்டு, புத்தகத்திற்கு பணம் கட்டி விட்டனர்.
ஒவ்வொரு பள்ளியிலும் கடந்த ஆண்டை விட, இவ்வாண்டு அதிக பணம் வாங்கி உள்ளனர். இதனால் பெற்றோர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.
விலை உயர்வு எவ்வளவு?
ஒரு குயர் கிங் சைஸ் “ஏ” கிரேடு ரூ.30 (கடந்த ஆண்டு). இவ்வாண்டு ரூ.40 முதல் ரூ.45. ஒரு குயர் கிங் சைஸ் “பி” கிரேடு ரூ.25 (கடந்தாண்டு). இவ்வாண்டு ரூ.32. “ஏ” கிரேடு ேநாட்டுகள் கரூர், பவானியில் இருந்தும், “பி” கிரேடு நோட்டுகள் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வருகின்றன.