சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி




சென்னை:

சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் உஸ்மான் சாலை, பனங்கல்பார்க் பகுதிகளில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இன்று அதிகாலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 4 மணி நேரம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும், அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

ஏனெனில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று தீயை அணைக்க மிகவும் சிரமமாக உள்ளது. அதாவது சென்னை சில்க்ஸ் கடையின் அடித்தளத்தில் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது. தீயை அணைப்பதற்கு 7க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வந்துள்ளன. மேலும் தண்ணீர் வாகனமும், ஸ்கை லிஃப்டும் இந்த பகுதிக்கு வந்துள்ளது. மொத்தம் 72 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் புகை முதலில் வெளியேற்றும் நடவடிக்கையில் முதல் கட்டமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதாவது புகையை வெளியேற்றுவதற்காக புகை உறுஞ்சும் வண்டிகளும், ரசாயன தண்ணீர் முறைகளை பயன்படுத்தி புகையை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் உள்ளே இருக்கக்கூடிய பொருட்கள் வெடித்து வெளியே தீப்பொறிகள் வருகிறது. இந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்ல காவல்துறையினர் தடுத்துள்ளனர், வாகனங்கள் அனைத்தும் மேம்பாலம் வழியாக மட்டுமே செல்கின்றது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url