Type Here to Get Search Results !

அரிசிக்கு அவப்பெயர் ஏன்?





நம் உணவுக்கு ஆதாரமாக இருக்கிற அரிசியை எப்படிச் சுவையாகவும், சத்துகள் கெடாமலும் சமைத்து உண்பது என்று விரிவாகப் பார்த்தோம். ஆனால் அந்த அரிசி நெல்லில் இருந்து பிரிக்கப்படுவதில் மட்டுமல்ல; விளைவிக்கும் முறையிலும் சத்தும் சாரமும் இழந்துவிட்டது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நமது பாரம்பரிய நெல் வகைகளான மாப்பிள்ளைச் சம்பா, கிச்சிலிச் சம்பா, கார், பூங்கார், புழுதிக் கார், கவுனி, யானைக் கவுனி என்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருந்துள்ளன. சுமார் முப்பதாண்டு முயற்சியில் 600 ரகங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. அவற்றைக் காக்கவும், மேலெடுத்துச் செல்லவும் ஒரு ஜீவ மரணப் போராட்டம் நடந்துகொண்டுள்ளது.

மண்ணின் பெருமை

நெற்பயிர், கதிர் வரைக்கும் நீரில் மூழ்கி இருந்தாலும் அழுகிவிடாமல் பத்திரமாக நெல்லின் மணியை மட்டும் நமக்கு அளித்து மடிந்து போகும் `மடை மழுங்கி’யில் இருந்து இன்றைய வறட்சியையும் தாங்கி விளையும் பக்குவம் உடைய புழுதிக் கார் வரைக்கும் இருவேறு உச்சங்களைத் தொடும் நெல் வகைகளை இம்மண் விளைய வைத்தது.

பல்வேறு தன்மைகளைக் கொண்ட நெல் வகைகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ‘மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானைக் கட்டிப் போரடித்து’ நெல் மணியை மலைமலையாகக் குவித்தவர் நம் முன்னோர். அத்தனைப் பெருமை மிகுந்த நம் விவசாயிகள் இன்றோ, தேசத்தின் தலைநகரில் நிர்வாணப் போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

காரணம், பசுமைப் புரட்சி. அள்ளி வழங்கிய இந்நிலமெனும் நல்லாளை, பசுமைப் புரட்சி அடித்துத் துவைத்ததுபோல உப்பு பரிந்த கருவாடாக மாற்றிவிட்டது. ஐம்பதாண்டுகளுக்கு முன் பணத்தை வாரி இறைத்து, நவீனம் என்ற பெயரில் விவசாயிகளின் தலையில் பசுமைப் புரட்சி கட்டப்பட்டது. இந்தப் பசுமைப் புரட்சி வீரிய மகசூல் என்ற பெயரில் மண்ணின் மைந்தர்களுக்குப் பேராசையை ஊட்டி நிலத்தைப் பறித்துக் கொண்டது.

ஈரத்தைப் பாதுகாத்த விவசாயி

பசுமைப் புரட்சி நமது மண்ணிலும் தலையிலும் திணிக்கப்படுவதற்கு முன் வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேளாண்மையை நம் உழவர்கள் உயிர்க் கடமையாக, வாழ்வியல் கலாசாரமாகப் பேணி வந்தனர். ஆனால், கடந்த நூற்றாண்டில் வேளாண்மையில் காசு பார்த்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுவிட்டாலும் இன்றும்கூட, பயிர் செய்யும் நிலத்திலும், மணி திரட்டும் களத்திலும் செருப்புக் காலுடன் அவர்கள் இறங்க மாட்டார் கள். நிலத்தைத் தாய்க்கும் மேலாகத் தெய்வமெனப் போற்றினார்கள்.

ஏக்கருக்கு எத்தனை மூட்டை கட்டி அடித்தான் என்பது அல்ல, எவ்வளவு ஈரமாகத் தன் நிலத்தை வைத்திருக்கிறான் என்பதே ஒரு விவசாயிக்குரிய கவுரவமாக இருந்த காலம் நம் கண்ணெதிரிலேயே களவாடப்பட்டு விட்டது.

இழந்த உயிர்ப்பு

ஒரு பட்டத்து அறுப்பு எடுத்து, முதலில் வண்டி பூட்டுவார். ஒரு மகசூல் பருத்தி பறித்து மகளுக்குக் கொலுசு பூட்டுவார். மிளகாயைக் கிள்ளி, குன்றி மணி நகை சேர்ப்பார். சிறுகச் சிறுகச் சேர்த்தாலும் பெருகக் கட்டி வாழ்ந்தவர் நம்மூர் விவசாயி. சொட்டு நீர்ப்பாசனம் என்பது அவரது கற்பனைக்கும் எட்டாத தொலைவில் நின்றது.

மண்வெட்டி கொண்டு வெட்டி போட்ட மண்ணில் புழு கொத்துவதற்கு மைனா அவர் பின்னால் நிற்கும். ஏர் பிடித்தால் ஈர மண்ணில் நெளியும் உயிர்களுக்காகக் காத்திருக்கும் வெள்ளைக் கொக்குகள். தார்ப்பாய்ச்சி வேட்டியை ஏற்றிக் கட்டிய விவசாயியின் முட்டி வரைக்கும் சேறு அப்பிய காலம் போய், அவரது பாத ஈரத்தையும் உறிஞ்சி பித்த வெடிப்பாக மாற்றி இருக்கிறது இம்மண். அது உயிர்ப்பு இழந்து உப்பு பூத்திருக்கிறது.

பசுமைப் புரட்சி, இம்மண்ணின் வளத்தை மட்டும் திருடவில்லை. கூட்டுச் சமூகமாக இருந்த நமது மனங்களைச் சிதைத்ததோடு, ஆயிரமாண்டுக் கலாசாரக் கண்ணியையும் அறுத்தெறிந்து விட்டது. நமது நிலம் இத்தனை சீரழிவுக்குள்ளாகி விட்ட பின்னர் இந்நிலத்தில் விளையும் நெல்லும், நெல்லுக்குள் உறங்கும் அரிசியும் மட்டும் எப்படி உயிருடன் இருக்க முடியும்?

அரிசியை வடித்தால் மனதைக் கிறங்கச் செய்யும் சோற்றின் வாசத்துக்கு மாறாக யூரியா நெடி மூக்கை அரிக்கிறது. சோற்றின் நெடியே மூக்கை அரிக்கிறபோது, முப்பொழுதும் உண்ணும் அரிசி எப்படி நம் உடலுக்கு நன்மை செய்யும்?

பசுமைப் புரட்சியின் விளைவு

பசுமைப் புரட்சியின் வாயிலாக இம்மண்ணில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் யூரியாவும், இன்னபிற வேதி கூறுகளும் அரிசியின் வடிவத்தில் நமக்குள்ளே ஊடுருவி நமது உடலை வெகுவாகச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. இச்சிதைவே நோய்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

காலையில் பிதுக்கும் பற்பசையில் தொடங்கி, சாய்க்கும் தலைக்கு அண்டக் கொடுக்கிற தலையணை வரைக்கும் அத்தனையும் வேதி மயம். இத்தனை கேடுகளுக்குப் பின்னரும் நாம் இந்த அளவுக்காவது உடல்நலத்துடன் இருப்பது, முன்னோர் செய்த நற்பேறு என்றே கருத வேண்டியுள்ளது. இதனினும் பெரும்பேறு, புதிய தலைமுறை நவீன மயக்கத்தில் முழுமையாக ஆழ்ந்து போகாமல், பாரம்பரியத்தை மீட்கத் துணை நிற்பது.

ரசாயன உரம் போடாத அரிசியை உண்ணத் தொடங்கினால், நம் உடல் நலம் மேம்படும் என்ற உடனடி விளைவுடன் நமது நில வளமும் மேம்படும். இதுவொரு தொடர் நிகழ்வு.

அரிசிக்கு மாற்று?

தானும் கெட்டு நம் உடலையும் கெடுத்துக்கொண்டிருக்கும் அரிசிக்கு மாற்றாகச் சிறு தானியங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனாலும் சந்தையில் அரிசிக்கு அடுத்த இடத்தைப் பிடித்துக்கொண்டிருப்பது கோதுமையே. இங்கே கோதுமை வயலைப் பார்த்தவர்கள் யார்? கையை உயர்த்துங்கள் பார்ப்போம். ஏது? ஒரு கையும் உயரவில்லையே.

கோதுமைத் தானியத்தைப் பார்ப்பதே அருகிக்கொண்டிருக்கும் நிலையில் கோதுமை வயலை எங்கே பார்ப்பது? உடல் நலம் என்றதும் சோற்றுக்குப் பதிலாகச் சப்பாத்தியிடம் தஞ்சம் அடைகிறோமே, அது சரிதானா? கோதுமையை எந்த வடிவத்தில் சேர்ப்பது? நாவுக்குச் சுவையாகவும், உடலுக்கு நலம் தரும் வகையிலும் சமைப்பது எப்படி?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad