மனித இறைச்சி சமைத்ததாக புகார் இந்திய ஓட்டல் மீது இங்கிலாந்தில் தாக்குதல்
லண்டன்: இங்கிலாந்தில் மனிதக்கறி சமைத்ததாக செய்தி பரவியதை அடுத்து இந்திய ஓட்டல் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த ஓட்டல் மூடப்பட்டது. இங்கிலாந்தின் கிழக்கு லண்டன் பகுதியில் ஷின்ரா பேகம் என்பவர் கறிட்விஸ்ட் என்ற பெயரில் இந்திய ஓட்டல் நடத்தி வந்தார். இந்நிலையில் குறும்பு செய்திகள் வெளியிடும் வெப்சைட் ஒன்றில் கறி ட்விஸ்ட் இந்திய உணவகத்தில் மனித இறைச்சி பரிமாறப்பட்டதாகவும், இது தொடர்பாக உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது.
மேலும் கறி சமைப்பதற்காக 9 மனித உடல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக இந்த செய்தி வைரலாக பரவியது. இதனால் ஆத்திரமடைந்த சில வாடிக்கையாளர்கள் உணவகம் முன்பு திரண்டதோடு, ஓட்டலில் புகுந்து பொருட்களை அடித்து உடைத்தனர். விசாரணையில் அந்த தகவல் பொய்யான தகவல் என்பது தெரியவந்தது. உணவக உரிமையாளர் ஷின்ரா பேகம் கூறுகையில், 'யாரோ இதுபோன்று தவறாக எழுதியதால் எனது கடை மூடப்பட்டு விட்டது' என்றார்.