ஆசைக்கு இணங்காத நடிகைகள் நீக்கப்படுகிறார்கள்: லட்சுமிராய் காட்டம்
ஆசைக்கு உடன்படாத நடிகைகள் படங்களிலிருந்து நீக்கப்படுகிறார்கள் என்று புகார் கூறி உள்ளார் லட்சுமிராய். இதுபற்றி அவர் கூறியது: தமிழில் நிறைய படங்களில் வாய்ப்பு வந்தாலும் கதாபாத்திரம் வலுவாக இல்லாததால் ஏற்பதில்லை. தற்போது, ‘யார்’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். கடந்த ஒன்றரை வருடமாக இந்தியில் ஜூலி 2ம் பாகம் படத்தில் நடித்து வந்தேன். நான் நிறைய சாப்பிடுவேன். இந்த கதாபாத்திரத்துக்காக உணவுக்கட்டுப்பாடு இருந்து 11 கிலோ குறைத்தேன். பிறகு 17 கிலோ உடல் எடை ஏற்றினேன். போட்டோ ஷூட் எடுப்பதற்காக மீண்டும் 8 கிலோ எடை குறைத்தேன். ஒரே வேடத்துக்காக இத்தனை மாற்றங்களுக்கு உட்பட்டதால் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டேன். இதனால் யாரை கண்டாலும் எதைப்பார்த்தாலும் எரிச்சலாக வந்தது. எனது பெற்றோரும் நண்பர்களும் என்னை இந்த பாதிப்பிலிருந்து வெளிக்கொண்டு வந்தார்கள்.
திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதற்காக சிலர் தங்களை படுக்கைக்கு அழைப்பதாக சில நடிகைகள் கூறுவதுபற்றி கேட்கிறார்கள். அதுபோன்ற பிரச்னையை நான் சந்தித்ததில்லை. புதிதாக வருபவர்கள் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். திரையுலகுக்கு வரும் சிலர் அதை சூதாட்டமாக கருதுவதும், ஜாலியாக பொழுதுபோக்க வருவதும்தான் இதுபோன்ற பிரச்னைக்கு காரணம். ஒரு சிலர், பிரபல நடிகைகளிடமே இதுபோல் அணுகுவதால் அவர்கள் அதனை வெளிப்படையாக பேசுகிறார்கள். ஆசைக்கு உடன்படாவிட்டால் அந்த நடிகை படத்திலிருந்து தூக்கி எறியப்படுவது பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். இவ்வாறு லட்சுமிராய் கூறினார்.